பதிவுகள்
Home / அரசியல் / விடுதலைச் சிறுத்தைகளின் தொலைக்காட்சி – ‘வெளிச்சம்’

விடுதலைச் சிறுத்தைகளின் தொலைக்காட்சி – ‘வெளிச்சம்’

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் தேமுதிகவைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.
 
‘வெளிச்சம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகள் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
 
24 மணி நேரமும் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளில், ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் செய்திகள் இடம் பெறும்.
 
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில், ஊடகங்களில் ஒரு சமநிலை இல்லை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகளின் எண்ணங்களை யாருமே பிரதிபலிப்பதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கூறினார்.
 
புதிய தொலைக்காட்சிக்கான முயற்சி கடந்த 2012 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது பிறந்த நாளுக்காக வேறு எந்த வெகுமதியையும் வாங்காமல் தங்க நாணயங்களாகத் தருமாறு தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.
 
ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கும் நோக்கிலேயே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
 
தற்போதைய நிலையில் தொலைக்காட்சியைத் தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கும் என ரவிக்குமார் கூறினார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டாலும், நடுநிலையோடு செயல்படும் என்றார் ரவிக்குமார்.
 
தமிழகத்தில் முதல் முறையாகத் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியான சன் டிவி, திமுகவின் ஆதரவு குரலாக உள்ளது.
 
இதேபோலக் காங்கிரஸ் பிரமுகர்கள் வசந்தகுமார் சார்பில் வசந்த் டிவியும், கே.வீ.தங்கபாலு சார்பில் மெகா டிவியும் இயங்கி வருகிறது. காங்கிரஸ் தொடர்பான செய்திகள் இத்தொலைக்காட்சிகளில் இடம்பெறுகின்றன.
 
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் தொலைக்காட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேப்டன் டிவியும் இயங்கி வருகின்றன.

About idealvision

Check Also

கொஞ்சம் சில நொடிகள் அந்த தருணம் தப்பியிருந்தால்

தனது மனைவி குழந்தையுடன் முதல் பயணம் மேற்கொண்ட ஒவ்வொருவரும் இதுபோன்ற ஒரு செல்பி எடுத்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு செல்பிதான் துபாயிலிருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *