பதிவுகள்
Home / அரசியல் / கடன் வெள்ளத்தில் தவிக்கும் தமிழகம்

கடன் வெள்ளத்தில் தவிக்கும் தமிழகம்

தமிழக அரசின் மொத்தக் கடன் நிலுவை 2017 மார்ச் மாத முடிவில் ரூ.2,47,031 கோடியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது மிக அதிகமான கடன் அளவு என்று எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பின. ஆனால், அரசின் கடன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசு சாதித்தது.

‘தமிழக நிதி நிலை பொறுப்புச் சட்டம் 2003’-ன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசின் மொத்தக் கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25%க்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை இந்த வரையறையை மீறவில்லைதான். மாநிலத்தின் மொத்த உற்பத்தி அளவில் 20% ஆகத் தற்போது தமிழக அரசின் கடன் இருக்கிறது. ஆனால், அரசு நிறுவனங்களின் கடன் அளவும், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கடன் அளவும் அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவது கவலை தருகிறது.

நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலை மத்திய, மாநில அரசுகளை நம்பியே உள்ளது. நகர உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் சொந்த வரி வருவாயிலிருந்துதான் தங்கள் செலவுகளில் 5௦%-க்கும் மேற்பட்டவற்றைச் செய்கின்றன. அதற்கும் மேலான செலவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்திருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் வரி வருவாயில் பங்கு, கொடை, சில குறிப்பிட்ட திட்டச் செலவுகளுக்கான கொடை என்று பலவற்றைத் தருகின்றன. அவை அனைத்தும் போதாமல் இந்த நகராட்சிகள் கடன் வாங்கத் தொடங்கியுள்ளன.

தமிழக அரசு தனது கடன் சுமையைக் குறைத்து, நகராட்சிகளுக்குக் கூடுதல் நிதியைத் தரவில்லை என்றால், அவை கடன் வாங்குவதைத் தவிர வேறுவழி இல்லை. நகராட்சிகளின் கடனுக்கு அந்தந்த நகராட்சிகளே காரணம் என்று சொல்லலாம். ஆனாலும், நகராட்சிகளை அரசியல், நிதியியல், நிர்வாக ரீதியாகக் கட்டுப்படுத்துகிற மாநில அரசுக்கு, நகராட்சிகளின் நிதி நிலையை உயர்த்தி, கடன் அளவைக் குறைக்கும் பொறுப்பு உள்ளது என்பதை மறந்துவிடலாகாது.

தமிழக அரசு, அதனைச் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் கடன் வாங்கும்போது அதற்கு உத்தரவாதம் அளிக்கும். ‘தமிழக நிதி நிலை பொறுப்புச் சட்டம் 2003’-ன் படி மாநில அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன் தொகையின் அளவு எப்போதும் மாநில அரசின் மொத்த நிதி வருவாயை மீறக் கூடாது என்ற வரையறை உள்ளது. அவ்வாறு 2014-15 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்பட்ட மொத்த கடன் தொகை 2013-14 ஆண்டின் மொத்த நிதி வருவாயில் 49.70% தான் என்றது இடைக்கால நிதி நிலை அறிக்கை.

2013-14-ல் தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.1,08,036 கோடி. அதில் உறுதி அளிக்கப்பட்ட கடன் அளவு 49.07%. அப்படியானால் 2014-15-ல் அரசு நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடன் அளவு ரூ.53,694 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசு நிறுவனங்களின் மொத்தக் கடன் நிலுவை 2012-13-லேயே ரூ.62,044.08 கோடியானது. இந்தத் தொகை 2013-14-ல் ரூ.77,285.51 கோடியாக மேலும் உயர்ந்துள்ளது. எனவே, அரசு உத்தரவாதம் அளிக்காத கடனையும் அரசு நிறுவனங்கள் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

நகராட்சி, உள்ளாட்சிகளின் கடன், அரசு நிறுவனங்களின் கடன் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தமிழக அரசின் கடனாக நாம் எடுத்துக்கொண்டால், அரசின் மொத்தக் கடன் நிலுவை 2015-16-ல் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும்.

இது தமிழக அரசின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு. பெருகும் இந்தக் கடனை எப்படிக் குறைப்பது, நகர உள்ளாட்சிகளின் கடனை எவ்வாறு சீரமைப்பது, மின்சார நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் கடனை எவ்வாறு குறைப்பது என்று தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்!

  • தமிழ் ஹிந்து – தலையங்கம்

About idealvision

Check Also

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *