பதிவுகள்
Home / அரசியல் / கொள்கை ஒன்று சின்னம் ரெண்டு . . . . !

கொள்கை ஒன்று சின்னம் ரெண்டு . . . . !

2006-2011 திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அந்தக் காலத்தில் அது மத்தியில் காங்கிரஸ் அரசின் கட்சியின் அங்கமாகவும் இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருப்பதன் மூலம் தமிழகத்தை சொர்க்கத்தின் உச்சத்திற்கு கொண்டு போகப் போவதாய் தமிழக மக்களுக்கு வாக்களித்திருந்தது. ஆனால் விவசாயம், தொழில், சேவை என அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியைக் கண்டன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடும் இளைஞர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கையறு நிலைக்கு தள்ளப்பட்டதால் கொந்தளித்தார்கள். சமூக நீதிக் காவலர்களாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலித்துகள், பெண்கள், மதசிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் என அனைத்து பகுதியினர்களின் மீதும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. சட்டம் – ஒழுங்கு அகல பாதாளத்தில் இருந்தது. அனைத்துத் தொழில்களுக்கும் அடிப்படைத் தேவையான மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தான் அந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டுமென்று தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் கருதினர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அஇஅதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. பல்வேறு திட்டங்களை பகட்டான வாக்குறுதிகளாக அள்ளி வீசியது. இந்த தேர்தல் வாக்குறுதிகள் எத்தகைய நிலையிலிருக்கிறது என்று பார்ப்பது வருகிற சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க உதவும்.

உழுதவன் கணக்கு

அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் என்கிற கவர்ச்சியுடன் ஆரம்பித்தது. விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காக பெருக்குவோம், அரிசி உற்பத்தியை 60 சதவிகிதம் உயர்த்துவோம், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை மூன்று மடங்குகளுக்கு மேல் உயர்த்துவோம், 100 நாள் வேலைக்கு விவசாயக் கருவிகளை இலவசமாக வழங்குவோம், உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகள் அந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக ஆக்கப்படுவார்கள், அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் கரும்பின் விலையை நிர்ணயிப்பது போல விலை நிர்ணயிக்கப்படும், கரும்பு உற்பத்தியை 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்துவோம், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500/-ஆக வழங்குவோம், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை அதிபர்கள் பணம் பட்டுவாடா நிலுவையில் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் மிகப் பெரிய வாக்குறுதிகளை அளித்தார்கள்.

ஆனால் விவசாய உற்பத்தி இந்த காலத்தில் குறைந்திருக்கிறது. தனி நபர் வருமானம் எந்த வகையிலும் உயரவில்லை என்பதை ஒவ்வொருவரும் அனுபவத்தில் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைக்கு விவசாயக் கருவிகளை இலவசமாக வழங்குவது என்பது எந்த இடத்திலும் நடைபெறவில்லை. உணவு பதப்படுத்தப்படும் மையங்கள் உருவாக்கப்பட்டு ஒரு இடத்திலாவது ஒரு விவசாயியாவது அதன் பங்குதாரர் ஆக்கப்பட்டிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினால் ஆம் என்று சொல்ல அவர்களுக்கு ஒரு இடம் கூட இருக்காது. தமிழகத்தில் எந்த பொருளுக்காவது கரும்பு போல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எந்த சிறுபிள்ளையிடம் கேட்டாலும் அது இல்லை என்று சொல்லும். எட்டரை லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுக்கொண்டிருந்த கரும்பு சாகுபடி 6.81 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது. இவர்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் 252 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 281 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஆனால் அம்மாவின் ஆட்சியில் தமிழகத்தில் உற்பத்தி 21 லட்சம் டன்னிலிருந்து 14 லட்சம் டன்னாக குறைந்து போனது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அத்தனையும் பரிசீலிப்பதற்கு விவசாயிகள் குறித்த இந்த அம்சங்களில் அந்த அரசின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை பார்த்தாலே போதும். தமிழகத்தில் மிகப் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிற விவசாயத் தொழிலுக்கு அஇஅதிமுக மேற்சொன்ன அம்சங்களில் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறதா, திமுக போன அதே பாதையில்தான் இந்த அரசும் சென்றது, இன்னும் கூடுதலாக சுமையை ஏற்றியிருக்கிறது.

வேலை கணக்கு

அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றார்கள். சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது போல் ஆட்சி முடியப்போகிற நேரத்தில் இதை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். இது ஒருபுறமிருக்க இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், 20 ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்றும், இது தொடர்பான போக்குவரத்து வாய்ப்புகள் மூலம் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் வாய்ப் பந்தல் போட்டிருந்தார்கள். இது தவிர மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சி என்ற தலைப்பில் 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள் அமைத்து 10 லட்சம் பேருக்கு கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சவடால் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்புவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். இதேபோன்று இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் 64 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்பட்டு 70 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசியிருந்தார்கள். கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் அதிகபட்சமாக 4 1/2 லட்சம் பேருக்கு வேலை வழங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறார். அது உண்மையா என்பது ஒருபுறமிருக்க, 86 லட்சம் பேருக்கு வேலை அளிப்பதாக சொல்லிவிட்டு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது தமிழகத்தின் வேலை தேடி நிற்கும் இளைஞர்களை கேலி செய்வதாகும். இவர்கள் ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருந்தோர் பட்டியல் 49 லட்சம். அது திமுகவின் சாதனை. அதிமுக 5 ஆண்டுகள் கடுமையாக முயற்சித்து பதிவு செய்துள்ள வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கையை 89 லட்சமாக மாற்றியிருக்கிறது. ஒரு கோடியை தொட்டதும் ஒரு வேளை அவர்கள் விழா கொண்டாடக் கூடும்.

மின்சார கணக்கு

2011ம் ஆண்டில் தேர்தலை சந்திக்கிற போது அதற்கு முந்தைய ஒரு வருடத்திற்கு மேலாக கடுமையான மின்வெட்டை தமிழகம் சந்தித்துக் கொண்டிருந்தது. சிறுதொழில், வணிகம், கல்வி நிலையங்கள், வீடுகள் போன்ற அனைத்து பகுதியினரையும் கடுமையாக பாதித்த மின்வெட்டு திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறிப் போனது. அப்போது நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதுவும் ஒரு காரணமாய் அமைந்தது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம், இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் வழங்குவோம், அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்கச் செய்வோம், மின்சாரக் கழிவைக் கொண்டு 151 நகராட்சிகளில் 2012ம் ஆண்டுக்குள் 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம், 2013ம் ஆண்டுக்குள் சூரிய ஒளியின் மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் நடத்தினார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒரு மெகாவாட், மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. அன்றிருந்த அரசாங்கம் முடிக்காமல் போன சில மின்நிலையப் பணிகளை முடித்து ஓரளவு உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த அரசாங்கம் வந்த பிறகு எந்த மின் உற்பத்தி நிலையத்தையும் துவக்கி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக, இந்த மின்பற்றாக்குறையை சரிசெய்கிறேன் என்று சொல்லி, தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி தமிழக மக்கள் தலையில் மின் கட்டண உயர்வையும், கடனையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். கடன் வாங்கியதையெல்லாம் சம்பாதித்தாக சொல்லுகிற வக்கிரம் அஇஅதிமுக அரசுக்கு மட்டுமே உள்ளது. எங்கம்மா நிதி நிர்வாகத்தில் புலி என்று பேசிக் கொள்கிற அஇஅதிமுகவின் விசுவாசிகள் கூட அம்மா ஆட்சிக்கு வரும் போது 50 ஆயிரம் கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் கடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 89 ஆயிரம் கோடியாக மாறியிருப்பதை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இவ்வளவையும் செய்து விட்டு நானும் ரௌடி தான், நான் மட்டும் தான் ரௌடி என்று அஇஅதிமுக பீற்றித் திரிகிறது.

தொழில் கணக்கு

தொழில்கள் அனைத்தும் சென்னையை மட்டுமே சுற்றியிருப்பதால் மதுரை, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை தன்னிறைவு கொண்ட தொழில் வழி உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள். எதாவது நடந்திருக்கிறதா?. கப்பல் கட்டும் துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய மூலதனம் வரும் என்றது அஇஅதிமுக. திடீரென்று ஞான உதயம் வந்ததை போல உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வரப்போவதாய் மூச்சுக்கு முந்நூறு தடவை ஜெயலலிதா பேசினார், அவரது அமைச்சரவை சகாக்கள் அதையே ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள், அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகள் எழுதி குவித்தன. என்னாயிற்று. ஒரு புதிய தொழில், ஒரேயொரு புதிய தொழில் தமிழகத்திற்கு வந்திருக்கிறதா? மாறாக, இவர் காலத்தில் ஆஹா, ஓஹோ என்று புகழப்பட்ட நோக்கியா தமிழகத்தை விட்டே ஓடிவிட்டது. 6 ஆயிரம் பெண்கள் உட்பட 8 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் நிறுத்தப்பட்டார்கள். நோக்கியாவும் மூடப்பட்டது, ஃபாக்ஸ்கானும், அதன் உப தொழில்களும் மூடப்பட்டது. ஒட்டுமொத்தமாய் ஒரு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். யானை போல் கர்ஜித்தவர்கள், பூனை போல கத்தக் கூட திராணியற்று நின்றார்கள். இது தான் 86 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய லட்சணம்.

ஊழியர் கணக்கு

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து ஏற்கனவே இருந்த பென்சன் திட்டத்தை உருவாக்கப் போவதாக செல்வி ஜெயலலிதா தன்னுடைய பரப்புரையில் பல இடங்களில் சொல்லி வந்தார். ஆனால் நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படாத நிலையில் அரசு ஊழியர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஆட்சி போகும் நிலையில் தான் ஒரு குழு அமைப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார். சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்படும் என்று சொன்னதை அவர்களின் கவனத்திலிருந்து அழித்துவிட்டார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் பணியிலிருந்தாலும், ஓய்வுபெற்றாலும் அவர்களிடமிருந்தெல்லாம் வாங்கிய பணத்தை கூட்டுறவு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கட்டாமலும் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமலும், ஊழியர்களிடம் கடன் வாங்கி போக்குவரத்துத்துறையை நடத்தும் அரசாக இந்த அரசு மாறிவிட்டது. பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் எத்தனை போராடியும் அவர்களை நிரந்தரப்படுத்த தயார் இல்லை.

கடனும் வளர்ச்சியும்

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவிலிருந்து மீட்டு ஒவ்வொரு தமிழரும் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும் என்று முரசு அறிவித்தார்கள். இப்போது கடன் 2 1/2 லட்சம் கோடியாக இருக்கிறது. தமிழன் தலை குனிவில் இருந்து மீட்கப்படவில்லை. மாறாக, இன்னும் ஒன்றரை மடங்கு கூடுதலாக தலைக்குனிவிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறான். அம்மா வளர்ச்சியைப் பற்றியும் கூட பேசியிருக்கிறார். 5 வருடங்களில் மாநிலத்தின் வருமானத்தை ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவார்களாம். இருந்த கடனை அடைத்து விட்டு பொருளாதார வளம்பெற்ற மாநிலமாக மாற்றுவோம் என்று சொல்லியிருந்தார்கள். என்ன வளர்ந்தது என்பதை அஇஅதிமுக தான் சொல்ல வேண்டும்.

அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டிய நேரத்தில் செயல்படாத அரசாகவும், தாமதமாய் செயல்பட்டும் முன்யோசனை ஏதுமின்றி செம்பரம்பாக்கத்தை திறந்ததால் பேரிழப்பு, உயிரிழப்பு நீங்கா பயத்தை கொண்டு வந்த அரசாகவும் பெயர் எடுத்துள்ளது. உருப்படியாக தான் இதெல்லாம் செய்தோம் என்று சொல்ல முடியாத காரணத்தினால் யார் செய்தாலும் அம்மாவின் ஸ்டிக்கரை ஒட்டி அழகு பாக்கிற வக்கிரத்தை உருவாக்கியதன் மூலம் மோசமான அவப்பெயருக்கும் உள்ளாகியிருக்கிறது.

ரெண்டும் ஒன்னு தான்

மொத்தத்தில் இந்த 5 ஆண்டு அதிமுக அரசு தாதுமணல், ஆற்று மணல், கிரானைட், நிலத்தடி நீர் என்று இயற்கை வள கொள்ளையர்களுக்கு வேட்டைக்காடாகவும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து பகுதி உழைக்கும் மக்களுக்கும் துன்ப, துயரத்தையும் தொழில் நடத்துவோர், சேவை செய்வோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களுக்கும் ஏமாற்றமளித்த அரசாகவும் திகழ்கிறது. திமுக அரசாங்கம் கடந்த காலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது எப்படி நடந்து கொண்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் சில துறைகளில் அதற்கும் அதிகமாக மோசமான பெயர் பெற்றிருக்கிறது. லஞ்சம், ஊழல், ஆறாய் ஓடும் மது, கட்டடற்ற காவல்துறை, கோயில் காளைகள் அடுத்தவர் நிலத்தில் இறங்கி மேய்வது போல தமிழகத்தின் ஒவ்வொரு மனிதரிடமும் எல்லா வகையிலும் லஞ்சமோ, ஊழலோ கொடுக்க முடியாமல் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது என்று எல்லா வகையிலும் திமுகவிற்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அதிமுகவின் ஆட்சி நிரூபித்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் அதிமுக – திமுக இரண்டிற்கும்,

கொள்கை எல்லாம் ஒன்று சின்னம் தானே ரெண்டு.

–   – க. கனகராஜ்

9443462525

http:// maattru.com/

About idealvision

Check Also

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்._ கொரோனா தொற்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *