பதிவுகள்
Home / கட்டுரைகள் / அமைதியையும் இணக்கத்தையும் தழைக்கச் செய்ய சபதம் செய்வோம்

அமைதியையும் இணக்கத்தையும் தழைக்கச் செய்ய சபதம் செய்வோம்

CLICK – இணைந்திருங்கள்

– சையத் ஜலாலுத்தீன் உமரி

நாட்டில் சமூக நல்லிணக்க நிலைமை மிக வேகமாகச் சீர்குலைந்து கொண்டிருக்க அமைதியும் நிலைத்தன்மையும் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கின்றன.

‘கவ்-ராக்ஷா -பசு பாதுகாப்பு’ என்கிற பெயரிலும் வேறு சாக்குப்போக்குகளைக் காட்டியும் சங்கிலித்தொடர் போல சிறுபான்மையினர் மீதும் தலித்கள் மீதும் ஒடுக்கப்பட்ட பிற சமுதாயங்கள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

ரயில்களிலும் பேருந்துகளிலும் நெடுஞ்சாலைகளிலும் பொது இடங்களிலும் அப்பாவியான மக்கள் அடித்தே கொல்லப்படுகின்ற அவலம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டு மக்கள் மத்தியில் பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் வேர் பிடிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

சட்டத்தை முறிப்பவர்களை எந்த நிலையிலும் சகித்துக்கொள்ளவே மாட்டோம் என்றும் குற்றவாளிகளுக்குக் கடுமையாகத் தண்டனை தரப்படும் என்றும் அதிகாரம் படைத்தவர்கள் உறுதி அளிக்கின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த அறிவிப்பினால் களத்தில் எந்தவிதமான பாதிப்பும் மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

பசு பாதுகாப்பு என்கிற பெயரில் மனிதர்களைக் கொல்வதற்கு எதிராக நாட்டின் பிரதமர் அறிவித்த அதே நாளில் ஜார்க்கண்டில் அப்பாவி ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. இது போன்ற நிகழ்வுகள் இப்போது பட்டப் பகலில் நாட்டின் தலைநகரமான தில்லியிலும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.

பிரச்னையின் தீவிரத்தையும் கடுமையையும் உணர்ந்து செயலாற்றுமாறு நாங்கள் மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம். வன்தாக்குதலில் ஈடுபட்டு அழிச்சாட்டியம் புரிகின்ற மனிதர்கள் சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் ஆளும் வர்க்கத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார்கள்; இந்த நெருக்கமும் உறவும்தாம் அவர்களுக்கு தெம்பளிக்கின்றன என்றே நாட்டு மக்கள் நினைக்கின்றார்கள். இத்தகைய நிலையில் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு இன்னும் அதிகமாகிவிடுகின்றது.

எனவே நாட்டின் சிறுபான்மை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்திலும், இனி மறுபடியும் சட்டத்தின் ஆட்சியை கையில் எடுத்தோமேயானால் சட்டத்தின் இரும்புக் கரத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவோம் என வன்முறையாளர்களுக்கு அச்சமூட்டுகின்ற வகையிலும் மத்திய அரசாங்கம் அரசியல் ரீதியான, சட்ட ரீதியான, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளையும் உறுதியுடனும் கடுமையாகவும் மத்திய அரசாங்கம் உடனடியாக எடுத்தாக வேண்டும்.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழும்பியிருப்பதும் கண்டனக் குரல்கள் ஓங்கியிருப்பதும் மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது. சாதி, இனம், மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களாக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்தக் குரலில் இந்தக் கொடுமைகளைக் கண்டித்து வருகின்றார்கள். எல்லோருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுத்திருக்கின்றார்கள்.

இதுதான் நம்முடைய நாட்டின் உண்மையான உயிர்த்துடிப்பு. இதுதான் நம்முடைய நாட்டின் உண்மையான வலிமையும் பலமும்கூட.

நீதிக்குக் குரல் கொடுக்கும் இந்த மக்கள் அனைவரையும் நாங்கள் ஆதரிக்கின்றோம். உண்மைக்கும் நீதிக்கும் ஆதரவான இந்தக் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த நாடும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்.

நிலைமையைச் சீர்படுத்த நல்லவர்கள் சிலர் சில நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்திருக்கின்றார்கள். குறிப்பாக கும்பலாகச் சேர்ந்து தனி மனிதர்களை அடித்தே கொல்கின்ற வன்தாக்குதல்களுக்கு எதிராக சிறப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும். இது போன்ற கொடுமைகள் எங்கு நடந்தாலும் உடனடியாக அந்த மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகள் மீதும் சமூக ஊடகங்களில் விஷத்தைப் பரப்பியவர்கள்மீதும் வதந்தியைப் பரப்பியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற பரிந்துரை கவனத்துக்குரியதாகும்.

இந்தப் பரிந்துரைகளை நாங்கள் ஆதரிக்கின்றோம். இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி மத்திய அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கின்றோம். இனி அக்கிரமங்களும் கொடுமைகளும் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படாது; சட்டத்தைத் தங்களின் கைகளில் எடுக்கின்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என அரசாங்கம் உரத்து, ஓங்கி முழங்க வேண்டும்.

இந்தத் தருணத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

முஸ்லிம் இளைஞர்களே!

நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். ஊக்கம் குன்றிவிடாதீர்கள். நிராசை அடையாதீர்கள். உணர்ச்சிவசப்படுவதையும் ஆத்திரப்படுவதையும் ஆவேசப்படுவதையும் விட்டு விலகியிருங்கள். உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்ற முற்படாதீர்கள்.

முஸ்லிம்கள் நிராசையடைந்து, நம்பிக்கையிழந்து, ஊக்கம் குன்றிப்போய், நாட்டின் மைய நீரோட்டத்திலிருந்து விலகி நின்றுவிட வேண்டும் என்றுதான் வகுப்புவாத சக்திகள் எதிர்பார்க்கின்றார்கள். நம்முடைய பேச்சும் நாம் மொழிகின்ற சொற்களும் பயத்தையும் ஊக்கமின்மையையும் கொண்டவையாய் இருந்திடக் கூடாது. அதே சமயத்தில் அவை மோதல் போக்கும் வகுப்புவாத வாடையும் நிறைந்தவையாயும் இருந்திடக் கூடாது.

ஆவேசத்தால் உந்தப்பட்டு நாம் செய்கின்ற எந்தவொரு எதிர்வினையும், நம்முடைய சமநிலையற்ற செயல்களும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான வகுப்புவாத சக்திகளின் திட்டத்துக்குத்தான் வலு சேர்க்கும். வகுப்புவாத, மதவாத மோதலுக்கும் பதற்றத்துக்கும் இட்டுச் செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றிப்போவதைத் தடுப்பதற்காக நம்மால் இயன்ற வரை முயல வேண்டும்.

இது போன்ற சூழல்களில் நம்முடைய முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளுடன் தொடர்புகளையும் சந்திப்புகளையும் வலுப்படுத்துவதும் அதிகமதிகமாக தகவல் தொடர்புக்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இஸ்லாத்தின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

இஸ்லாம் தொடர்பாக முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் மத்தியில் இருக்கின்ற தவறான கருத்துகளை நாம் களைய வேண்டும். அவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை எடுத்துரைக்க வேண்டும். நம்முடைய முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளுடன் ஒன்று சேர்ந்து அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

வாருங்கள். நாட்டு நிலைமையைச் சீர்படுத்தி நாடு முழுவதும் அமைதியையும் இணக்கத்தையும் தழைக்கச் செய்ய சபதம் செய்வோம். இந்த நாட்டின் நலன் நாடும் நல்லுள்ளங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கும் என்றும் ஆக்கப்பூர்வமான, சரியான திசையில் நாட்டை வழிநடத்துவதில் இறைவன் நாடினால் வெற்றி கிடைக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.

– சையத் ஜலாலுத்தீன் உமரி
அகில இந்தியத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

About idealvision

Check Also

நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்

  1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தடை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *