பதிவுகள்
Home / அரசியல் / இது எங்கள் பிரச்னை..! நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..!

இது எங்கள் பிரச்னை..! நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..!

CLICK – இணைந்திருங்கள்
>>> இக்வான் அமீர்
“நல்லவாயன் வந்தானா?” – என்று மனைவியிடம் கேட்டேன். “குடிச்சிட்டு வந்தா இனி வீட்டுலே சேர்க்கவே மாட்டேன்னு அவன் பொண்டாட்டி சொல்லிட்டாளாம். அதையே சாக்காக வைச்சுகிட்டு அவன் குடிச்சிட்டு எங்கே உருண்டு கிடக்கிறானோ? – மனைவி கவலையுடன் தெரிவித்தார்.

நல்லவாயன் என்றது என் தம்பி குறித்துதான்! பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தாயகம் திரும்பி சொந்தமாக ஆட்டோவை ஓட்டி வருபவன். கடனில் சிக்கி, அதிலிருந்து விடுபட முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தற்கொலைவரை சென்றவன். அப்படிப்பட்டவனை குடும்பத்துடன் மீட்டுவந்து வயதான காலத்தில் எங்கள் கைச் செலவுக்காக உதவுமே என்று கட்டியிருந்த வாடகை வீட்டையும் அவனுக்குக் கொடுத்தோம். அவன் வாங்கிய கடனுக்காக காவல்நிலயம்வரை சென்று கடன்கொடுத்த சம்பந்தப்பட்ட நபர்களின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்தும் இன்னும் திருந்தாதவன்.

காலையில் மாப்பிளைப் போல பயபக்தியுடன் ஆட்டோ ஓட்டிச் செல்பவன் மாலை நேரம் வந்ததும் குடித்துவிட்டு ‘நாரவாயனாக’ மாறி நிற்பவன். மனைவியிடம் சண்டையிடுபவன். பிரச்னையின் உச்சகட்டமாக வாழ்வியில் பிரச்னைகளைச் சமாளிக்க மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.

மூன்றாண்டுகளாக இந்த நல்லவாயனை திருத்த படாதபாடு பட்டுவரும் நிலையில், சில நாட்களுக்கு முன் குடித்துவிட்டு வந்து, என்னிடம் வந்தவன், பிரச்னைகளுக்கு முழு காரணம் மனைவிதான் என்றும், அதனால், மனைவியை விவகார ரத்து செய்ய இருப்பதாகவும் சொன்னான்.

கூடவே அவன் மனைவியும் வந்து கணவன் குறித்து முறையிட்டு ‘குலா’ (மணவிலக்கு) பெற்றுத் தரும்படி முறையிட நான் ஒரே வார்த்தையில் சொன்னேன்:

“விவகார ரத்து செய்துவிடலாம் அல்லது ஏற்கனவே உன் மனைவி கேட்பது போல மண விலக்கும் தந்துவிடலாம்”

இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அவன் அந்த குடிபோதையிலும் அதிர்சியடைந்து நிற்க, “உண்மைதானப்பா..! ஒரு குடிக்காரனிடம் சிக்கி வாழ்க்கையை சீராக்கிக் கொள்வதைவிட மண விலக்கு பெற்று, உனது கரு இவளது வயிற்றில் சுமக்கப்படுகிறதா என்ற இக்தா தவணைக்காலம் முடிந்த கையோடு, அவளுக்குப் பிடித்த நல்லவன் ஒருவனுக்கு நிக்காஹ் செய்து தந்து விடலாம்பா..!”

இந்த நாராவாயனிடம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிக்கும் மகளிடமிருந்து வருகிறது அந்த அவசர அழைப்பு. “அப்பா, இந்த ஆளோட அடியை தாங்க முடியலேப்பா.. தயவுசெய்து என்னை அழைச்சிட்டுப் போயிடுங்களேன்!”

பதறிப்போன நாங்கள் கார் எடுத்துக் கொண்டு அடிபட்டு முகமெல்லாம் வீங்கி ஏறக்குறைய மயக்க நிலையிலிருந்த மகளை மீட்டு வந்து ஆறுதல் சொல்லி வீட்டில் தங்க வைத்தோம்.

ஒரு கடனாளியாகவும், வாய்மையற்றவனாகவும் இருந்த ஒருவனை மகள் தேர்வு செய்த ஒரே காரணத்தால் தவிர்க்க இயலாத சிக்கலில் நாங்கள். திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே பட்ட கடனை அடைக்க எவ்வளவோ உதவி செய்தும் அந்த வெள்ளை – சொள்ளை மாப்பிளை தனது மிடுக்கிலிருந்து சற்றும் மாறுவதாக இல்லை.

கடனாளிகள் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்குள் தள்ளியபோது, அந்த விஷயம் எங்கள் காதுகளுக்கு எட்டாதவாறு ரகசியமாக வைத்து, தனது கணவனை ஜாமினில் மீட்டு வந்த அவ்வளவு நல்லவள்தான் எங்கள் மகள். ஐந்து வருடம் வடநாட்டின் சிறப்பு மிக்க அரபி பாடசாலையில் மார்க்க கல்வி கற்று முடித்த பெண் மார்க்க அறிஞர் – ஆலிமா. தற்போது ஆசிரியராக பணிபுரிபவர். பிரச்னையில் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற இருப்பதாக சொன்னவர், சில வாரங்களுக்குப் பிறகு மகளின் உடல்நிலை என்ற சாக்கில் எங்கள் பாதுகாப்பையும் பொறுப்படுத்தாமல் மாமியாரை அழைத்து மீண்டும் கணவனோடு இணைந்து கொண்ட துரதிஷ்டசாலி.

பிரச்னை ஓய்ந்ததா என்றால் இல்லை. மீண்டும் தனது கற்புக்கு களங்கம் சுமத்தும் அந்தக் கயவனிடம் சிக்கி மீண்டும் அடி, உதைப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறாள். என்ன செய்வது பெற்ற வயிறு இல்லையா? மீண்டும் பிரச்னையை நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம். விஷயம் அந்தப் பகுதி, பள்ளிவாசல் நிர்வாகம்வரை சென்றிருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி பொருத்திருக்கும்படி அறிவுரை நல்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது முற்றல்ல.

இவை எல்லாமே வீட்டுக்கு வீடு அன்றாடம் நடைபெற்றுவரும் சொல்வதெல்லாம் உண்மைகள்..! முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவை எடுப்பாக தெரிபவை. பிரச்னைகளாக்கப்படுபவை. வழக்காடு மன்றங்களில் ஊடகங்களால் அரங்கேற்றப்படுபவை. அதேநேரம் நிச்சயமாக தீர்வு காணப்பட வேண்டியவ.

முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம் குறித்து நினைக்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். ஏதோ ஒரு மண். முற்றிலும் வித்யாசமான நிலபரப்பும் அதைச் சார்ந்த வாழ்வியல் அமைப்பும். பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் காலம். மொழி ரீதியாகவும் நெருக்கமற்ற முற்றிலும் வேறுபட்ட நிலை.

யாரும் கண்ணால் கண்டதில்லை. இருப்பினும் அவர் சொன்னதை உலகின் வேறொரு பகுதி கேட்கிறது. இறைவனின் திருவாக்காய் (திருக்குர்ன்) அவரது போதனைகளை சிரமேற்கொண்டு நடக்கிறது. அவரது சொல், செயல், அனுமதிகள் (ஹதீஸ்) எல்லாமே சிக்கலின்றி பின்பற்றும் எத்தனத்தால் மனித இனத்தின் ஒரு பகுதி துடிக்கிறது.

இப்படி, திருக்குர்ஆன், திருநபிகளாரின் வாழ்வியல் முறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாகி, பிரிக்க முடியாத ‘ஷரீயத்’ என்ற ராஜபாட்டையாகிறது. அந்த வாழ்வியல் தத்துவத்தின் செயலுருவத்தால் அதைப் பின்பற்றும் மனித மனங்களில் அமைதி தவழ்கிறது. உலகின் நான்கில் ஒருவராய் நபிகளாரின் பின்பற்றாளர்களால் ஒரு கூட்டம் உருவெடுக்கிறது.

இந்த ஆச்சர்யம், பெரு வியப்பு மலைப்பாக நிற்கிறது உண்மைதானே?

ஒரு நீண்ட கால இடைவெளி, உலக மகாப் போர்களால் முதலாளித்துவம், கம்யூனிஸம் கொள்கைகள் காலனியாதிக்க தலைவர்களால் திணிக்கப்படகின்றன. இதற்காக திட்டமிட்டபடி முஸ்லிம் நாடுகளின் இளைஞர்கள் கல்வி கற்றல் என்ற பெயரால் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். சொந்த தாய்நாடு திரும்பிவரும்போது, மேலைநாட்டு, இறைமறுப்பு முஸ்லிம் பெயர் தாங்கி அறிவு ஜீவிகளாய் உருவெடுக்கிறார்கள். இப்படி நவீன கல்வி என்று இஸ்லாத்துக்கு எதிரான கருத்துருவாக்கம், காலனியாதிக்கம் என்று ஒரு நீண்ட இடைவெளியில் சிக்கிக் கொண்டு தங்கள் சுய நிறங்களைத் தொலைத்துவிட்ட முஸ்லிம் சமூகம்.

இஸ்லாம் வழங்கிய உயரிய ஜனநாயக அமைப்பை அச்சமற்ற விமர்சனப் போக்கை தவறாக பயன்படுத்தி சொந்த மார்க்கத்தை சர்ச்சைகளால் பிளவுப்படுத்தும் போக்கின் மிகைத்தல்.

திருக்குர்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகளைவிட்டு விலகிப் போன சமுதாயம்.

ஒவ்வொருவரும் ஒரு அறிவுப்போராளியாக இருக்க வேண்டிய சமூகத்தின் அங்கத்தினர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாய் மாறிவிட்ட துரதிஷ்டநிலை என்று தொடரும் நிகழ்காலம்.

அறிவு தொலைந்து போனபின், வாழ்வில் ஒளியேது? முன்னேற்றம்தான் ஏது?

இருண்ட வாழ்வில் உழன்ற சமூகங்கள் எல்லாம் தங்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற்றத்தின் உச்சியில் நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்போது, முற்றிலும் மேம்படாத ஒரு சமூகம் நகர்வின் சாத்தியம்தான் ஏது? தொலைநோக்குப் பார்வைதான் ஏது? பயன்தராத கருத்துப் பேதங்களிலிருந்து வெளிப்படும் சூழல்தான் ஏது?

சொந்த சமூக மக்கள் வாழ்வியல் போராட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், விரல்விட்டு எண்ணத்தக்க அறிவுஜீவி முல்லாக்கள் அதி தீவிர சர்ச்சைகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்க..

தங்கள் உரிமைகள் என்ன? கடமைகள்தான் என்னென்ன? என்று உயர் விழுமியங்களால் பண்பட்ட மேன்மைத்தாங்கிய சமூகம் என்று திருக்குர்ஆனால் விளிக்கப்படும் சமூகத்தில் சுபிட்டசம்தான் ஏது?

இஸ்லாத்தின் கூறுகள் அவற்றின் ஒவ்வொரு சட்ட திட்டங்கள் மனித இனத்தின் வழிகாட்டுதலாக இருக்க… சொந்த சமூகத்தின் உறுப்பினர்களுக்கே பொருத்திப் பார்க்க இயலாத சூழலை என்னவென்பேன்?

நோய்க்குறித்து அறியாத ஒருவருக்கு, நோய் தீர்க்கும் நிவாரணம் குறித்தும் தெரியாத ஒருவருக்கு, சிகிச்சைத் தெரியாத ஒருவர் சிகிச்சை அளிப்பது போன்றுதான் தற்போதைய நிகழ்கால சூழல்கள்.

“வாருங்கள் ஒரு மணவிலக்கு சட்டம் மட்டுமல்ல… இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் அலசிப் பார்ப்போம். இன்றைய நவீன சட்டங்கள் என்று நீங்கள் சொல்வதையெல்லாம் விவாத மேடையில் ஏற்றி ஊரறிய வெளிப்படையாக பேசலாம் வாருங்கள். ஒரு பிரச்னைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? நாங்கள் எடுத்துரைக்கும் மாற்று தீர்வு என்ன?” – என்று உரத்து சொல்ல முடியுமா முஸ்லிம்களால்..?

“முத்தலாக் மட்டுமல்ல.. முஸ்லிம் தனியார் சட்டங்கள் மட்டுமல்ல… இஸ்லாமிய கிருமினல் சட்டங்கள் குறித்தும் விவாதிப்போம் வாருங்கள். பகிரங்கமான அந்த விவாதத்தில் ஏற்புடைய சட்டங்களை நேர்மையாக தொகுத்து இந்தியாவின் பொதுச்சட்டங்களாக்கலாம் வாருங்கள்..!” – என்று விவாத மேடையமைக்க முஸ்லிம் தலைவர்களால் அறிவு ஜீவிகளால்தான் முடியுமா?

எல்லாம் துரதிஷ்டம் சூழ்ந்து கொண்ட இந்திய முஸ்லிம் சமூக அமைப்பு. உணவுக்கே அல்லல்படும் ஒரு பாவப்பட்ட சமூகம் வழக்கம் போலவே உணர்ச்சிவசப்படுவதற்கான நேரமல்ல இது. அறிவு ரீதியாக செயல்பட வேண்டிய நேரம்! சர்ச்சைகளில் சிக்கி சமூகத்தை சிக்க வைத்து பிரச்னைகளை திசைத் திருப்பும் நேரமும் அல்ல இது. அறிவின் பக்கம் சமூக மக்களை திசைத் திருப்ப வேண்டிய நேரம்.

3:2 என்ற நிலைப்பாட்டில்தான் முத்தலாக் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கண்ணியத்திற்குரிய நீதிபதிகளின் கவனத்துக்கு, “அய்யன்மீர், நாட்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதி கிடைக்காமல் தேங்கிக் கிடக்கின்றன. பிரபலமான வழக்குகள் என்று எடுத்துக் கொண்டால்கூட பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வழக்கு, குஜராத் இனப்படுகொலைகள் வழக்குகள், போலி என்கவுண்டர் வழக்குகள், நீதிக்காக ஏங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகளின் வழக்குகள், காவேரி மேலாண்மை வாரிய விவகாரங்கள், தலைநகர் தில்லியில் எங்கள் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் என்று லட்சக்கணக்கான பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தயவு செய்து இவற்றை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டிய நேரமிது.

முஸ்லிம் தனியார் சட்டங்கள் என்பவை இந்திய அரசிலமைப்பு சட்டம் 25-வது பிரிவின்படி முற்றிலும் பாதுகாக்கப்பட்டவை. மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதே உண்மை.

இது எங்கள் வீட்டு விவகாரம். இதனால் உங்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்பதும் அப்பட்டம்.

எங்கள் வீட்டு விவகாரம் வீதிக்கு வந்துவிட்ட ஒரு துரதிஷ்டநிலை காரணமாக வைத்து எங்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை தயவு செய்து பறிக்காதீர்கள். எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள எங்களை விடுங்கள்.

திருக்குர்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகள் என்று இஸ்லாமிய சட்டக்கூறுகளை சுயமாய் வியாக்கியானம் செய்வது சரியாகவும் இருக்காது. அதிலும் 1400 ஆண்டு காலமாக செயல்பட்டுவரும் சட்டங்களை சில பக்கங்களில் நீங்கள் தீர்ப்பளிக்கவும் முடியாது!

  • இக்வான் அமீர்

About idealvision

Check Also

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? *** இன்று பணிநீக்கப்பட்டுள்ள நண்பர் ஹாஃபிஸ் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” என்கிற …