பதிவுகள்
Home / அரசியல் / கொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்!

கொளுத்தப்பட வேண்டிய கந்துவட்டிக் கொடூரம்!

முத்தழகன்

உலகை உலுக்கிய எத்தனையோ புகைப்படங்களுடன் இணைந்த வரலாற்றுப் பெரு(சிறு)மையை நெல்லை மண் பெற்றுவிட்டது. அமெரிக்காவின் நாபாம் குண்டுகளின் சூடு தாளாமல் ஆடையின்றி ஓடி வரும் குழந்தை, உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சத்தின் காரணமாய், வீசியெறியப்படும் உணவுப் பொட்டலம் ஒன்றிற்காக காத்திருக்கும் எலும்பும் தோலுமான  ஆப்பிரிக்க சூடானின் குழந்தை, அகதிகளாக வெளியேற்றப்பட்டு கடற்கரையோரமாக இறந்து கிடந்த துருக்கியின் அய்லான் குர்தி இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா காசிதர்மம் ஊரை சேர்ந்த எரிந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் 5 வயது மது சாருண்யா மற்றும்  கருகிய நிலையில் கவிழ்ந்து கிடக்கும் 3 வயது அட்சய பரணி.

காலையில் எழுந்து குளிப்பாட்டி, சோறூட்டி அப்பா, அம்மாவால் அழைத்து வரப்பட்ட அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கப் போவதில்லை, திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் எரியப் போகிறோம் என்று. வாழ்வின் விரக்திக்கு தள்ளப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கும் நபரால் கூட இயலாத காரியம் ஒரு குழந்தையை கண் முன்னால் கொளுத்தி தானும் தற்கொலைக்கு உள்ளாவது என்பது. ஆனால் இசக்கிமுத்துவும், சுப்புலட்சுயும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வியாக்கியானங்களையும், விளக்கங்களையும், அறிவுரைகளையும் அள்ளி வீசும் முன்பு, ஒரு நொடி இசக்கிமுத்துவின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். அதீத வெறுமை, ஆற்றாமை, தோல்வி, அவநம்பிக்கை, விரக்தி, அவமானம் என எத்தனை கொடூரமாக வாழ்வை கடந்திருந்தால் குடும்பத்துடன் தீயிட்டு தற்கொலைக்கு உள்ளாகும் முடிவை எடுத்திருப்பார்.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபரிடமிருந்து பணத்தை வசூலிக்கும் முறை என்பது மனித மாண்பிற்கே விரோதமானது. அடியாட்களை வைத்து மிரட்டுவது அடிப்பது, வீடுகளில் புகுந்து பாத்திர பண்டங்களை தூக்கி தெருவில் வீசுவது, அவமானப்படுத்தும் சொல்லாடல்களால் பொது வெளியில் திட்டுவது உள்ளிட்டு பல்வேறு வார்த்தைகளால் விவரித்திட முடியாத அளவிற்கு இவர்களின் கொடூரம் தொடரும். இத்தனைக்கும் வாங்கிய பணத்திற்கு வட்டியும் சேர்த்து கொடுத்த பிறகே இந்த மாதிரியான கொடூரங்கள் அரங்கேறும். மிச்சமிருக்கும் ஓலைக்குடிசையையும் எழுதி வாங்கிக் கொள்ளவோ, துண்டு துக்காணி நிலங்களை பறித்துக் கொள்ளவோ நடக்கும் முயற்சிகள் இவை.

கடந்த 134 ஆண்டு காலம் இல்லாத வறட்சியின் காரணமாக, விவசாய வேலைகள் இல்லாமல் போக, விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இசக்கிமுத்து கட்டிட வேலைகளுக்கு மனைவியுடன் செல்லத் துவங்கியிருக்கிறார். அந்த காலகட்டத்தில்தான் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனாக பெற்ற 69,000 பணத்தை திருப்பி செலுத்தும் பொருட்டு அதே ஊரைச் சேர்ந்த முத்துலெட்சுமியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். Pro Note ஒன்றில் Stamp ஒட்டி எந்த தொகையும் எழுதாமல் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார் முத்துலெட்சுமி. ஒரு கட்டத்தில் கூலி வேலையும் இல்லாமல் போக, குடும்பத்துடன் திருப்பூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள் இசக்கிமுத்து குடும்பத்தினர். மொத்தத்தில் சம்பாதித்த பணத்தில் வட்டித் தொகையுடன் சேர்த்து 1,49,000 பணத்தை செலுத்திய பிறகும், 2,17,000 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் என தொடர் மிரட்டலை விடுத்துள்ளார் முத்துலெட்சுமி. வக்கற்றவர்களின் கடைசிப் புகலிடத்தை, தீர்வைப் பெற்று தரும் என்று பொதுமக்கள் தவறாக நம்பி வரும் காவல்துறையை அணுகியிருக்கிறார்கள் இசக்கிமுத்து, சுப்புலெட்சுமி தம்பதியினர்.

தலைமை அலுவலகம் என ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு இடமிருக்கும் என்றால், கந்து வட்டிக்கார்களின் தலைமை அலுவலகம் காவல் நிலையம். கந்துவட்டி ரவுடிகள் வீசியெறியும் எலும்புத் துண்டுகளே அவர்களுக்கு ஆதார உணவு. இந்த நாட்டின் காவல்துறை, நீதித்துறை, அரசு அலுவலகங்கள் என்றும் எப்போதும் எளியவனின் நியாயத்தின் பக்கம் நின்றதில்லை என்கிற அடிப்படை புரிதலை உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை இசக்கிமுத்து, சுப்பு லெட்சுமி தம்பதியினர். அநேகமாக நெல்லை மாவட்டத்தின் அத்தனை காவல்நிலையங்களும் கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கும் நிலையங்களாக உள்ளது என்பதே யதார்த்தமான உண்மை. அந்த உண்மையை உறுதிப்படுத்தும் விதமாக, எப்போதும் போல குற்றவாளிக்கு ஆதரவாய் பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டியிருக்கிறார்கள் “ஸ்காட்லாண்ட்யார்ட்” க்கு இணையான தமிழக காவல்துறையினர். இங்குதான் நீதி கிடைக்கவில்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உறுதியாக நீதியைப் பெற்று விடலாம் என நெல்லை கலெக்டர் அலுவலகம் சென்று 5 முறை மனு கொடுத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். Monday Petition எனும் பெயரில் பெறப்படும் ஆயிரக்கணக்கான மனுக்கள் மீது எப்படி எப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லையோ, அதே போல இசக்கிமுத்துவின் மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

”முதலாளித்துவ சமூகத்தில் பணமே பிரதானம் என ஆன பின்பு, மனித மாண்புகள் முற்றிலுமாக இல்லாமல் சிதைக்கப்படும்” என்பார் கார்ல் மார்க்ஸ். கடன் பெற்றவன் தன் சொந்த மறவர் சாதிக்காரனாகவோ, சொந்தக்காரனாகவோ, பச்சிளம் குழந்தைகளுக்கு தகப்பனாகவோ இல்லை என்னவாகவோ இருந்தாலும் அது குறித்தெல்லாம் கந்து வட்டி கும்பல் எப்போதும் கவலைப்படுவதில்லை. இடம் பொருள் ஏவல் அறிந்து இன்ன சாதிக்காரன் அநியாய வட்டியை திருப்பி செலுத்தவில்லையென்றால், அதே சாதியில் அடியாட்களை தயார் செய்து வசூலிப்பதில் கில்லாடிகள். லோக்கல் ரவுடிக்களின் துணை பலிக்காத பட்சத்தில், சீருடை அணிந்த கட்டபஞ்சாயத்து ரவுடிகள் தங்களுக்கு துணை நிற்பார்கள் என்கிற தைரியமும், துணிச்சலும் கடன் பெற்றவனை என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு தூண்டும்.

இப்படி கந்து வட்டிக் கொடுமையால் தன் உயிரையும், இல்லை குடும்பத்தோடு சேர்ந்தும் தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தில் ஏராளம் பேர். குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் நெல்லையை சேர்ந்த கோமதி கந்து வட்டிக் கொடுமை தாங்காமல் வீட்டில் தீ வைத்து இறந்து போயிருக்கிறார். நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து 6 பேர் கொண்ட தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என ஏராளமான சம்பவங்கள் நெல்லை மண்ணை சுற்றி நடந்திருக்கின்றன.

தன்னைப் போன்ற எளியவர்களின் நலனுக்காகத்தன் செயல்படுகிறது என்று தவறாக எண்ணிக் கொண்டு கையில் மனுவோடு ”கட்டப்பஞ்சாயத்து” காவல் நிலையங்களை, காவல் நிலைய உயரதிகாரிகளின் அலுவலகங்களை, எத்தனை முறை அலைய வைத்தோம் என்பதையே தங்களின் குரூர நோக்கமாக கொண்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை என முறையிட்டு பார்த்து 5 முறை தோல்வியை தழுவிய இசக்கிமுத்து, 6 வது முறையாக தன் குடும்பத்தோடு தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்.

மழை பொய்த்ததால் ஏற்பட்ட விவசாய வறட்சி, வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்காத மாநில அரசு, 2003-ல் கொண்டு வரப்பட்ட கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தை முறையாக செயல்படுத்திடாத அரசு மற்றும் அதிகாரிகள், Demonitisation எனும் பெயரில் மக்களின் சிறுவாட்டு சேமிப்பைக் கொள்ளையடித்த மத்திய அரசு, பாதிக்கப்பட்டவனையே குற்றவாளியாக சித்தரிக்கும் குரூர மனநிலையுடன் கூடிய “கட்டப் பஞ்சாயத்து” காவல்துறை, மனு மீது உரிய நடவடிக்கை எடுத்திடாத கலெக்டர் அலுவலகம் என ஒட்டு மொத்த அமைப்பின் தோல்வியையே பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்டு 4 பேரின் தீக்குளிப்பு காட்டுகிறது.

எல்லாவற்றையும் வணிக ரீதியாக அணுகிப் பழகிய, தமிழக ஊடகங்களின் Breaking News ஆக செய்தியான இந்த சம்பவத்தை நாளை நீதிமன்றம்  ஒரு வழக்காக எடுத்துக் கொள்ளலாம், மாவட்ட நிர்வாகத்திடமிருந்து ஹெல்ப் லைன் தொடங்கப்படும் என அறிவுப்பு வரலாம், கந்து வட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை அதிகாரி கர்ஜிக்கலாம், ஆனால் இவை எதுவும் நடைமுறையில் மாற்றத்தை உருவாக்கிடப் போவதில்லை. மனிதனை மனிதன் நேசிக்கிற, உழைக்கும் மக்களுக்கான அரசு என்கின்ற ஒன்று உருவாகும் வரை இவை எவற்றையும் நம்மால் நிறுத்திவிட முடியாது, அதுவரை இசக்கிமுத்து குடும்பமே கந்து வட்டிக்கு பலியான கடைசி குடும்பமாக இருக்கட்டும்.

இன்னும் எத்தனை இரவுகளானாலும் தூங்கவிடாமல் செய்துவிட்ட பச்சிளம் குழந்தைகள் மதுசாருண்யா & அட்சயா பரணியே கந்துவெட்டியின் நெருப்புக்கு பலியான கடைசி குழந்தைகளாக இருக்கட்டும்.

  • முத்தழகன்
  • நன்றி – மாற்று.காம்

About idealvision

Check Also

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? *** இன்று பணிநீக்கப்பட்டுள்ள நண்பர் ஹாஃபிஸ் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” என்கிற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *