பதிவுகள்
Home / அரசியல் / வட்டியில் கருகிய மொட்டுக்கள்
வட்டியில் கருகிய மொட்டு

வட்டியில் கருகிய மொட்டுக்கள்

என்னுள் ஊட்டியவளே
என்மேல் ஏனம்மா
தீயின் நெருப்பை மூட்டினாய்…
 
சுடும் வெயில் பட்டாலே துடிப்பாயே
கொடும் கனலை ஏனப்பா
என் மேனியில் கொட்டினாய்
 
புத்தாடை மாட்டி மகிழ்ந்தவளே
நெருப்பாடை ஏனம்மா சூட்டினாய்
 
அதோ அதோ என் ஆசை தங்கை
புன்னகை சிந்திய பூமலரோ
சருகாய் எரிந்து கருகினாள்
உயிர் மெழுகாய் மெல்ல உருகினாள்
அவள் எழமுடியாமல் விழுகிறாள்
விழி திறக்காமலேயே அழுகிறாள்
 
வட்டி கட்டி வட்டி கட்டி
தீராத கடன் தொகைக்கு
உன் செல்ல குட்டிகளின்
உயிரை அல்லவா அடகுவைத்தாய்
 
அம்மா
முத்தத்தில் நீ நனைக்க வேண்டிய தேகத்தை
மொத்தமாய் தீ அணைத்தது
மரணத்தில் ஒன்றாய் பிணைத்தது
 
கந்து வட்டியின் கோரப்பசிக்கு
வெந்து தணிந்த உடல்களே உணவானது
எம் ஆசைகளோ வெறும் கனவானது
பணம் பணம் என பறந்தவர்களே
 
மக்களின் பிணம் தின்ன பிறந்தவர்களே
எங்களின் எரிந்த தேகத்தை கண்டபின்னும்
தீரவில்லையா உங்களின் தாகம்
மாறவில்லையா வட்டியின் மீதான மோகம்
 
ஏழைகளின் வயிற்றில் அடித்து அடித்து
இரத்தத்தை உறுஞ்சி எடுக்கிறீர்கள்
யுத்தத்தை நாள்தோறும் தொடுக்கிறீர்கள்
 
ஆளும் அரசாங்கமே!
இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டும்
வட்டியின் கொடுமையை நிறுத்த
இன்னும் எத்தனை தளிர்களை தீக்குளிக்க வேண்டும்
உங்களின் உதவாத சட்டத்தை திருத்த
 
எரிதழல் எம் உடல் எரித்த போது
எங்களின் பிஞ்சு உதடுகள் எழுப்பிய கூக்குரல்
வட்டியின் வலையில் வீழும்
எளியோரின் மரணத்தை தடுக்கட்டும்
சமூகத்தின் மௌனத்தை உதிக்கட்டும்..!
 

Kaleel Rahman AH

 – A.H கலீல் ரஹ்மான்

About idealvision

Check Also

சாந்த் முஹம்மது

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!   “வைரஸைக் கூட வென்றுவிடலாம். பசியை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *