பதிவுகள்
Home / அரசியல் / மோடி சரக்கார் தமது முந்தைய நிலைப்பாட்டில் இனியும் தொடரக்கூடாது
இக்வான் அமீர்

மோடி சரக்கார் தமது முந்தைய நிலைப்பாட்டில் இனியும் தொடரக்கூடாது

CLICK – இணைந்திருங்கள்

இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது .. மோடி சர்க்காரின் புளுகு மூட்டைகளைத் தவிர?
”””””””””””””””””””””””””’
இக்வான் அமீர்
””””””””””””””””””””””””””

நாட்டின் தென்பகுதியான தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள மலை அடிவார கிராமங்களான முருகன்பதி, அய்யன்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் பேருந்து வசதியில்லாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் வடபகுதியில் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை கரை சேர்த்த டிஜிட்டல் பொய்யுரை நாயகன் மோடி சர்க்கார் குதுகலம் அடைவதற்கு ஒன்றுமேயில்லை.

காங்கிரஸ் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் ஹிமாசலப் பிரதேசத்தின் அரியணையைப் பெற்றுத் தந்தது என்றால், குஜராத்தோ மோடி சர்க்கார் தில்லியை மறக்கடித்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் வேர்த்து விறுவிறுக்க செய்து தண்ணீர் காட்டியதை எப்படி மறக்க முடியும்? இத்தனைக்கும் குஜராத்தில் 2002 முதல் அடுத்தடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜகதான் ஆளும் கட்சி என்ற நிலையில் ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் போன்ற சின்னப் பையன்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி என்ற பொடியனும் சேர்ந்து தேர்தல் அறுவடைகளில் தேர்ந்த ஜாம்பவான்களான நரேந்திர மோடி – அமித் ஷா அண்ட் கோவுக்கு தண்ணீர் காட்டியதை இந்தியர்கள் எப்படி மறக்க முடியும்?

2002-ல், 182 இடங்களைக் கொண்ட குஜராத்தின் சட்டமன்ற தேர்தல்களில் 127 இடங்களைப் (49.8 விழுக்காடு) பெற்று ஆட்சி அமைத்த பாஜக அதைத் தொடர்ந்து 2007-ல், 117 இடங்களையும், 2012-ல், 115 இடங்களையும் தற்போது சரிந்துபோன வாக்கு விழுக்காடுடன் 99 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் எதிர்ப்பாளர்களை சுத்தமாக துடைத்திட கங்கணம் கட்டிய மோடி சர்க்காரின் தலையில் விழுந்த இடி இது.

குஜராத் சட்டமன்றத்தில் வெறும் 61 இடங்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தல்களில் முன்னேறி 77 இடங்களாக தனது பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. மாநிலத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளையும் பொடியன் ராகுல் காந்தி திரட்டியிருந்தால் பாஜக குஜராத்தைவிட்டே அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். நடுத்தர, விளிம்புநிலை, ஆதிவாசி, சிறுபான்மை இன மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நாட்டின் எல்லா பகுதிகளிலும், பண மதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு, இந்தியாவை அந்நியர்களிடம் தாரைவார்க்கும் பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைகள் சம்பந்தமாக நாட்டு மக்கள் அக்கட்சியின் மீது கடும் அதிருப்தியை கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றை எல்லாம் மறக்கடிக்கும் வித்த்தில் சமய காழ்ப்புணர்ச்சிகள் என்னும் அபினை அளவுக்கடந்து புகட்டி, உணர்ச்சியைத் தூண்டும் துவேஷக் கோஷங்களால் மக்களை திசைத்திருப்பி உத்திரப்பிரதேசத்தைப் போலவே மகத்தான அறுவடை செய்ய நினைத்த மோடி சர்க்கார்-அமித் ஷா அண்ட் கோக்கள் தோல்வியடைந்தார்கள் என்பதே உண்மை.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல்களின் பாஜகவின் வெற்றி மோடி சர்க்காரின் சர்வாதிகாரப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குஜராத்தில் உண்மையில் வெற்றிப் பெற்றது காங்கிரஸ்தான் என்று சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.

ராகுல் காந்தி நிச்சயம் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமேயில்லை என்று குறிப்பிட்டுள்ள சாம்னாவின் தலையங்கம், “இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக மூத்த தலைவர்களின் முகங்கள் இருண்டிருந்த நிலையில் ராகுல் காந்தி கவலைப்படாமல் செயல்பட்டார். இந்த நம்பிக்கைதான் அவரைத் தனது பாதையில் முன்னெடுத்துச் செல்லும்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில்தான் அனைத்தும் நடந்தது என்று நினைப்போர் மனிதப்பிறவிகளா? அல்லது முட்டாள்களா?

இந்தியா கடந்த ஓராண்டில்தான் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்காக 150 ஆண்டுகள் போராட்டம் நடத்தப்பட்டது என்பதெல்லாம் சுத்தப் பொய்!” – என்று புதியதொரு வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்று சாம்னா தலையங்கம் காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் வெற்றிகள் பாஜக கொண்டாட ஒன்றுமேயில்லை. 2019 தேர்தல் வெற்றிகளுக்கான முன்னோட்டமும் இதுவல்ல என்று மோடி சர்க்கார் உணர வேண்டிய தருணமிது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களின் கைப்பாவையாக பாஜகவும், அதன் இமாலய பிம்பமாக்கப்பட்டுள்ள மோடி சரக்காரும் தமது முந்தைய நிலைப்பாட்டில் இனியும் தொடரக்கூடாது என்று மேலெழுந்துள்ள சாமான்ய மக்களின் கலகக் குரல் இது.

  • இக்வான் அமீர்

About idealvision

Check Also

yaseen

2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!

`நேர்மைக்கு கிடைத்த பரிசு ’  2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!   ஈரோடு கனிராவுத்தர்குளம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *