பதிவுகள்
Home / ஆய்வுக்கட்டுரைகள் / பன்மைச் சமூகமும் இஸ்லாமும் – சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி
Syed Sadatullah Husaini

பன்மைச் சமூகமும் இஸ்லாமும் – சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி

CLICK – இணைந்திருங்கள்

பன்மைச் சமூகங்கள் குறித்து இரண்டு கோட்பாடுகள் இன்றையக் காலத்தில் மானுடவியல் வல்லுநர்களால் அதிகமாகப் பேசப்படுகின்றது. முதலாவது கோட்பாடு உருகுகின்ற பானை(Melting Pot) என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோட்பாட்டின்படி பன்மைச் சமூகம் ஒரு பானையாக உருவகப்படுத்தப்படுகின்றது. இந்தப் பானையில் ஊற்றப்படுகின்ற வெவ்வேறு பொருள்களும் உடைந்து, நொறுங்கி, உருகி, கரைந்து ஒற்றைப் பானமாக மாறிவிடுகின்றன. இந்தப் பானையில் இடப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் தம்முடைய தனித்தன்மையை, வண்ணத்தை, மணத்தை, சுவையை இழந்துவிடுகின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் கரைந்து, கலந்து முற்றிலும் மாறுபட்ட, புதிய நிறத்தையும் மணத்தையும் சுவையையும் ஏற்றுக்கொள்கின்றன.

இந்தப் பானையில் இடப்பட்ட பொருள்களில் எந்தப்பொருளின் அளவு அதிகமாக இருந்ததோ அதன் நிறமும் சுவையும் மணமும் தூக்கலாக இருந்துவிடுகின்றன. குறைவான அளவில் இடப்பட்ட பொருள் பானையில் இருக்கின்ற பொருள்களின் நிறத்தையும் மணத்தையும் வெகுவாகப் பாதித்தாலும் அது தன்னுடைய தனித்தன்மையையும் அடையாளத்தையும் இழந்துவிடுகின்றது.

இந்தியாவில் இந்து தீவிரவாத இயக்கங்கள் இந்தக் கோட்பாட்டைத்தான் ஆதரிக்கின்றன. அய்ரோப்பாவிலும் காலங்காலமாக இந்தச் சிந்தனைதான் காணப்பட்டு வந்தது. இப்போது இது தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவிலும் இந்தக் கோட்பாடு அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இரண்டாவது கோட்பாடு சாலட் கிண்ணம்(Salad Bowl) என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோட்பாட்டின் படி பன்மைச் சமூகம் சாலட் கிண்ணமாக உருவகப்படுத்தப்படுகின்றது. வெவ்வேறு விதமான காய்கள், பழங்கள் போன்றவற்றின் நறுக்குகளைக் கலவையாகக் கொண்டதாக சாலட் இருந்தாலும் அதில் இருக்கின்ற ஒவ்வொன்றும் தன் நிறத்தையும் மணத்தையும் சுவையையும் தக்க வைத்தவாறு தனித்து நிற்கின்றன. சாலட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்ட பிறகும் எந்தவொரு பழத்தின் தனித்தன்மையும் நிறமும் சுவையும் மாறுவதுமில்லை; மறைவதுமில்லை.

இஸ்லாம் சொல்வதென்ன?
************************************
மார்க்கத்தைத் தவிர விரும்பத்தக்கது என்கிற வரையறைக்குள் இருந்தவாறு நடையுடை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மெல்டிங் பாட், சாலட் பவுல் ஆகிய இரண்டு விதமான பன்மைத்தன்மையையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் celebrate தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றது. (‘நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’) .

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இந்த பன்மைத்தன்மையும் வேறுபாடுகளும் நிலைத்திருக்க வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. வெவ்வேறு வண்ணங்களையும் வெவ்வேறு வடிவங்களையும் கொண்ட அழகிய பூஞ்சோலையாய் சமூகம் ஜொலிக்க வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரே இஸ்லாமிய சமூகத்திற்குள் அரபு, துருக்கிய, மொகலாய, ஈரானிய, அபீசினிய, பர்பரியம் என வெவ்வேறு சமூகங்கள் செழித்தோங்கியதையும் (சாலட் கிண்ணத்தைப் போன்று) பார்க்க முடிகின்றது. உள்ளுர் சமூகங்களுடன் இஸ்லாமிய சமூகங்கள் இரண்டறக் கலந்து உருது போன்ற மொழிகள் தோன்றியதையும், பிரியாணி போன்ற உணவுகள் உருவானதையும் ஷெர்வானி போன்ற ஆடைகள் வடிவமைக்கப்பட்டதையும் பார்க்க முடிகின்றது (மெல்டிங் பாட்).

ஆனால் மார்க்கம், அடிப்படையான கோட்பாடுகள் போன்ற விவகாரங்கள் வருகின்ற போது இஸ்லாம் உருகுகின்ற பானை கோட்பாட்டை விரும்புவதில்லை. முஸ்லிம்கள் மற்ற பண்பாடுகளுடன் இரண்டறக் கலந்து விடுவதையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. மற்றவர்களைத் தன்னுடன் அரவணைத்துக்கொள்வதற்காகத் தன்னுடைய மணத்திலும் வடிவிலும் திருத்தங்களைச் செய்துக்கொள்வதையும் அது விரும்புவதில்லை. தன்னை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் கலப்படமில்லாத, தூய்மையான, உள்ளார்ந்தப் பின்பற்றுதலையும் கீழ்ப்படிதலையும்தான் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

மற்ற மதங்கள், மார்க்கங்கள், சித்தாந்தங்களுடன் இஸ்லாம் சாலட் பவுல் தியரியின் அடிப்படையிலான அணுகுமுறையையே விரும்புகின்றது. மற்றெல்லா மதங்களையும் மார்க்கங்களையும் சித்தாந்தங்களையும் சேர்ந்தவர்களுக்கு தத்தமது மதம், மார்க்கம், சித்தாந்த அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தை இஸ்லாம் தருகின்றது. இந்தச் சுதந்திரம் இறைவனின் நாட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தச் சுதந்திரத்தைக் கொடுத்துத்தான் இறைவன் மனிதர்களைச் சோதிக்கின்றான். மதம், மார்க்கம் ஆகிய விவகாரங்களில் எந்தவிதமான நிர்ப்பந்தத்தையும் இஸ்லாம் விரும்புவதில்லை. ஏனெனில் இவ்வாறு மற்றவர்களை நிர்ப்பந்திப்பது இறைவனின் நாட்டத்திலும் அவனுடைய ஏற்பாட்டிலும் இடையூறு செய்வதற்கு ஒப்பாகும்.

அதே சமயம் மார்க்கம் என்று வருகின்ற போது வெவ்வேறு வகையான கோட்பாடுகள், வாழ்க்கைத்திட்டங்கள் இருப்பதை இஸ்லாம் சகித்துக் கொள்கின்றதே தவிர, அதனைக் கொண்டாடுவதில்லை (celebrate). வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு தத்தமது மதங்களின்படிச் செயல்படுவதற்கான முழு உரிமையையும் இஸ்லாம் வழங்குகின்றது. ஆனால் சமூகத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களும் வாழ்க்கை பற்றியக் கோட்பாடுகளும் நிலைத்திருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விருப்பமும் அல்ல. இலக்கும் அல்ல. ஆசையும் அல்ல. மார்க்கம் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை சத்தியமா, அசத்தியமா என்கிற கேள்வியுடன் பிணைந்ததாகும். சத்தியத்தை ஏற்றுக்கொள்கின்ற அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற உரிமையை இஸ்லாம் தருகின்றது. ஆனால் சத்தியத்தையும் உண்மையையும் மனிதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் (முஸ்லிம்களின்) ஆசையாகும்.

இந்தப் பன்மைச் சமூகத்தில் இஸ்லாத்தின் பிரதிநிதிகளாய்த்தான் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வல்லமையையும் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் முஸ்லிம்களைப் பணிக்கின்றது. மக்களுக்கு தமக்கு விருப்பமான மதத்தையும் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்வதற்கான முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் தம்முடைய பேச்சு, தொடர்பு, உறவு, அழகிய நடத்தை, நடைமுறை வாழ்வு dialogue, communication போன்றவற்றின் துணையுடன் எத்தகைய இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனில் மக்கள் தம்முடைய சுதந்திரத்தை முழு மனத்துடன் பயன்படுத்தி சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகிவிட வேண்டும்.

– சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி
அகில இந்தியத் துணைத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

About idealvision

Check Also

சாந்த் முஹம்மது

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!   “வைரஸைக் கூட வென்றுவிடலாம். பசியை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *