பதிவுகள்
Home / ஆக்கங்கள் / குழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்?
child-poverty

குழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்?

CLICK – இணைந்திருங்கள்

எனக்கு ஏழு வயது இருக்கும்போது, எனது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே செல்வேன். கிராமப்புறங்களில் பால்யம் கழிந்த நமது அப்பாக்களின், தாத்தாக்களின் தலைமுறையிலோ, அன்றாடம் சர்வசாதாரணமாகப் பல கிலோ மீட்டர் தூரங்களைக் கடந்து சின்னஞ்சிறு சிறுவர்களும், சிறுமிகளும் தனியாகப் பயணித்துவருவார்கள். இப்போதெல்லாம் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ சாலையில், தெருக்களில் தனித்துக் காண நேர்ந்தால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. குழந்தைகள் இன்றைக்கு எத்தனை பெரிய ஆபத்துகளுக்கு மத்தியில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

1098 என்பது ‘சைல்ட்லைன்’ (குழந்தைகள் தொடர்பு) எனும் அரசு சாரா நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் 24 மணி நேர தொலைபேசி வசதியாகும். இவ்வசதி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் தொலைதொடர்புத் துறையின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில், 1098 அழைப்பு மையத்துக்கு அழைத்த நபர், பதற்றத்துடன் ஒரு விஷயத்தைச் சொன்னார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட, ஐதராபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள யாதகிரிகுட்டாவுக்கு அதிகாரிகள் குழு விரைந்தது.

குழந்தைகளுக்கு நேரும் கொடூரம்

யதாத்ரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாதகிரிகுட்டாவின் மலைப் பகுதியில், புகழ்பெற்ற லஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. அங்குள்ள பிசி காலனிக்கு அதிகாரிகள் குழு சென்றடைந்தது. தொலைபேசி அழைப்பில் குறிப்பிடப்பட்ட வீட்டுக்குச் சென்றபோது, வீட்டு வாசலில் ஒரு ஒன்பது வயதுக் குழந்தை, கைகளில் காயங்களுடன் அழுதுகொண்டிருப்பதைக் கண்டனர். அவர்களது கேள்விகளால் மிரட்சியடைந்த குழந்தை ‘சேட்டை செய்ததால் அம்மா அடித்துவிட்டதாக’ பதில் கூறினாள். இதனை நம்ப முடியாத அதிகாரிகள், அக்குழந்தையின் அம்மாவைத் துருவித் துருவி விசாரித்தனர். அக்குழந்தையைத் தான் ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.

அதுபோல, அங்கே நிறைய ‘அம்மாக்கள்’ இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. அந்தப் பகுதியில் குழந்தைகளை வைத்துப் பாலியல் தொழில் நடந்துவந்த அவலம் வெளியுலகத்துக்கு வந்தது அப்படித்தான். மேலும் பல வீடுகள் சோதனையிடப்பட்டு, 14 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டனர். 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் தகவல் அறிந்து தாங்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த குழந்தைகளுடன் தப்பிச் சென்றுவிட்டனர். நாம் நினைத்துப்பார்க்க முடியாத கொடுமைகள் அக்குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அருகில் இருந்த நர்சிங் ஹோமில் சோதனை நடத்திய காவல் துறையினர், 40 ஹார்மோன் ஊசி மருந்துகளைக் கைப்பற்றினர். மேலும், 11 குழந்தை கடத்தல்காரர்களையும் கைதுசெய்தனர். இவர்கள் குழந்தைகளைக் கடத்திவருவதும், தரகர்களிடம் விற்பதும், அக்குழந்தைகள் நிர்க்கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும், நீண்டகாலமாக நடைபெற்றுவருகிறதென காவல் துறை தெரிவித்தது. நீண்ட, சிக்கலான தொடர் பின்னல் வழியாக இந்தக் குழந்தைகள் கைமாற்றப்படுகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும், மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களைத் தேடிக் கண்டடைவதும் காவல் துறைக்குச் சவாலாக இருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத வலை

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஒதுக்குப்புறமான பகுதிகள் என்று பல்வேறு இடங்களிலும் செயல்படும் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்கள், சாக்லேட்டுகளையும், ஐஸ்க்ரீம்களையும் காட்டிக் குழந்தைகளைக் கடத்திச்செல்வதாகக் கூறுகிறார் நல்கொண்டாவின் மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவர் நிம்மைய்யா. பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் கொடுமையும் நிகழ்கிறது.

ஐந்து வயதுக் குழந்தைகள்கூடக் கடத்தப்பட்டு ஆந்திரா, தெலங்கானா பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படுவதாகச் சோதனைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி தெரிவிக்கிறார்.

அக்குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்த்து, அவர்களுக்கு 10 வயது நிரம்புவதற்குள் அவர்களை ‘குடும்ப’ ரேஷன் கார்டிலும் சேர்த்து, குடும்ப உறுப்பினர்கள்போல காட்டிவிடுகிறார்கள். பொய்யான பெற்றோர்களின் பெயர்களில் அவர்கள் பள்ளியில் படித்ததற்கான சான்றுகளும் உருவாக்கப்படுகின்றன. பின்னர், பள்ளியிலிருந்து அக்குழந்தைகள் நிறுத்தப்படுவார்கள்.

ஒரு சிறுமிக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவளும், ஐந்து சிறுமிகளும் அவர்களது உண்மையான பெற்றோருடன் சேர்க்கப்பட்டுவிட்டனர். பெற்றோர் கண்டறியப்படாத, 12 வயதாகும் ஒரு குழந்தை நல்கொண்டாவில் உள்ள ஹெச்.ஐ.வி. குழந்தைகளுக்கான காப்பகத்தில் இருக்கிறாள். “அச்சிறுமிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை. ஆனால், அவள் அந்தக் காப்பகத்திலேயே விடப்பட்டிருக்கிறாள். இந்த விஷயங்களைக் கையாள்வதில் அரசு முழுமையான அக்கறை காட்டுவதில்லை” என்கிறார் நிம்மைய்யா.

காவல் துறையின் அலட்சியம்

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016-ல் மட்டும் இந்தியாவில் 63,407 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதாவது, அன்றாடம் 174 குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவர்களில் 50% குழந்தைகள் திரும்பக் கிடைக்கவேயில்லை. ஒரு குழந்தையைத் தேடுவதில் காவல் துறை எவ்வளவு காலதாமதம் செய்கிறதோ, அந்த அளவுக்கு அக்குழந்தை மீண்டும் கிடைப்பது கடினமானதாகிவிடுகிறது.

ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாகப் புகார் வந்த மறுகணமே, காவல் துறை, ஆள்கடத்தலுக்கான முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என 2013-ல் வெளிவந்த உச்ச நீதிமன்ற உத்தரவு வலியுறுத்துகிறது. “ஆனால், காவல் துறை தரப்பில் இந்த அம்சத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. அவர்கள் ஓடிப்போயிருப்பார்கள், திரும்ப வந்துவிடுவார்கள் எனக் குடும்பங்களிடம் சொல்லப்படுகின்றன. இதன் மூலம், முக்கியமான நேரம் விரயமாக்கப்படுகிறது. விசாரணை தொடங்குவதற்குள், அக்குழந்தை அம்மாநிலத்தை விட்டே காணாமல் போய்விடுகிறது” என்கிறார் நிம்மைய்யா.

சற்றே வளர்ந்த சிறார்களைப் பொறுத்தவரை (10-12 வயது), “ஒவ்வொரு ஐந்து நிமிடமும், நாட்டின் ரயில்வே பிளாட்பாரங்களில் ஏதோ ஒரு குழந்தை யார் துணையுமின்றி வந்துசேர்கிறது” என ‘ரயில்வே குழந்தைகள்’ எனும் வீதியோரச் சிறாருக்காக வேலை செய்யும் சர்வதேச அமைப்பு கூறுகிறது. ‘காணாமல் போகும் குழந்தை’களில் நிறையப் பேர், பெற்றோரின் அடி, உதைக்குப் பயந்தோ, பள்ளிகளில் தண்டனைக்குப் பயந்தோ, சினிமா நடிகராகும் கனவுடனோ இவ்வாறு வந்திறங்குகிறார்கள் என அவ்வமைப்பின் ஜூலை மாத அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆபத்து நிறைந்த காப்பகங்கள்

அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற தனியார் காப்பகங்களில் வளரும் குழந்தைகளையும், சிறுவர்களையும், சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை உத்தர பிரதேசத்தின் தியோரியா காப்பகம், பிஹாரின் முஸாஃபர்பூர் காப்பகம், அயனாவரம் காப்பகம் என்று அன்றாடம் வெளியாகும் செய்திகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.

சமீபத்தில், சைல்ட்லைன் ஃபவுண்டேஷன் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவில் மொத்தம் 9,589 குழந்தை காப்பக நிறுவனங்கள் உள்ளன என்றும், அவற்றில் உள்ள குழந்தைகளில் 1,575 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இதைத் தெரிவித்திருக்கிறது. அவ்வழக்கின் நீதிபதி மதன் பி.லோகுர், “அந்தக் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? 1,575 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அந்தக் கேள்விகள் மத்திய அரசுக்கானவை மட்டும்தானா?

– சரவணராஜா, எழுத்தாளர்

நன்றி – தி ஹிந்து தமிழ்

About idealvision

Check Also

isis

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் —————————————- ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *