Saturday , September 19 2020
பதிவுகள்
Home / அரசியல் / நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..! – நிஷா மன்சூர்
நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..!
நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..!

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..! – நிஷா மன்சூர்

 

நிஷா மன்சூர்CLICK – இணைந்திருங்கள்

நீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்..!

எமது மதச்சார்பற்ற சோசலிச
ஜனநாயகக் குடியரசில்
குடிமக்களின் ஒரு சாராரின்
வணக்கத்தலத்தை இடித்துத் தள்ளியது ஒரு கும்பல்

இடிக்கும் அரசியலுக்கும்
காக்கும் அரசியலுக்கும்
இடையே ஊடாடிக் கலைக்கும் அரசியலுக்கும்
இரையான சமூகம் அரசியலற்றுத் திகைத்தது.

இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த
புன்னகையின் சுவையறியாத சிந்தனை மலடரை
அரசியல் சாதுர்யம் மிகைத்த தலைவரென
நம்பிக் கழுத்தறுபட்டு வீழ்ந்தது.

பின்னர் யாம் நீதிக்கான போராட்டத்தில் இறங்கினோம்
சாலைகள் சிறைச்சாலை ஆகின
எமது தாடி ரோமங்கள்
வெறுப்பின் தீவைத்துப் பொசுக்கப்பட்டன
எமது தொழுகைத் தொப்பிகள்
சந்தேகப் பார்வையால் கிழிக்கப்பட்டன
எமது பிரார்த்தனைப் பாய்கள்
பசுங்குருதியின் செறிவால் மெழுகப்பட்டன.

எமது நீதி தேவதைகளின் கண்கள்
பாலிடிக்ஸ் லென்ஸில் கலைடாஸ்கோப் விளையாடின
எமது நம்பிக்கை நட்சத்திரங்கள்
சிம்மாசன பேரங்களில் கருகிச் சாம்பலாயின

கரசேவைக்கு கரம் கொடுத்த அன்புச்சகோதரி
ஞானோதயம் வந்தபின் பிரகடனம் செய்தார்
“உங்களது ரத்தம் பரிசுத்தமானது,
எமக்கு ஆதரவளித்து எம் குருதித்தாகம் தீர்ப்பீர்”
அதற்குள் எம்மில் பலர்
குருதியுறுஞ்சப்பட்ட சக்கையாய் வீசப்பட்டனர்.

நான் கைலி கட்டாத முஸ்லிம்
என் நிழலில் வசிப்பதே உங்களுக்கு பாதுகாப்பு
என்றவரிடம்
ஆன்மாவுடன் அடைக்கலமானோம்
அவரோ எம் வணக்கத்தலத்தை இடித்த
கும்பலுடன் கூட்டுச்சேர்ந்து
எம் சதைகளைப் புசித்து சாணக்கியத்தனம் புரிந்தார்

கரசேவை முழக்கத்தில்
துண்டிக்கப்பட்ட கழுத்துகள் பல்லாயிரம்.
ராமர் கோவில் முழக்கத்தில்
ஓட்டிய ரத்தம் பலகோடி லிட்டர்.

இரண்டாயிரம் தலைவாங்கிய இரண்டாம் ஹிட்லர்
சூதரசியலில் தேர்ந்து
வளர்ச்சி கோஷத்தில் வாகை சூடினார்,
மதச்சார்பற்ற எமது பரிசுத்த தேசத்தைக்
காவி இருள் சூழ்ந்து களங்கப் படுத்தியது.

வெறியூட்டப்பட்ட மிருக கும்பல்
கொலைவெறியுடன் குறிவிரைத்தலையத் துவங்கியது.
எமது உள்ளாடைகள் விலக்கிப் பார்க்கப்பட்டன
எமது உணவுத் தட்டுகள் ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டன
எமது இரைப்பைகள் பரிசோதிக்கப் பட்டன
இச்சைக்கோரைப்பல் நீண்ட ஆயிரம் கண்கள்,
எமது மகளிர் முக்காடுகளைச் சுழன்று மொய்த்தன.

திடீரென அவர்களது சனாதன கண்டுபிடிப்பு அறிவித்தது,
எமது ரத்த நாளங்களில்
சந்தேகத்திற்கு உரிய தேசவிரோத அணுக்கள்
ஓடிக்கொண்டிருப்பதாய்…

ஹைதர் அலியின் நீதத்தின் வாள்
எமது கையறுநிலை குறித்துக் கண்ணீர் உகுத்தது
திப்புசுல்தானின் தேசபக்த நெஞ்சுரம்
எமது கழிவிரக்கத்தின் சுவடை அகற்றியது
வள்ளல் ஹபீப் முஹம்மதின் தியாகக்கொடை
எமது எதிர்ப்புணர்வின் கனலை ஊதிப் பெருக்கியது
மாப்பிள்ளைமார்களின் உயிர்த் தியாகம்
எமது முதுகெலும்பின் மஞ்ஞையில் உரமூட்டி உயிர்ப்பித்தது
குஞ்ஞாலி மரைக்காயரின் வீரத்தின் வீச்சு
எமது வாழ்நெறியைச் செறிவூட்டிக் காத்தது

அபுல் கலாம் ஆசாத்தின்
பதாகை கொண்டு போராடினோம்
எல்லைகாந்தி கான் அப்துல் கபார்கானின்
மேலாடை கொண்டு மானம் மறைத்தோம்
கிலாபத் இயக்க அலி சகோதரர்களின்
தியாகத்தின் கண்ணீரால் எமது தாகம் தீர்த்தோம்
மருதநாயகத்தின் அடங்காத சுதந்திரத் தகிப்பு
எமது நம்பிக்கையின் சுடரை தூண்டிவிட்டது.

வீதிகளிலும் நீதிமன்றங்களிலும்
கடைத்தெருக்களிலும் கடற்கரைகளிலும்
சட்டசபையிலும் சமதர்ம சபைகளிலும்
எமக்கான குரல்களின் முழக்கங்கள்
விண்ணையும் மண்ணையும் பிளக்கின்றன.

மண்வாசனை ததும்பும் விவசாயக் களங்களிலிருந்து,
மீன்கவுச்சி அகலாத
உக்கடம் தினச் சந்தையிலிருந்து,
கிரீஸ் கறைபோகாத
பழைய இரும்புக் கிடங்குகளிலிருந்து,
வியர்வை நசநசக்கும்
உஸ்மான் ரோடு நடைபாதைக் கடைகளிலிருந்து,
மூச்சுக் காற்றில் மணற்துகள்கள் நறநறக்கும்
பாலைவன வெளிகளிலிருந்து,
உப்புக்காற்று தகிக்கும் துறைமுக கண்டெய்னர் இடுக்குகளிலிருந்து,
குளிரூட்டப்பட்ட மென்பொருள் நிறுவனங்களின்
நாகரீக அறைகளிலிருந்து,
வீரியத்துடன் தொடர்கிறது
நீதிக்கான எமது போராட்டம்,
“காப்பாற்றியே தீருவோம் இந்திய இறையாண்மையை;
எழுப்பியே தீருவோம் பாபர் மசூதியை”

நீதமிகு நெஞ்சங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன
“பாபர் மசூதியை இடித்தது மாபாதகச் செயல்”

அநீதிக்கெதிரான குரல்கள் ஒலிக்கத் துவங்கி விட்டன
“பாபர் மசூதியை கட்டியெழுப்புவதே நீதி”

அறத்தின்பாற்பட்ட நெஞ்சங்கள் உறுதிபடக் கூறுகின்றன,
“மசூதியை எழுப்பியே தீரவேண்டும்”

இந்திய தேசத்தின் நூற்றி முப்பது கோடி ஆன்மாக்கள் ஒத்திசைக்கின்றன,
“பாபர் மசூதி முஸ்லீம்களின் உரிமை”

இந்த சத்தியத்தின் தீர்ப்புக்குரல்
நீதிமன்றத்தில் உத்தரவாக்கப்படும் நன்னாளை
இன்னொரு பெருநாளாகக் கொண்டாடக்
காத்துக் கொண்டிருக்கிறது இந்திய சமூகம்.

புதிய விடியல் டிசம்பர் இதழிலிருந்து 
  • நிஷா மன்சூர் கவிதை 

About idealvision

Check Also

சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *