Saturday , September 19 2020
பதிவுகள்
Home / அரசியல் / தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது. M.அப்துல் ரஹ்மான் Ex MP
Abdul Rahman IUML

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது. M.அப்துல் ரஹ்மான் Ex MP

CLICK – இணைந்திருங்கள்

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று தேர்தல் முடிவுகள் வருகிற மே 23ல் வரவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 17வது மக்களவை அமையவிருப்பதை நாம் மட்டுமல்ல; உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தருணம் இது. காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வெளியுறவு விவகாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு பல நாடுகளுக்கும் உண்டு.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நம் நாட்டு அரசியல் நிலவரம்,பொருளாதார கட்டமைப்பு, உலக அரங்கில் நம் நாட்டு பண மதிப்பு நிலை, ஏற்றுமதி & இறக்குமதி மதிப்பீட்டில் நடப்பு கணக்கின் பற்றாக்குறை, தன்னாட்சி நிறுவனங்களான ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை, நீதித் துறை, தலைமை தேர்தல் ஆணையம் போன்றவைகளின் சுதந்திரமான செயல்பாடுகள், மதச்சார்பின்மை போன்ற அதிமுக்கிய அம்சங்களின் மீதுள்ள நமது கவலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

கடந்த ஐந்து ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு சந்தித்த அவலங்கள் தொடர்ந்திடக்கூடாது என்கிற பார்வையில் தேர்தல் முடிவுகள் அமைந்திட வேண்டும் என்பது தான் நாட்டில் நல்லவர்கள் கொண்டிருக்கும் எண்ணம்.

‘‘மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் இருப்பதால் இந்த ஆட்சி தொடராது’’ என்று பலராலும் பேசப்பட்டாலும் ஒரு விதமான அச்சம் சூழ்ந்த கவலை நம்மைச் சுற்றி படர்ந்து இருப்பதையும் மறுக்க முடியாது. பல்வேறு செய்தி ஊடகங்களில் திட்டமிட்ட பரப்புரை நரேந்திரமோடிக்கு சாதகமாகத் தென்படுவதோடு சில கணிப்புகளும், கணக்குகளும் நம்மை உறங்கவிடாமல் ஆக்கி, ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்குகின்றன.

அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் பல பகுதிகளில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஒருங்கிணைப்பு குலைந்துபோய் வாக்குகள் பிரிந்து போகிற அபாயம்.
உதாரணத்திற்கு; மத்தியில் ஆட்சிக்கு வரப் போகிற கட்சியை அடையாளம் காட்டுகிற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை மாயாவதி & அகிலேஷ் யாதவ் கூட்டணியும், காங்கிரசும் பிரிக்கின்றன.

ஆளும் கட்சியான பாஜக அந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் எப்படியும் 60 தொகுதிகளை வென்று காட்டுவோம் என்று மார்தட்டுகிறது. அதற்கேற்ப தேர்தல் களத்தை தங்களுக்கு சாதகமான வலிமை கொண்டதாக காண்பிக்க மாநிலத்தின் நான்கு அமைச்சர்கள் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவாளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொள்ள இயலவில்லை. அங்கேயும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் ஒருங்கிணைக்கப் படவில்லை.

இதேபோல்தான் ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம் என்று பட்டியல் நீள்கிறது.
இப்படி சிதறடிக்கப்படுகிற வாக்குகளால் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வாய்ப்புகளை அதிகம் பெற்று நாம் எதிர்பார்க்கிற ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போகுமானால் தேசம் என்னாவது? என்கிற திகைப்பும் அவ்வப்போது மனதில் எழுந்து முறைக்கிறது.

இதனையும் தாண்டி, தேர்தல் வியூகங்களை மிகச் சரியாக அமைத்துக் கொண்டு, சரியான திட்டமிடுதலோடு தேர்தல் களத்தை சந்திக்கும் பாஜகவின் அசுர பலத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் பிரதான தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி எல்லா மாநிலங்களிலும் சரிவர களம் காண்கிறதா? என்கிற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. முக்கிய காரணம் அதன் கோஷ்டி பூசல்கள் தான்.

எது எப்படியானாலும் மத்தியில் பாஜக ஆட்சியை எதிர்க்கும் காங்கிரஸ் மற்றுமுள்ள மாநிலக் கட்சிகள் அதிகமான இடங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அப்படியே தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டாலும் யார் பிரதமராக வேண்டும்? என்பதில் மாநில கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் போனால் என்னாவது? என்கிற கேள்விக்கு தெளிவான பதில் கிடைக்காமல் இருக்கிறோம்.
இவைகளெல்லாம் எதார்த்தமான எண்ண அலைகளே தவிர குழப்பங்கள் அல்ல. எனவே எதிர்மறையாகவே ஏன் சிந்திக்கிறோம்? என்று எண்ணிவிடலாகாது.

ஒருவேளை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குக் கிடைத்திடும் இடங்களைக் கொண்டு ஆட்சி அமைப்பதற்கு இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று வருகிற போது சில மாநில கட்சிகளின் வரவை இழுத்துப் பிடிப்பதற்கு தனது பணபலம், அதிகார பலம் ஆகியவைகளைக் கொண்டு பாஜக முண்டியடித்துக்கொண்டு நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்படி ஒருவேளை பாஜகவின் ஆட்சி தொடர்ந்திடுமேயானால் நரேந்திர மோடியின் அத்துமீறல்களும், வரம்புமீறிய துணிச்சல்களும் அதிவேகம் எடுக்குமே! என்ன செய்யப்போகிறோம்? முதலில் சிறுபான்மை சமுதாயம் எல்லா வகைகளிலும் துண்டாடப்படுகிற திட்டங்கள் வரையறுக்கப்படும்.

நம்முடைய ஷரியத் சட்டத்திற்கு எதிரான அம்புகள் மிக அதிகமான வேகத்தில் பாயும் அபாயம் இருக்கும். நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் மோசடி அரங்கேறவும், ஆர்எஸ்எஸ்சின் மத துவேஷ விளையாட்டுக்கள் அதிகரிக்கவும், நாட்டில் நல்லிணக்கம் தகர்க்கப்படவும், பண முதலைகளின் பரிவாரங்கள் மேலும் மேலும் பட்டங்கள் கட்டவும், ஏழைகளின் வாழ்வு நிலை மேலும் மேலும் படுபாதாளத்திற்கு தள்ளப் படவும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அத்துணை துறைகளும் சர்வாதிகார அகழிக்குள் ஆழ்த்தப்படவும் எண்ணிலடங்கா வாய்ப்புகள் உள்ளன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியாயத்திலும், நேர்மையிலும் பிடிவாதமாக இருப்பவர்; அவரை பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்க முடியாது என்பதால் அவரின் இல்லத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என செயற்கையாக ஒரு புது கதையை அவிழ்த்து விட்டு அவரை எப்படியாவது ராஜினாமா செய்ய வைத்து விட இப்போது சதித்திட்டம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தன்னுடைய தலைமை நீதிபதி பதவியை முடக்குவதற்கு பெரிய சக்திகள் திட்டமிடுவதாகவும், தன்னுடைய நேர்மையையும், கௌரவத்தையும் குலைப்பதற்கு மிகப் பெரிய சதி நடப்பதாகவும், உச்சநீதிமன்றம் சில முக்கியமான வழக்குகளில் வழங்கவிருக்கும் தீர்ப்புகளை முடக்குவதற்கு சிலர் முனைகிறார்கள் என்றும், அதற்கெல்லாம் தாம் அஞ்சப்போவதில்லை; துணிந்து எதிர்கொள்வேன் என்றும் தலைமை நீதிபதி சொல்லியிருப்பது தேசத்தின் கவனத்தையே திருப்பி இருக்கிறது.

எவ்வளவு பெரிய மோசடி? பணத்திற்கு சோரம் போகாத ஒரு நீதிபதி பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் பாதகமான தீர்ப்பை தரப்போகிறார் என்று அறிந்த பின் அந்த நீதிபதியையே தீர்த்துக்கட்டி விட்டார்கள் படுபாவிகள் என்கிற பேச்சு நாட்டில் மறந்து போவதற்குள்ளாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகாய் மீதான அவதூறு குற்றச்சாட்டு இந்த தேசத்தின் அவமானம் அல்லவா?

சென்ற ஆண்டு இதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு வேண்டுமென்றே ஒதுக்குவதில்லை எனவும், தேசத்தின் பாதுகாப்பு நீதித்துறையில் கேள்விக்குறியாகி விட்டது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களுக்கு பகிரங்க பேட்டி கொடுத்தனர். இந்த அவலமும் இதே பெரிய சக்திகளின் கைவரிசையை தவிர வேறு எது?

ஆக, நாடு மிகப்பெரும் அபாயத்தையும், மிகக் கீழான அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது என்பது மட்டும் மிகத் தெளிவாக தெரிகிறது.

இதற்கெல்லாம் பின்புலமாக இருக்கக்கூடிய நரேந்திர மோடியின் அரசு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்; தேசம் காப்பாற்றப்படவேண்டும்; நாடு தலை நிமிர வேண்டும்; நல்லோரின் ஆட்சி மலர்ந்திட வேண்டும் என்பதே தேசத்தின் நலவிரும்பிகள் எதிர்பார்க்கும் இலக்கு.

இறைவா! இந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம்; பலன் கிடைத்திட உன் பெருங்கருணையை வேண்டி நிற்கிறோம்; அருள் புரிவாயாக!

அன்புடன்,

M.அப்துல் ரஹ்மான்,
ஆசிரியர்,
#பிறைமேடை மாதமிருமுறை.

About idealvision

Check Also

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? அ. முஹம்மது கான் பாகவி

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? +++++++++++++++ அ. முஹம்மது கான் பாகவி கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *