பதிவுகள்
Home / அழைப்பியல் / பிறை 11 – கடமை தரும் கட்டுப்பாடு

பிறை 11 – கடமை தரும் கட்டுப்பாடு

CLICK – இணைந்திருங்கள்
பிறை நிலாக் காலம் — பிறை 11
வி.எஸ்.முஹம்மது அமீன்
 
ஓய்வற்றுத் திரிகின்ற எந்திர வாழ்வில் சற்றே இளைப்பாறுதலைத் தருகின்றன இஸ்லாமிய வழிபாடுகள்.உலக வாழ்வில் மூழ்கிவிடாமல் மனிதனைக் கைப் பிடித்துக் கரை சேர்த்துக்கொண்டிருப்பவைதாம் இறை வழிபாடுகள்.
 
உணவிற்காய் ஓடிக்களைத்த மனித இதயங்களில் இதமான நிழல் பரப்பி நிற்கிறது நோன்பு.சுய கட்டுப்பாடு என்னும் மகத்தான நன்மையை நோன்பு அடியானுக்குப் பரிசாகத் தருகிறது.மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா? என்னும் கேள்வியின் விடைதான் நோன்பு.
 
‘எனது இராணுவத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருந்தால் என்னால் வெற்றிக் கனிகளை எளிதாகத் தட்டிப்பறிக்க முடியும்.ஏனென்றால் நீண்ட நேரமாக உணவருந்தாமல், நீரருந்தாமல் இருக்கும் கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கிறது’என்பது மாவீரன் நெப்போலியனின் கூற்று.
 
இது சுய கட்டுப்பாடு (self discipline). வகை வகையாய் உண்ணப் பழகிய மனிதனுக்குத் தரப்படுகின்ற நுகர்வுக் கட்டுப்பாடு.வாட்டும் பசி ஒருபுறம்; மணக்கும் ருசி மறுபுறம்! இடையிலே நிறுத்தப்படுகின்றான் மனிதன்.அடடா என்ன ஒரு பயிற்சி பாருங்கள்!
 
அடுத்ததாக நேரக் கட்டுப்பாடு.குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவருந்தி முடித்திட வேண்டும்.அதுபோல நோன்பு துறப்பதும் குறிப்பிட்ட நேரத்தில் துறந்துவிட வேண்டும்.இந்த நேர நிர்வாகப் பயிற்சி நோன்பில் மட்டுமல்ல இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளிலும் இருக்கிறது.
 
தொழுகை ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை குறிப்பிட்ட நேரங்களில் மிகமிகச் சரியாக நிறைவேற்றப்படும்.தொழுகை நடத்தும் தலைமை இமாமே இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருகிறாரென்றால் அவருக்காக யாரும் காத்திருப்பதில்லை.குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை தொடங்கிவிடும்.தாமதமாக வந்த தலைமை இமாம் கடைசி வரிசையில்தான் நின்று தொழ வேண்டும்.
 
ஹஜ் என்னும் வழிபாடும் அப்படித்தான். துல்ஹஜ் ஒன்பதாம் பிறை நாளில் அதிகாலைக்குப் பின் அரஃபா என்ற மைதானத்தில் கூடவேண்டும்.மஃரிப் தொழுகைக்கான அழைப்பு விடுத்ததும் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.கோடிக்கணக்கான மக்கள் கூடினாலும் நேர ஒழுங்கு
பேணப்படும்.
 
அடுத்ததாகக் கீழ்ப்படியும் பண்பு.படைத்த இறைவனின் கட்டளையை அப்படியே ஏற்றுப் பின்பற்றுதல். நான் சம்பாதித்து நான் சமைத்த எனக்கான உணவு என் வீட்டில் நிரம்ப இருந்தாலும் இறைவன் கட்டளையிட்டால் அதையும் துறக்க நான் தயார்.
 
மதுப்பழக்கத்தை விட முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடையே தாகத்திற்குக் கூட தண்ணீர் அருந்தாமல் அத்தியாவசியத்தைக்கூட விட்டொழிக்கும் மனிதர்கள் இருக்கின்றார்களென்றால் அது இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் பண்பல்லவா…!
 
இத்தகைய உயர் பண்பு நலன்களால் மனிதன் மாண்புமிக்க மகத்தான மனிதனாக மாறிவிடுகின்ற நன்மைகளை நோன்பு தந்துகொண்டிருக்கிறது.அதுமட்டுமல்ல சமத்துவம் என்ற உயரிய நன்மையையும் நோன்பு விதைக்கின்றது. நோன்பில் என்ன சமத்துவம் என்னும் கேள்வி எழுகிறதல்லவா…?
 
இறைவன் நாடினால்…
நாளை தோன்றும் பிறை

About idealvision

Check Also

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? அ. முஹம்மது கான் பாகவி

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? +++++++++++++++ அ. முஹம்மது கான் பாகவி கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *