பதிவுகள்
Home / அழைப்பியல் / பிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..!
பிறை 29

பிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..!

பிறை நிலாக் காலம் — பிறை 29
வி.எஸ்.முஹம்மது அமீன்
 
பயிற்சிகள் பழக்கமாகட்டும்..!
 
‘ஒரு மனிதன் புதுப்பழக்கத்தினை வழக்கமாக்கிக் கொள்வதற்கோ, வழக்கமாகிப்போன பழக்கத்தை விட்டொழிப்பதற்கோ அவனுக்குத் தொடர் பயிற்சி தேவைப்படுகின்றது.ஓரிரு நாள்களில் எப்பழக்கமும் கைவரப்பெறாது. 25 முதல் 30 நாள்கள் வரையிலான பயிற்சிகள் பழக்கமாகவே மாறிவிடும்’ என்பது உளவியலாளர்களின் ஒருமித்த கருத்து.
பசியறிதல்,இச்சையடக்குதல்,பொய்,புறம் போன்ற தீயபழக்கங்களிலிருந்து விடுபடுதல், நின்று வணங்குதல், இறைத் தொடர்பு, திருமறையோடு தொடர்பு, வரையறாது வழங்குதல் போன்ற பல பயிற்சிகளை நோன்பு ஒருமாதகாலம் வழங்கியது.
 
இப் பயிற்சிகள் யாவும் முழு வாழ்விலும் நடைமுறைப் படுத்துவதற்காகத்தான்.இராணுவத்திலோ,காவல்துறையிலோ ஓரிரு மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.அந்தப் பயிற்சிகளைப் பெற்றுதான் அவர்கள் பணியாற்றுவார்கள்.ஆண்டுக்கணக்கில் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு இந்தப் பயிற்சிகள் அவசியமாகிறது.பயிற்சிகளின்றி பணிகள் செம்மையடையாது.
 
இஸ்லாம் வழங்கும் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.பயிற்சியின் சங்கிலித்தொடர் அறுந்துபோகமலிருக்க சில வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.ரமளான் மாதத்தின் நோன்பு என்பது கட்டாயக்கடமை.அது தவிர நபிவழியில் சில நோன்புகளும் இருக்கின்றன.அந்த நோன்புகள் கட்டாயக் கடமையல்ல.விரும்பியவர்கள் நோற்கலாம்.நபி(ஸல்)அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள்.இந்த வழிமுறையைப் பின்பற்றி பலர் மாதம் மூன்று நோன்பிருக்கின்றனர்.
 
நோன்புப் பயிற்சி சட்டென முடிந்துபோவதில்லை.பெருநாள் முடிந்ததும் ஆறு நோன்புகள் நோற்கவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.இந்த நோன்புகளும் கட்டாயமில்லை.விரும்பியவர்கள் வைக்கலாம்.
 
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
‘யார் ஒருவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாள்கள் நோன்பிருக்கின்றாரோ அவர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.’
 
ஆறு நோன்புகள். மாதம் மூன்று நோன்புகள், நபி(ஸல்)அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி முஹர்ரம் மாதம் ஒன்பது,பத்து ஆகிய இருநோன்புகள்,ஆஷுரா நோன்பு, துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அரபா நோன்பு , விருப்ப நோன்புகள் என்று நோன்பின் நிழல் தொடர்கின்றன.
 
ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் ஜகாத் எனும் தர்மம் கட்டாயக்கடமை.அது தவிர பிற நாள்களில் ஸதக்கா எனும் தர்மம் வழங்குவதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 
நோன்பும்,தொழுகையும், தர்மமும் பிற மாதங்களிலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.இறைவனின் கட்டளைகளும்,இறைத்தூதரின் வழிகாட்டுதல்களும், திருமறையின் நெறிகாட்டலும் உலக முடிவின் இறுதி நொடித்துளிவரை மட்டுமல்ல மனித மரணத்திற்குப் பிறகும் மறுவாழ்வாய்த் தொடரும்.
 
தொடர்ந்து நோன்புச் செய்திகளோடு வளர்ந்த இப் பிறைத்தொடர் இறுதியாய் ஒருசில வார்த்தைகளுக்காய் நாளையும் வரும்.
 
இறைவன் நாடினால்
நாளை வருமே நிறைபிறை

About idealvision

Check Also

பிறை 27

பிறை 27 – ஈரம் கனிந்த வீரம்

பிறை நிலாக் காலம் — பிறை 27 வி.எஸ்.முஹம்மது அமீன்   ஈரம் கனிந்த வீரம்   அதிகாலைத் துயிலெழுந்து, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *