பதிவுகள்
Home / அழைப்பியல் / ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Zakat-al-Fit

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
 
ஈகைத்திருநாள் என்னும் ஈதுல ஃபித்ரு அன்று ஏழை-எளியோருக்கு வழங்க வேண்டிய கொடை ஸதக்கத்துல்ஃபித்ரு அல்லது ஸகாதுல் ஃபித்ரு எனப்படுகின்றது.
.
ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்தபிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது.
.
ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை எளிய முஸ்லிம்களும் ஈதுப் பெரு நாளை மகிழ்ச்சியோடு கொண் டாட வேண்டும். இல்லாமை அவர்களுடைய சந்தோஷத்திற்கு தடையாக ஆகிவிடக் கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம். (அபு தாவுது, இப்னு மாஜா)
.
யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?
.
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானோர் அனைவரும் கட்டாயம் கொடுத்தாகவேண்டும். (புகாரி, முஸ்லிம், அபுதாவுது, நஸாயி, திர்மிதீ, அஹ்மத்)
.
தான-தருமம் பெறத்தகுதியில்லாத அனைவரும் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுத்தாக வேண்டும். இவ்வளவு இருந்தால்தான் கொடுக்கவேண்டும் என்னும் நிபந்தனை எல்லாம் கிடையாது.
.
ஒரு நாளுக்கு அதிகமான உணவு வீட்டில் இருந்தால் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுத்தாக வேண்டும். கடன் வாங்க முடிந்தால் கடன் வாங்கி ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.
.
எப்போது கொடுக்க வேண்டும்?
.
ஈது தொழுகைக்காக தொழுகைத் திடலுக்கு போவதற்கு முன்னால் கொடுத்து விடவேண்டும். அப்போதுதான் கடமை நிறைவேறும். தொழுதபிறகு, கொடுத்தால் தான-தருமமாகக் கருதப்படுமே ஒழிய, ஃபித்ரு கடமையை நிறைவேற்றியதாக ஆகாது.
 
எவற்றைக் கொடுக்க வேண்டும்?
 
நபிமொழிகளில் ஏழு பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை
 
(1) தீட்டாத கோதுமை
 
(2) பேரித்தம் பழம்
 
(3) சோளம்
 
(4) பாலாடைக் கட்டி
 
(5) உலர்ந்த திராட்சை
 
(6) வறுக்கப் பட்ட தானிய மாவு
 
(7) கோதுமை மாவு
.
(8) உணவுப் பொருள். இப்பொருட்களில் இருந்து ஏறக்குறைய 2650 கிராம் (இரண்டே முக்கால் கிலோ) அளவு கொடுக்கவேண்டும்.
 
நிர்ணயிப்பது சரியா?
 
ஸதக்கத்துல் ஃபித்ரு இவ்வளதான் என நிர்ணயிப்பது ஷரீஅத்தில் வழிகாட்டப்படவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறையும் வசதிகளும் வேறுபடுகின்றன. நம்முடைய வசதி வாய்ப்பு, செல்வ நிலைமை, வாழ்க்கை முறை போன்றவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட பொருட்களில் நமக்குரிய நம்மால் இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.
 
மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற விலை உயர்ந்த பொருளைக் கொடுக்கவேண்டும் என இமாம் அபு ஹனீஃபா (ரஹ்) கூறியுள்ளார்கள்.
 
பொதுவாக இரண்டரை கிலோ நடுத்தர கோதுமையின் விலையே நிர்ணயிக்கப் படுகின்றது. ஏறக்குறைய 100 அல்லது 150 ரூபாய். கூலி வேலைக்குப்போகின்ற முஸ்லிமும் 100 ரூபாய் கொடுக்கிறார். மிகப்பெரிய பணக்காரரும் அதே 100 ரூபாய் தான் கொடுக்கிறார்.
 
சாதாரண பருப்பு குழம்போடு தன்னுடைய உணவை முடித்துக் கொள்கின்ற ஏழை முஸ்லிம்களும் 100 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள். அன்றாடம் நான்-வெஜ் சாப்பிடுகின்ற முஸ்லிம்களும் 100 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள்.
 
இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
 
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் இதற்கு வழிகாட்டுகின்றது. “தன் மனைவியை ஒருவர் தலாக் சொல்லி விட்டால் அவரால் முடிந்த அளவு உதவித்தொகையை வழங்க வேண்டும். “செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத்தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்” (அல்குர்ஆன் 2-236)
 
தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப உதவித்தொகை வழங்கவேண்டும் என குர்ஆன் சொல்கின்றது. தலாக் என்பது வெறுப்பு ஏற்பட்ட பிறகு, நடை பெறும் செயல். அப்போதுகூட முடிந்த அளவு உதவித் தொகையை அளிக்குமாறு குர்ஆன் சொல்கிறது.
 
ஸதக்கத்துல் ஃபித்ரு என்பதோ விருப்போடு செய்யும் செயல். குர்ஆன் சொல்லும் நியதியை கருத்தில் கொண்டால் இங்கு தான் அதிகமாக சக்திக்கு ஏற்றவாறு கொடுத்தாக வேண்டும்.
 
ஆகையால், ஷரீஆ சொல்ல வருகின்ற கருத்தை மனதிற்கொண்டு 100 ரூபாயோடு ஸதக்கத்துல் ஃபித்ரை நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய தகுதிக்கு ஏற்ப தலைக்கு 300, 500, 800, 1000, 1200, 1500, 2000, 3000, 5000 என மனப்பூர்வமாக வழங்குவோம்.
 
ஏழை முஸ்லிம்களும் நம்மோடு சந்தோஷமாக ஈது கொண்டாட வழிவகை செய்வோம்.

About idealvision

Check Also

mursi

எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்

எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *