பதிவுகள்
Home / அரசியல் / நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.
Bus day

நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.

CLICK – இணைந்திருங்கள்

வி.எஸ். முஹம்மத் அமீன்

பட்டப்பகல்…!
பரபரப்பான சாலை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி..! கத்தியுடன் மாணவர்கள் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். சக மாணவனைத் துரத்தித் துரத்தி அடிக்கின்றார்கள்.

தொடரிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த இரயில் நடைமேடையில் அதேபோன்றதொரு பட்டப் பகலில் தொடரியின் வாசற்களில் தொங்கிக் கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசித் தீப்பொறியைப் பறக்கவிட்டு வெறிக்கூச்சலெழுப்புகிறார்கள்.

மூச்சுக்காற்று முண்டியடிக்கும் பேருந்துப் பயணத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நிரம்பியிருக்கும்போது அந்தப் பேருந்தில் தொங்கிக் கொண்டும், மேற்கூரைகளில் ஏறி நின்றும் அமளிதுமளி செய்துகொண்டிருக்கின்றார்கள். பேருந்தின் ஒரு பிரேக்கில் மேற்கூரையிலிருந்து சரிந்து விழுகின்றார்கள் மாணவர்கள் இன்றைய கல்வியின் விழுமங்களைப் போலவே…!

இவையாவும் படப்பிடிப்புக் காட்சிகளல்ல…! சென்னையில் அவ்வப்போது இந்த அரங்கேற்றத்தைக் காணலாம். கானாப் பாடல்களுக்கு பேருந்தையே தாளகதியாக்கி காட்டுக்கூச்சலிடும் இந்த மாணவர்கள்தாம் நம் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள். இந்த நாட்டுக்கே டூட்டுப் போடும் வழிகாட்டும் தலைவர்களாக வேண்டியவர்கள்தாம் டூட் தல என ‘கேங் கெத்து’காட்டுகிறார்கள்.

அடிமையாகும் மாணாக்கர்கள்.

இவர்கள் நவீனத்தின் அடிமைகள். ஆங்காங்கே கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டு, வெளிறி சாயம் கலங்கிய உடையணிந்து பேண்டுக்கு பத்து பாக்கெட்டுகள் வைத்து, காதில் ஒற்றை வளையம், சிகை அலங்கோலமாய் நடு மண்டையில் முடிக்கற்றை வைத்து சுற்றிலும் ரோடும், கோடுமாய் தலையில் வரைந்து மாணவர்கள் காட்சியளிக்கின்றார்கள் என்றால் மாணவிகள் அவர்களை விஞ்சி நிற்கின்றார்கள். முன்மாதிரிகளாய்த் திகழ வேண்டியவர்களெல்லாம் ‘ஒரு மாதிரியாக’அலைகின்றார்கள்.

அலைப்பேசியின் அடிமைகள் இவர்கள். எப்போதும் இயர்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டோ, யாருடனோ பேசிக் கொண்டோ பைத்தியம்போல் திரிகிறார்கள். தலை நிமிர்ந்து நிற்கவேண்டிய மாணவ சமுதாயம் அலைப்பேசியின் முன் தலைகவிழ்ந்து கிடக்கின்றார்கள். சாட்டிங், செல்ஃபி, டிக்டாக் என வாழ்கின்றார்கள். இரவெல்லாம் இவர்களின் போர்வைக்குள் அலைப்பேசியின் வெளிச்சம் மின்னிக் கொண்டிருக்கின்றது. இணையத்தில் ஆபாசக் காட்சிகளுக்கு இவர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.

சினிமாவிற்கு அடிமைகள் மாணவர்கள். யாரோ ஒரு திரைக் கலைஞரை தம் வாழ்வியல் முன்மாதிரியாக வரிந்து கொள்கின்றார்கள். கதாநாயக ரவுடியிஸம் இவர்களைப் பெரிதும் பாதிக்கின்றது. காதல், பிரேக்கப் என்ற வளர் நிலை டூட் தல வரைக்கும் இவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. இரசனை என்பதையும் தாண்டி இவர்கள் திரைநாயகர்களைக் கொண்டாடித் தீர்க்கின்றார்கள். அவர்களைப் பிரதிபலிக்கின்றார்கள்.

நம் மாணவச் செல்வங்களை மதுவும், போதையும் விட்டு வைக்கவில்லை. இவற்றிக்கும் இவர்கள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள். போதை ஊசிகள் எல்லா குப்பை மேடுகளிலும் குவிந்து கிடக்கின்றன. மதுவை மாந்தித் திளைக்கின்றார்கள். போதை வஸ்துகளின் பிடியில் வசமாய்ச் சிக்கிக் கொள்கின்றார்கள். மாணவர்களை மையப்படுத்தியே போதைச் சந்தை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இதுபோன்ற அடிமைத் தளைகளில் சிக்கிக் கிடப்பதை பாஷனாகக் கருதுகிறார்கள். இவர்களைத்தான் பேரிளம் பெண்கள் விரும்புவதாக திடமாக நம்புகிறார்கள். இந்த அம்சங்கள் இல்லாத வகிடெடுத்து தலைவாரும் மாணவர்களை ‘த்தோடா…!’என்று எள்ளி நகையாடுகிறார்கள்.

மாணவச் சித்திரத்தின் மறுபக்கம்

மாணவச் சித்திரத்தின் மறுபக்கம் அற்புதமானது. எண்ணற்ற ஆற்றலைக் கொண்டிருக்கின்றார்கள். உலகின் சவால்களை நம் மாணவர்கள் எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றார்கள். எண்ணியதை எண்ணியாங்கு செய்துமுடிப்பவர்களும் இவர்கள்தாம்.

எந்த இணையத்தில் ஒருபுறம் செல்லரித்துக் கிடக்கின்றார்களோ அதே இணையத்தில் ஆக்கப்பூர்வமான பல பணிகளையும், அரும்பெரும் தொண்டுகளையும் ஆற்றுகின்றார்கள். ‘உறவுகள்’எனும் பெயரில் மாணாக்கர்கள் இணைந்து ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்கின்றார்கள். இரத்ததானத்தில் முதல் வரிசையில் நிற்கின்றார்கள். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

மாணவப் பருவத்திலேயே குடும்பத்தைத் தம் இளம் தோள்களில் தாங்குகின்றார்கள். அதிகாலைக்கு முன்பே எழுந்து பணி புரிந்து ஓய்வின்றி கல்லூரிக்குத் திரும்புகின்றார்கள். இந்த மண்ணின் மீது பெரும் காதல் கொண்டிருக்கின்றார்கள். எதிர்காலக் கனவுகளைவிட எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளைச் சுவாசித்து வாழும் மாணவர்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

இவர்களை நெறிப்படுத்துவது யார்?

டூட் தலைகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கவனித்தால் இவர்கள் திருந்தி விடுவார்களா என்ன? காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை செத்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் அவர்களின் கைகளை உடைத்துவிட்டு வழுக்கி விழுந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம்.

அழிச்சாட்டியம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் இரண்டாம் கருத்து எதுவுமில்லை. ஆனால் அவர்களுக்கான தண்டனை என்ன? அந்த தண்டனையின் நோக்கம் என்ன? சட்டத்தைக் கையிலெடுத்தால் நீதி அமைப்பிற்கான பெருமதி என்ன?

இந்த மாணவர்களுக்கென்று எதிர்காலம் ஒன்று இருக்கிறதல்லவா? அந்த எதிர்காலத்தில் தம் வாழ்காலத்தைக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் குடும்பத்திலிருந்துதானே அந்த மாணவன் வந்திருக்கின்றான். அந்த மாணவர்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கு இங்கு யார் இருக்கின்றார்? அவர்களுக்கான பாதைகாட்டும் முன்மாதிரிகள் நமக்கு தென்படுகின்றார்களா? இவர்களை வழி நடத்தும் தலைமை இருக்கின்றதா? தலைமைக்கு ஏங்கும் தலைமுறையல்லவா இவர்கள்..!

இவர்களைச் செழித்தோங்கச் செய்யும் வளாகச் சூழலை நமது கல்வி நிலையங்கள் கொண்டிருக்கின்றனவா..? கட்டுக்கடங்காத திறமைகளைக் கொண்டிருக்கும் இந்த மாணவச் சமுதாயத்திற்கான களம் எங்கே இருக்கின்றன? 484 பக்க புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவில் இந்த மாணவர்களின் ஒழுக்க மாண்புகளுக்காக ஒற்றை வரியைப் பார்க்க முடியுமா?

படி, படி, படி என்று தேர்வுத் திணிப்புகளை மூன்று வயது பிஞ்சுகளிடம் திணித்துவிட்டு, மனப்பாடம் செய்து உயர் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே நீ என் பிள்ளை. இல்லை செத்துத் தொலை என்று கழுத்தை இறுக்கி விட்டு, பள்ளி, டியூசன், ஸடடி, ஹோம் வொர்க், டெஸ்ட் என மன அழுத்தத்தில் நம்பிள்ளைகளை முக்கி எடுத்துவிட்டு அவர்களிடம் நாம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்?

இந்தப் பிரச்னைகளின் காரணத்தை ஆய்ந்து அதனைச் சரி செய்யாமல் கைகளை உடைப்பதினால் மட்டுமே மாற்றம் வரும் என்று நம்புவதை விட அறியாமை வேறென்ன இருக்க முடியும்?

வருங்காலத்தை வடிவமைப்போம்

மாணவர்கள் இந்த மண்ணின் சொத்துகள். இந்த நாட்டின் வளங்கள். கி.பி. 2022 க்குள் நம் நாடு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பெற்றுவிடும். உலகின் ஐந்தில் ஒருவர் இந்தியர் எனும் நிலையை அடைந்துவிடுவோம். 25 டிரில்லியன் டாலர் ( இருநூறு இலட்சம் கோடி ரூபாய்) அளவு உள்நாட்டு உற்பத்தி விகிதத்துடன் உலகின் மூன்றாவது மிகப்பெரும் பொருளாதார சக்தியாக நம் நாடு வளரக் காத்திருக்கிறது. 2030 இல் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா இளைய சக்தி கொண்டெழும். அதிகமாக உழைக்கும் மக்களைக் கொண்ட நாடு எனும் பெரும் சிறப்பை இந்தியா அடையக் காத்திருக்கிறது. இன்றைய மாணவ இளைஞர்கள்தாம் இந்தியாவின் எதிர்காலம். இவர்களை நாம் வடிவமைக்க வேண்டும்.

கல்வியின் நோக்கத்தை இவர்களுக்குப் புகட்டுங்கள். பணம், பதவி, புகழ் இவற்றுக்காக அல்ல கல்வி. அறிவுத்திறன் மேம்பாட்டுக்கான வழிதான் கல்வி. நமது கல்வி நமக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் பயன் தரக்கூடியதாய் அமைய வேண்டும். கல்வி என்பது சந்தை அல்ல என்பதை உணர்த்த வேண்டும்.

தேர்வுகள், மதிப்பெண்கள் என மாணவர்களை நொடித்துப் போடாதீர்கள். கல்வி என்பது வெறும் புத்தகத்திலும், கட்டிடத்திலும் அல்ல. வாழ்வு முழுவதும் விரவிக் கிடக்கிறது. எல்லாரும் நூறு மதிப்பெண்கள் பெறுவது ஏமாற்று வேலை. சிலருக்கு கல்வி வளாகத்திற்குள் கல்வி. சிலருக்கு வளாகத்திற்கு வெளியே கல்வி. நம் பிள்ளைகளுக்கு கல்விப் பாரமேற்றாதீர்கள். அவர்களுக்கு வாழ்வைச் சொல்லிக் கொடுங்கள். சக மனிதர்களின் வலிகளை, அன்பைச் சொல்லிக் கொடுங்கள்.

ஒழுக்கமற்ற கல்வி நம்மை வீழ்த்தும் ஆயுதம் என்பதைப் புரிய வையுங்கள். இலஞ்சம் வாங்குவதற்காக ஏன் படிக்க வேண்டும்? திருடுவதற்கு ஒரு பட்டமும் படிப்பும் தேவையா? நடத்தையில், சக மாணவர்களை மதிப்பதில், பெண்களை மதிப்பதில்தான் நமது விழுமங்கள் அடங்கியிருக்கின்றது. ஒழுக்க விழுமங்களால் அவர்களது கல்வியைக் கட்டமையுங்கள்.

அவர்களை மதியுங்கள். அவர்களுக்கான உலகத்தை நீங்கள் ஆக்ரமிக்காதீர்கள். அவர்களின் திறமைகளுக்கான வடிகாலை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ளுங்கள். ஆகக் குறைந்த பட்சம் அவர்களின் தோள்மீது கைபோட்டு சற்றே உரையாடுங்கள்.

இந்தியாவின் வளர்ச்சியை சிதைக்கும் வகுப்புவாதச் சூழல் கல்வி வளாகத்தை கவ்வி நிற்கிறது. சாதி, இன, மத வெறிச்சூழல் அவர்களின் மீது கருப்பு நிழலாய் விழுகிறது. சமயங்களை மதிப்பதற்கும், எல்லா மதங்களுக்கான உரிமைகளையும் அவர்களுக்குப் புகட்டுங்கள். இது எல்லாருக்குமான பூமி. இந்த மண் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மண். வெறுப்புக்கோ, பிளவுக்கோ இங்கு இடமில்லை. மானுடன் எவனும் சமம் எனும் பால பாடம் கற்பியுங்கள்.

மாணவ உலகத்திற்குள் பிரவேசிக்காமல் வெளியே நின்று எட்டிப்பார்த்து அவர்கள் காவல் நிலைய குளியலறைக்குள் வழுக்கி விழுவதாகச் சொல்லுவது அவர்களுக்கும் நல்லதல்ல. நம் நாட்டிற்கும் நல்லதல்ல.

எம் மாணவத் தோழரீர்..! உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தைதான்..! நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.

About idealvision

Check Also

thumbnail sm

சிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்

 சிறுவர்களுக்கான இஸ்லாமிய நெறிமுறையில் எடுக்கப்பட்ட கார்டூன் குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்தது. ஐடியல் விஷன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *