பதிவுகள்
Home / அரசியல் / “எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!
சஞ்சீவ் பட்

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!”
ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள்
எழுதிய கடிதம்!
 
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியவர், குஜராத் காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். அவரைப் பழிவாங்கும் நோக்கில் அவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது, மோடியின் பாசிச அரசு.
 
சர்வதேச தந்தையர் தினமான இன்று, அவரது குழந்தைகள் ஆகாஷி மற்றும், சாந்தனு ஆகியோர் எழுதிய கடிதம் இது. வெறும் கடிதம் அல்ல; வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் ஊட்டிய ஒரு தந்தைக்கு, பிள்ளைகள் எழுதிய நன்றிக் கடிதம்.
 
அன்புள்ள அப்பாவுக்கு,
தந்தையர் தினத்தைக் கொண்டாட உலகம் முழுவதும் ஒன்றுகூடி இருக்கும் இந்த நாளில், உங்களுக்கு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.
 
எங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இந்த உலகிற்குச் சொல்லவும், உங்களைக் கொண்டாடவும், உங்கள் பெருமைகளைப் பேசவும் வருடத்தில் இந்த ஒருநாள் எங்களுக்குப் போதாது.
 
தந்தையர் தினமான இன்று, நாங்கள் உங்கள் பிள்ளைகளாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவதற்கும், அதற்காக நன்றி தெரிவிப்பதற்கும் இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ்
இந்த உலகில் நாங்கள் பெற்ற அனைத்து நற்பேறுகளுக்காகவும்,
உங்களுக்கும், அம்மாவுக்கும் இந்த நாளில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
 
இந்த உலகிற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம்; ஆனால், எங்களுடைய மொத்த உலகமும் நீங்கள்தான்.
 
சுதந்திர மனிதர்களாக எங்களை வளர்த்ததற்காக…
உங்களுக்கு நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
 
துணிந்து கேள்வி கேட்க நீங்கள்தான் கற்றுத் தந்தீர்கள்! யாரிடமிருந்தும் எதையும் இலவசமாக பெறக்கூடாது என்று சொல்லித் தந்ததும் நீங்கள்தான்! பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், சத்தியத்திற்காக
மனசாட்சியின் பக்கம் நிற்க வேண்டும் என்று போதித்ததும் அதற்காக எங்களைப் பயிற்றுவித்ததும் நீங்கள்தான்.
 
எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டபோதும், அமைதியைக் கைவிடாமல் – எதிர்த்து நின்று போராட கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!
 
அப்பா இல்லாத இந்த துயரம் மிகுந்த நாட்களை எப்படி தாக்குப்பிடிக்கிறீர்கள் என்று எங்களைச் சந்திக்கும் பலரும் அடிக்கடி கேட்பது உண்டு.
 
வாழ்வில் எவ்வளவு பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தாலும் அதை நேருக்குநேர் எதிர்கொள்ளும் துணிவுடன் எங்களைச் செதுக்கிய – நண்பரும், வழிகாட்டியான ஒரு அப்பா – எங்களுக்குப் பின்னால் இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
 
மன உறுதியும், தைரியமும், போராட்ட குணமும் மிக்க சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் நாங்கள் என்று அவர்களுக்கு தெரியாது.
 
அப்பா! நீங்கள் ஒரு மகத்தான போராளி.
மீண்டும் சொல்கிறோம். உங்களை அப்பாவாக அடைந்ததை நினைத்து நாங்கள் எவ்வளவு பெருமைகொள்கிறோம்; அதற்காக என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் வர்ணிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை.
sanjai
அப்பா! நீங்கள் இல்லாத இந்த இரண்டு வருடங்கள் பெரும் துயரம் மிகுந்தவை. ஆனால், கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம் உங்கள் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கும். வாழ்வின் எத்தகைய நெருக்கடிகளையும் எளிதில் வெல்ல முடியும் என்பதையும், எல்லா காரியங்களின் இறுதி முடிவும் நன்றாக அமையும் என்றும். அந்த புன்னகை எங்களை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
 
அன்புள்ள அப்பா!
அமைதியும் கம்பீரமும் நிறைந்த மனிதராக நீங்கள் இருப்பதற்கும், இந்த பூமியின் அதிர்ஷ்டசாலி குழந்தைகளாக எங்களைப் பெற்றெடுத்ததற்கும் எங்கள் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறோம்.
 
உங்கள் துணிச்சலும், மனவலிமையும் எங்களுக்கும் உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் தொடர்ந்து உந்துசக்தியாக இருந்து வருகிறது.
 
உறுதி குலையாத நெஞ்சுரத்தோடும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடும் நாங்கள் எப்போதும் உங்களுக்குத்
துணை நிற்போம்.
 
இந்தப் பாசிச அரசின் விலங்குகளை உடைத்தெறிந்து, நீங்கள் விடுதலையாகி எங்களுடனும், அம்மாவுடனும் இணையும்வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்;
இது சத்தியம்.
 
எங்கள் இதயங்களை அன்பாலும், உங்களைப் பற்றிய பெருமையாலும் நிரப்பபியுள்ளீர்கள். அதற்காக, என்றேனும் ஒருநாள் உங்களுக்கு
கைமாறு செய்ய வேண்டும் என நாங்களும் காத்திருக்கிறோம்.
 
நீங்கள் ஒரு சிறந்த அப்பாவாக இருப்பதற்கு மீண்டும்
ஒருமுறை உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்!
 
என்றென்றும்
தங்களன்புப் பிள்ளைகள்,
ஆகாஷ் மற்றும் சாந்தனு!
Happy Father’s Day

– தமிழில் : ஜாபர் சாதிக் பாகவி

About idealvision

Check Also

InShot_20200708_125801762_resize_54

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்…! சமுதாயச் சொந்தங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சிலின் பரிந்துரைகள். இதோ, இன்னும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *