பதிவுகள்
Home / அரசியல் / கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️

CLICK – இணைந்திருங்கள்

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️
10 ஆண்டுகளில் 39 பேர் திஹார் சிறையில் பிரசவித்துள்ளனர்!❗️டெல்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, டில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி சஃபூரா சர்காரின் ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்த டெல்லி காவல்துறை, “கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் 39 பேர் திஹார் சிறையில் பிரசவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. மேலும்,

“அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அவர் செய்த குற்றத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. கடும் குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை, கர்ப்பத்தைக் காரணம்காட்டி விடுவிக்கவும் கூடாது. உயிர் / உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர், சஃபூரா. அவர் செய்த குற்றங்களின் ஆழத்தை நீதிமன்றம் கவனமாக பரிசோதிக்க வேண்டும். எனவே அவருக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஜாமீன் தரக் கூடாது.

சிறைச்சாலையில் அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. அதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 39 பேர் சிறையில் பிரசவித்துள்ளனர். எனவே, கர்ப்பிணி என்பதற்காகவெல்லாம் சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது! ஒரு குற்றவாளி கர்ப்பமாக இருக்கிறார் என்பதால், அவருக்கென்று தனி சலுகைகள் எதுவும் இல்லை. எனவே இவ்வளவு கடுமையான குற்றம் செய்தவர்களை அரசு விடுவிக்கக் கூடாது” என்று சஃபூராவின் ஜாமீன் மனுவை எதிர்த்து, காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவரை தனி செல்லில் வைத்திருப்பதாகவும், மருத்துவர்கள் இடையிடையே சென்று அவருடைய உடல்நிலையைப் பரிசோதித்து, நல்ல உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கி வருவதாகவும், அவர் விஷயத்தில் சிறை அதிகாரிகள் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

நாடே கொரோனாவின் பிடியில் சிக்கி, செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கும்போது, திரைமறைவில், டெல்லி காவல்துறையும், மதவெறி வைரஸ் பாதித்த மத்திய அரசும் தனக்கு வேண்டாதவர்களை வேட்டையாடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது, சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.SafooraZargar. jail

ஏற்கெனவே, சஃபூராவின் ஜாமீன் மனு கடந்த ஜூன் 4 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

“சஃபூரா ஒரு கர்ப்பிணி; தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவரது கரு கலைந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அனைத்து சிறைகளிலும் கொரோன பாதிப்பு உள்ள நிலையில், சிறையில் அவருக்கும் தொற்று ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம் என தெரிவித்தார், அவரது வழக்கறிஞர். ஆனால்,

“சஃபூரா நெருப்பு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தவர். அவர் மூட்டிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியதற்காக, காற்றை எப்படி குறை சொல்ல முடியும்” என கூறி, பாட்லா ஹவுஸ் நீதிமன்றத்தின் – நீதிபதி தர்மேந்திர ராணா, அவருக்கு வழங்க வேண்டிய ஜாமீனை மறுத்துவிட்டார்.

சஃபூராவுக்கு மூன்றாவது முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சர்யம் எதுவுமில்லை. அதேநேரம், நாங்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கவுமில்லை. அவளுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்றார், அவரது தங்கை சமீஆ சர்கார்.

மேலும், இந்திய முஸ்லிம் என்ற வகையில், கடந்த சில வருடங்களாக நடந்துவரும் சம்பவங்களைப் பார்த்துப் பார்த்து எங்களுக்குப் பழகிவிட்டது. ஆனால், நாம் நினைப்பதைவிடவும் சபூரா ரொம்ப தைரியசாலி; அவளை அவ்வளவு எளிதில் யாரும் நிலைகுலையச் செய்ய முடியாது” என்றார், நம்பிக்கையோடு.
🔘
இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை கேள்விக்குள்ளானபோது, ஆளும் பாசிச அரசை எதிர்த்துப் களமாடியவர்; சஃபூரா.
அவர் சிறை சென்றது தனக்காக அல்ல; நமக்காக..!

அவரைப்போல் அக்கிரமத்திற்கும், அநீதிக்கும் எதிராக, அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கப் போராடிய மாணவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுட்ட ராம்பக்த கோபால் இப்போது ஜாமீனில் ஊர் சுற்றுகிறான்.

ஷாஹின் பாக் பெண்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய குஜ்ஜர் வெளியே திரிகிறான்!

ஜே.என்.யு. மாணவர்களைத் தாக்கிய கோமல் ஷர்மா ஊருக்குள் உலா வருகிறான்!

தில்லியில் கலவரத்தைத் தூண்டிய கபில் மிஸ்ரா சுகபோகமாக வீட்டுக்குள் தூங்குகிறான்!

நியாயமான எந்தக் கேள்விகளுக்கும் முறையாக பதில் சொல்லாத இந்த அரசை நோக்கி கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

அநீதியே- நீதியாக கருதப்படும் இந்தக் காலத்தில்…
அக்கிரமங்களே சட்டமாகத் திணிக்கப்படும் ஒரு தேசத்தில்…
அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு “காலத்தை” கர்ப்பம் சுமந்திருக்கும் நாம்,
கொட்டடியின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து –
நீதி மலரும் அந்த நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!

தனிமைச் சிறையில் சஃபூரா மட்டும் அல்ல;
அவரது கருவரையில் இன்னொரு உயிரும் நீதிக்காகப் போராடுகிறது…!

கருவில் வளரும் உயிருக்கும் உணவளிக்கத் தெரிந்த வல்ல நாயனுக்கு…
அந்தச் சின்ன உயிருக்கும் –
அதைச் சுமக்கும் உயிர்த் தாய்க்கும்
நீதியின் பாதையைக் காட்டத் தெரியாதா?

போராட்டங்களாலும், பிரார்த்தனைகளாலும் அநீதியை வென்ற சமூகம் இது.
உயிருள்ளவரை நாமும் அநீதியை
எதிர்த்து கையேந்துவோம்!
இன்ஷா அல்லாஹ்!
– ஜாபர் சாதிக் பாகவி

About idealvision

Check Also

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *