பதிவுகள்
Home / அரசியல் / நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்
P.A.syed mohammed

நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்

 
1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்
45 ஆம் ஆண்டு நினைவு நாள்
 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தடை செய்யப்பட்ட நாள்.
ஜூன் 25 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை
நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.
 nooh mahlari
நெருக்கடி நிலை இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும்
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும்
கொண்டுவரப்பட்டது. தனி மனித உரிமைகள் தகர்த்தெறிய பட்டன.
குடிமக்கள் அனுதினமும் அல்லல் பட்டனர்.
இந்திய ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியாக
நெருக்கடி நிலை இருந்தது. அனைத்து பத்திரிக்கைகளின்
இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள்
நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
 
இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி
உள்ளிட்டோர் பதவி ஏதும் இல்லாமலேயே
அதிகாரங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும்
ஒரே நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகி தலைமறைவு
வாழ்க்கை நடத்தினர். திமுக அரசு கலைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில்
மிக மோசமான முறையில் தாக்கப்பட்டார்.
யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு
அழைத்துச் செல்லலாம், அடிக்கலாம், கைது செய்யலாம்,
சித்திரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம்
என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிராக
குரல் கொடுத்தவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம்
தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும்
தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தடை செய்யப்பட்டது என்ற செய்தி வானொலியில்
முக்கிய செய்தியாக முழங்கியது.
கோவையில் ஜமாஅத் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
பெரும் தலைவர்கள் இந்தியா முழுவதும் இரவோடு இரவாக
கைது செய்யப்பட்டனர்.
 
எங்கள் வாப்பாவை (P.A.சையது முஹம்மது சாஹிப்)
கைது செய்ததும் இரவில்தான்.
ஊரே உறங்கிக் கொண்டிருந்தது.
எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தோம்.
திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு எங்கள் உம்மா
லாந்தர் விளக்கை கையில் ஏந்தி கதவைத் திறந்து
பார்த்த பொழுது நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
சூழ்நிலையை அறிந்து வாப்பாவும் எழுந்துவர,
பாய்… வாங்க ஸ்டேஷன் வரை போகலாம் என்று
எங்கள் வாப்பாவை அழைத்துச் சென்றார்கள்.
அப்பாவை கைதுசெய்து சென்றதை நாங்கள் யாரும்
அறியவில்லை. உறங்கிக் கொண்டிருந்தோம்.
 
காலையில் விடிந்ததும் வழக்கம் போல் உம்மா  (ஆசியா)
எங்களை மதரசாவிற்க்கு அனுப்பி வைத்தார்கள்.
பின்பு பள்ளிக்கூடத்திற்கு சென்று மாலையில் வந்தபோதுதான்
வாப்பாவை அழைத்து சென்றதே எங்களுக்கு தெரிந்தது.
வாப்பாவை எங்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று
யாருக்கும் தெரியாது. மூன்று நாள், முடிந்த பிறகுதான்
ஒரு போலீஸ்காரர் வீட்டிற்கு வந்து வாப்பா அணிந்திருந்த
வாட்ச், பெல்ட் போன்ற பொருட்களைத் தந்து
சையது முகமது பாய் கோவை மத்திய சிறையில்
அடைக்கப்பட்ட விவரத்தை சொன்னார்.
 
அந்த காலகட்டம் சட்ட விழிப்புணர்வு கிடையாது,
யாரிடம் கேட்பது?, எங்கே செல்வது? என அறியாமல்
நாங்கள் கலங்கி நின்றோம் காக்கி உடையணிந்து
வருபவர்களெல்லாம் போலீஸ்காரர்கள் என்று
நினைத்திருந்த காலம். பின்பு மாதத்திற்கு ஒரு முறைதான்
சிறையில் சந்திக்கும் வாய்ப்பு என அறிந்தோம்.
ஒரு மாதம் செல்வதே ஒரு வருடம் செல்வது போலிருந்தது.
 
உறவினரின் உதவியால் கோவை சிறைச்சாலையில் அப்பாவை
சந்திக்க பெட்டிஷன் கொடுக்கப்பட்டது. மனைவி குழந்தைகள் மட்டும் தான் சந்திக்க முடியும் வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அப்பாவின் கூட பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் அனுமதி இல்லை என திட்டவட்டமாக அறிவிப்பு செய்தார்கள்.
 
சிறைச்சாலைக்கு முன்னே அந்த பெரிய கேட்டின் இடையே உள்ள சிறிய கதவைத்திறந்து ஒவ்வொரு கைதியின் பெயரைச்சொல்லி சந்திப்பவர்களை அழைப்பார்கள். அம்மாவும் நாங்களும் ஒரு மரத்தின் நிழலில் நின்று அழைப்புக்காக காத்திருப்போம்.
சிறையில் காணச் சென்ற பொழுது பத்தடி தூரத்தில்தான் அப்பாவை கண்டோம். எங்களை அருகில் செல்ல கூட அனுமதியக்கவில்லை, நடுவில் ஒரு தடுப்பு சுவர் எங்களை பிரித்தது. அவரை சுற்றியும் சிறைக் காவலர்கள், என்ன பேசுவது ? ஏது பேசுவது? என்று தெரியாமல் முகத்தோடு முகம் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை. குழந்தைகளை கையில் எடுத்து அரவணைக்க கூட அனுமதி இல்லை, நாங்கள் அப்பாவுக்காக அயன் செய்து கொண்டு சென்ற சர்ட் வேஷ்டியை உதறி பரிசோதனை செய்த பிறகுதான் அவரிடம் கொடுக்கப்பட்டது.
 P.S.அப்துல் சலாம்
எங்கள் வீடு கோவை மத்திய சிறைச்சாலைக்கு மூன்று கிலோமீட்டர் அருகில் மரக்கடை வீதியில் ஒரு குறுக்குச் சந்தில் தான் இருந்தது. சின்னஞ் சிறிய ஓட்டு வீடு. அதன் முன்னே திறந்தவெளி சமையலறை.
கோவைக்கு வரும் இயக்கத் தலைவர்கள் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர் எங்கள் அப்பா அவர்களை உணவருந்த அழைத்து வருவார், இஜாஸ் அஹ்மத் அஸ்லம் சாஹிப் (இவரும் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்) போன்றோரும் இதில் அடங்குவர்
 
நாட்டில் பட்டினி இல்லாத சமூகத்தை அமைக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக கூறி 20 அம்சத் திட்டம் கொண்டு வந்தார் இந்திரா காந்தி. எங்கள் வீட்டின் நிலைமையோ பொருளாதாரத் தட்டுப்பாட்டால் தடுமாறிக்கொண்டிருந்தது. அப்பாவின் சொற்ப வருமானத்தில்தான் எங்களின் வாழ்வாதாரங்கள் கடந்து கொண்டிருந்தன. சிறைக்குச் சென்ற பின், எட்டு குழந்தைகளுக்கும் உறவினர்களின் உதவியால் பசியாற்றிதோடு எங்களை இஸ்லாமிய கட்டமைப்பில் வளர்த்தினார் எங்கள் உம்மா.
 
ஒரு நாள் இரவு காற்றும், மழையும், மின்னலும், இடியும் எங்கள் உறக்கத்தை கலைத்தது,  சிம்மினி விளக்குகள் அணைந்தன, மின்னல் வெளிச்சங்கள் வீட்டினுள் பாய்ந்தது. மழை துளிகள் கூரை வழியாக ஒழுகி கொண்டிருந்தது. கொஞ்சம் பெரியவர்களான நாங்கள் ஓரமாக எழுந்து அமர்ந்தோம். சிறிது நேரத்தில் மழை தண்ணீர் அந்த செம்மண் சுவற்றில் புகுந்து வீட்டின் ஒருபக்கம் இடியதொடங்கியது. நானும் சகோதரியும் அலறியடித்து மறுபக்கம் சென்றோம். எங்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தார்கள். பின்பு நாங்கள் பக்கத்து வீட்டில் தான் உறங்கினோம். உறங்க சொன்னார் உம்மா… , ஒழுகிய கூரையும், இடிந்த சுவரையும் சீரமைத்த பின்பு தான் நாங்கள் எங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க முடிந்தது.
 
மாதங்கள் செல்லச் செல்ல, சிறைச்சாலை சந்திப்புகள் தளர்வு ஏற்படுகிறது. அப்பாவின் மூத்த சகோதரி ஒரு மதரஸாவில் அரபி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு வாப்பாவை சந்திக்க அனுமதி வழங்குகிறது அரசாங்கம். ஆனால் வயிற்றில் செய்யப்பட்ட பெரிய அறுவை சிகிச்சை காரணமாக படுக்கையில் கிடந்தார். சிறையில் சென்று அப்பாவை சந்திக்க அவரின் உடல்நிலை ஒத்துவரவில்லை.
 
ஒவ்வொரு ஆறு மாதத்தில் மிசா சட்டம் முடிவுக்கு வரும் என்கின்ற நிலையில் அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அஹமத் மீண்டும் ஆறு மாதத்திற்கு நீட்டி கையொப்பமிடுகிறார். அப்பாவின் விடுதலையை எதிர்பார்த்த எங்கள் கனவுகள் சுக்குநூறாகி போனது. இன்னொரு பக்கம் அப்பாவின் சகோதரியின் உடல்நிலை மோசமாகி கொண்டே செல்கிறது. சுகம் பெறுவார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்து தன் சகோதரியை சந்திக்க நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்தது.
 
சர்வ வல்லமை கொண்ட தலைவரான பிரதமர் இந்திரா காந்தி நினைத்தால்தான் முடியும் என்கிற சூழ்நிலையில் பிரதமருக்கும் உள்துறைக்கும் பலமுறை கடிதம் அனுப்பினார் எங்கள் உம்மா..
 
என் கணவரின் மூத்த சகோதரி உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக உள்ளார் அவரைக் காண என் கணவரை சிறையிலிருந்து வீட்டுக்கு வர ஒரு நாள் அனுமதியுங்கள் என்ற கடிதத்திற்கு, அக்கடிதம் பெற்ற அக்னாலேஜ்மென்ட் தான் திரும்ப வருமே தவிர இந்தியாவின் அசைக்க முடியாத பலமாக கருதப்பட்ட அந்த இரும்புப் பெண்மணி அசைந்து கொடுக்கவில்லை.
 
ஒரு மாலைப்பொழுதில் அப்பாவின் சகோதரியின் சுவாசம் நின்று விட்டது,
அவர் மரணமடைந்துவிட்டார். (இன்னா லில்லாஹி…)
 
உயிர் பிரிந்த தன் அன்புச் சகோதரியின் முகத்தை கடைசியாக பார்க்க எங்கள் அப்பாவை அனுமதிப்பார்கள் என நம்பிக்கையுடன் கோவை அரசு நிர்வாகத்திடம் மீண்டும் முறையிட்டோம்.
மணித்துளிகள் ஓடிக்கொண்டே இருந்தது. ஜனாஸா எடுக்கும் நேரமும் ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் என நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. அப்பா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்பட வில்லை. எங்கள் அப்பா வரும் வாகனத்தை நோக்கி சாலையின் ஓரத்தில் நின்று வழி மேல் விழி வைத்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
 
இறுதியாக திறக்கப்பட்ட மண்ணறை கதவுகளை நோக்கி என் அப்பாவின் சகோதரியை உற்றாரும் உறவினர்களும் சுமந்துசென்றார்கள். ஆனால் அப்பாவை அடைத்த சிறைத்துறை கதவுகளோ இறுதிவரை திறக்கப்படவே இல்லை.
 
நெருக்கடிமிக்க அந்த இருண்ட நாட்களில் யாரிடமும் எங்கள் அம்மா புலம்பியோ, அழுதோ தன் சோகத்தை பங்கு வைத்ததை நாங்கள் பார்த்ததே இல்லை. ஆனால் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவனின் முன்பாக தன் கஷ்டத்தை சொல்லி முசல்லாவை கண்ணீரில் நினைத்ததை பலமுறை நாங்கள் கண்டிருக்கிறோம். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் குடும்ப பாரம் முழுவதையும் சுமந்து எங்களை ஒழுக்கத்தோடு வளர்த்தார் எங்கள் உம்மா…(ஆசியா)
 
இடிந்த வீட்டில் குடியிருந்த அந்த உடையாத உறுதியான உள்ளத்தால் தான் இன்று எங்கள் குடும்பத்திலும், அவர்களின் வாரிசுகளிலும் பல இஸ்லாமிய இயக்க பொறுப்பாளர்களும், அரசு அதிகாரிகளும், ஆலிமாக்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் ஊடகவியலாளர்களும் உருவாகியிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
 
நெருக்கடி நிலையின் போது சிறைக் கம்பிகளுக்குள் அப்பா செய்த தியாகத்திற்கு கொஞ்சமும் குறைவானதல்ல..
சிறைக்கு வெளியே எங்கள் உம்மா செய்த தியாகம் என்றால் அது மிகையல்ல..!

P.S.அப்துஸ்ஸலாம்

About idealvision

Check Also

Bus day

நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.

வி.எஸ். முஹம்மத் அமீன் பட்டப்பகல்…! பரபரப்பான சாலை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி..! கத்தியுடன் மாணவர்கள் துரத்திக் கொண்டு ஓடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *