பதிவுகள்
Home / Uncategorized / கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்…!

சமுதாயச் சொந்தங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சிலின் பரிந்துரைகள்.

இதோ, இன்னும் சில நாள்களில் ஈதுல் அத்ஹா எனும் தியாகத் திருநாள் நம்மை வந்தடையவிருக்கின்றது. அந்த நன்னாள்களில் நாம் மேற்கொள்கின்ற முக்கியமான வழிபாடுதான் குர்பானி. கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டிருக்கின்ற சூழல், அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் ஈதுல் அத்ஹா, குர்பானி குறித்தெல்லாம் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சில் இந்தக் கேள்விகளை ஆராய்ந்தது. பின்வரும் வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. இவை கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகின்றோம்.

1. அல்லாஹ்வின் தூதரான இப்ராஹீம் நபியின் அழகிய வழிமுறைதான் குர்பானி. அந்த அழகிய வழிமுறையை இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபிகளார்(ஸல்) தம் வாழ்நாளில் கடைப்பிடித்திருக்கின்றார்கள். அதனைக் கடைப்பிடிக்குமாறு தம்முடைய உம்மத்துக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள். இது வெறும் சடங்கு அல்ல. குர்பானிக்குரிய நாள்களில் குர்பானியைத் தவிர வேறு எந்த அறமும் அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக இல்லை என்றே நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே தியாகத் திருநாளுக்குரிய நாள்களில் தம்மால் இயன்ற வரை குர்பானி செய்வதில் முஸ்லிம்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். சதகாக்கள், தானங்கள், தர்மங்கள், வேறு மக்கள் நலப் பணிகள் எதுவுமே இந்த நல்லறத்துக்கு மாற்று ஆகாது.

2. குர்பானி கொடுப்பது வாஜிபான நிலையில் குர்பானி கொடுப்பதில் பேரார்வமும் ஆசையும் கொண்டு, பெருமுயற்சி செய்த பிறகும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் காரணமாகவோ, வேறு தடைகளினாலோ தம்மால் குர்பானி கொடுக்க இயலாத நிலைமையில் இருப்பவர்கள், சாத்தியமான வேறு ஊர்களில் தம்முடைய குர்பானியைக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பின் அவசியம் அவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு பிற ஊர்களிலும் தமக்குத் தெரிந்தவர்களைக் கொண்டு குர்பானி நிறைவேற்றுகின்ற சாத்தியமோ, வழிவகையோ இல்லாதவர்கள் குர்பானி கொடுப்பதற்கான நாள்கள் கழிந்த பிறகு குர்பானிக்காக தாம் ஒதுக்கியிருந்த பணத்தை வேறு ஏதேனும் மக்கள் நலப் பணிகளுக்காக சதகா செய்து விட வேண்டும்.

3. நாட்டின் சட்டங்களை மதித்து அவற்றுக்கு உட்பட்டு இயங்கியவாறு குர்பானி கொடுப்பதற்கே முஸ்லிம்கள் தம்மால் இயன்ற வரை முயல வேண்டும். எந்தப் பிராணிகளை பலியிடுவதை அரசு தடை செய்திருக்கின்றதோ அவற்றை அறுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தற்போதைய கொரோனா கொள்ளை நோய்ச் சூழலைக் கருத்தில் கொண்டு குர்பானி கொடுக்கின்ற போது அவசியமான அனைத்து கட்டுப்பாடுகளையும் விதிகளையும் பேணி நடந்து கொள்ள வேண்டும். சாலைகளிலும் மக்கள் நடமாடுகின்ற இடங்களிலும் பிராணிகளைப் பலியிடக் கூடாது. தூய்மையைப் பேணுவதில் *கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இரத்தத்தையும் உபரி உறுப்புகளையும் சிதிலங்களையும் அவசியம் மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது அவற்றுக்கான குப்பைகளைச் சேகரிக்கின்ற இடங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

5.பெருநாளுக்குச் சில நாள்கள் முன்னதாக நகரத்திலும் ஊரிலும் இருக்கின்ற பொறுப்பான மனிதர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். நிலைமைகளைக் கண்காணிப்பதிலும், சிரமங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும் இந்தக் கமிட்டி துணை நிற்கட்டும். அமைதியையும் இணக்கத்தையும் நிலைநிறுத்துவதில் தம்முடைய ஒத்துழைப்பை வழங்கட்டும்.

6. ஈதுல் அத்ஹா – தியாகத் திருநாளுக்கான சிறப்புத் தொழுகையை சமூக இடைவெளியை (Social Distancing) பேணியவாறு பள்ளிவாசல்களிலும் ஈத்கா மைதானங்களிலும் நிறைவேற்றுங்கள். எந்த இடங்களில் கொரோனா கொள்ளை நோய் காரணமாக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஈகைத் திருநாள் தொழுகையை நிறைவேற்றிய அதே பாணியில் தியாகத் திருநாள் தொழுகையையும் தத்தமது வீடுகளில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

ஈதுல் அத்ஹா என்கிற தியாகத் திருநாளுக்கும் குர்பானிக்கும் இஸ்லாத்தில் இருக்கின்ற அசாதாரணமான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இவை தொடர்பாக சாத்தியமான எல்லாவிதமான வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறும், தீய நோக்கம் கொண்ட தீய சக்திகளின் தீங்குகளிலிருந்து முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ஷரீஅத் கவுன்சில் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கின்றது. முஸ்லிம்கள் தக்க முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடன் இந்தக் கடமையை நிறைவேற்றுவார்கள். மார்க்கத்தின் படி வாழ்வதற்கும் இறைவனின் விருப்பத்தின் படி எல்லாவற்றையும் மேற்கொள்வதற்கும் இறைவன் நல்லருள் செய்வானாக. ஆமீன்.

வெளியீடு
ஷரீஅத் கவுன்சில்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.

About idealvision

Check Also

புன்னகை தவழ பேசுங்கள்…! – -சிராஜுல்ஹஸன்

 புன்னகை தவழ பேசுங்கள்…! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தலைவனுக்கும் தொண்டனுக்கும் அல்லது மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தொடர்பு எப்படி இருக்க வேண்டும், ஊழியர்களிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *