பதிவுகள்
Home / Uncategorized / வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்!

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் கச்சிதமாக உட்கார்ந்திருக்கிறது. கச்சிதம் எங்கிருக்கிறதோ அங்கு ஓர் ஏற்பாடு இருக்கிறது என்பது அர்த்தம். ஏற்பாடு எங்கிருக்கிறதோ அங்கு ஏற்பாட்டாளன் ஒருவன் இருக்கிறான் என்பது திண்ணம். ஓர் ஏற்பாட்டாளனினூடாக நடைபெறுகின்ற ஒன்று இயற்கையாக இருக்க முடியாது.

இந்தக் கூற்றை ஏற்க முடியுமா, முடியாதா? என்பதை விரும்பியவர்கள் தங்களது நுண்ணறிவோடு ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பட்டிமன்றத்தின் முடிவு எதுவானாலும் அது குறித்து விவாதிக்க இங்கு நான் தயாராகவில்லை. காரணம், கச்சிதம் பற்றிப் பேசுவதே எமது நோக்கமாகும்.

கச்சிதம் தொடர்பில் மறுக்க முடியாத உண்மையொன்றை முதலில் பதிவு செய்வோம். கச்சிதம், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையில் காணப்படுவதை விட மனிதனால் உருவாக்கப்படாத இயற்கையில் அதிகம் காணப்படுகிறது’ நிறைவாகவும் காணப்படுகிறது.

அதே போன்று உரைக்கப்பட வேண்டிய மற்றுமோர் உண்மை, மனிதன் தனது வாழ்க்கையில் செயற்கையின் கச்சிதத்தைக் கூட்ட முயன்று இயற்கையின் கச்சிதத்தை சிதைத்து விட்டான் என்பதாகும்.

நவீன மனிதனுக்கெதிராக முன்வைக்கப்படும் பாரதூரமானதொரு குற்றச்சாட்டாக இப்போது அது பல்பரிமாணம் பெற்று வளர்ச்சியடைந்திருக்கிறது. உயிரினங்களால் வாழ முடியாத… அல்லது வாழப் பொருத்தமற்ற… பிரதேசங்களை மனிதன் உருவாக்குகின்றான் என்பது அந்தக் குற்றச்சாட்டுக்களுள் முக்கியமானதாகும்.

மனிதனது வாழ்க்கையையும் உயிரினங்களது வாழ்க்கையையும் இவ்வாறு நெருக்கடி நிலைக்குள் கொண்டு செல்கின்ற மனிதனது கைங்கரியங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதுதான் குப்பைகளாகும்.

குப்பை ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும். 2003ஆம் ஆண்டில் குப்பைத் தேசம் (Garbage Land: On the Secret of Trails of Trash) என்று பெயரிட்டு எலிசபெத் ராய்டியின் ஒரு புத்தகம் வௌிவந்தது. அந்தப் புத்தகம் குப்பைத் தேசமாக சித்திரித்துக் காட்டியது அமெரிக்காவைத்தான். உலக சனத்தொகையில் 4-5 சதவிகிதம் வாழும் அமெரிக்கர்கள் உலக குப்பைத் தொகையில் 30-40 சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறார்கள் என்பது அதில் ஒரு குறிப்பு. இந்தப் குப்பைகள் பெரும் நிலப்பரப்புக்களை மூடி மலை மேடுகளாக உருவாகியுள்ளன. அல்லது அகழிகளில் கொட்டப்பட்டு… சதுப்பு நிலங்களில் நிரப்பப்பட்டு இயற்கையை மாசுபடுத்துகின்றன.

குப்பை மேடுகள் அல்லது குப்பைக் குழிகள் இன்றைய உலகின் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரச்சினை குப்பை மேடுகளிலிருந்தோ குப்பைக் குழிகளிலிருந்தோ ஆரம்பிப்பதில்லை. மாறாக, அனைத்து வகையான உற்பத்திகளையும் மேற்கொள்கின்ற பாரிய தொழிற்சாலைகள்தான் இந்தப் பிரச்சினையின் ஆரம்பமாகும். முதலில் இந்தத் தொழிற்சாலைகள் வௌியேற்றுகின்ற கழிவுகள், பின்னர் அத்தொழிற்சாலைகளின் உற்பத்திகளை வாங்குகின்ற நுகர்வோர் சமூகம் அந்த உற்பத்திகளை வாங்கிய பின்னரும் பயன்படுத்திய பின்னரும் வௌியேற்றுகின்ற கழிவுகள் என்பவற்றிலிருந்தே குப்பைப் பிரச்சினை தோன்ற ஆரம்பிக்கின்றது.

ஓர் அமெரிக்க மகன் இவ்வாறு வருடமொன்றிற்கு உற்பத்தி செய்யும் குப்பையின் அளவு சுமார் 1.3 தொன் என்பதாக ஏர்த் இன்ஜினியரிங் சென்டர் ஆப் கொலம்பியா யுனிவர்சிடி அமெரிக்காவில் குப்பையின் நிலைமை என்ற அறிக்கையில் (2003) குறிப்பிடுகிறது. ஒரு வீட்டில் ஐந்து நபர்கள் இருந்தால் இதனை ஐந்து மடங்காகப் பெருக்கிப் பார்க்க வேண்டும்.

நகரம் தோறும் சேருகின்ற குப்பைகள் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கின்றன. பின்னர் அவற்றிலிருந்து வௌியாகும் நச்சுத்தன்மைகள் நிலத்தடி நீரிலும் நீர்நிலைகளிலும் நீரில் வாழும் மீன்களிலும் பின் அவற்றை உட்கொள்ளும் மனிதர்களது உணவுகளிலும் பரவுகின்றன. உண்ணும் உணவு மட்டுமல்ல, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று அனைத்தும் இதனால் மாசடைகின்றன.

தொழிநுட்பம் வளர்ச்சியடைவதால் புதிய வகைக் குப்பைகள் இவற்றோடு சேர்கின்றன. அவற்றுள் ஒரு வகை, மின்னணுக் குப்பைகளாகும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் 2005இல் வௌியிட்ட ஒரு தகவலின்படி அமெரிக்கர்கள் 25 இலட்சம் தொன் மின்னணுப் பொருட்களை குப்பைகளில் வீசுகின்றனர்.

இதேபோன்று, வேதிப் பொருட்களின் உற்பத்திகள் மற்றும் அவற்றின் பாவனைகள், கழிவுகள் என்பவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இன்னொரு வகை. உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகின் தெற்கில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஐந்து இலட்சம் பேர் பூச்சிக் கொல்லிப் பாவனைகளால் பாதிக்கப்படுவதாக கணித்துள்ளது.

இது சொல்லி முடிக்கும் பிரச்சினையொன்றல்ல. நீர், காற்று, வளி மண்டலம், ஓசோன், பனிப்பாறைகள், நதிகள், உயிரனங்களின் வாழ்க்கை, மனித வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல்… என அனைத்திலும் இருக்கின்ற ஒழுங்கு, சமநிலை என்பவற்றை சீர்குலைக்கின்ற பிரச்சினை என இதனைக் குறிப்பிடலாம்.

வேறு விதமாகச் சொன்னால் செயற்கையாக கச்சிதத்தைக் கட்டியெழுப்ப முயன்ற மனிதன் இயற்கையிலிருக்கின்ற கச்சிதத்தை கட்டுடைப்புச் செய்கின்றான் என்று கூறுவதே பொருத்தமானது.

மனிதனே! இயற்கை உன்னுடையதா? அதில் ஒழுங்கையும் சமநிலையையும் ஏற்படுத்தியவன் நீயா? அதில் கச்சிதத்தைக் கட்டியெழுப்பியது உனது மதிநுட்பமா? அந்தக் கச்சிதம் உனது குலச் சொத்தா? நீ நினைத்தவாறு அதனைக் கட்டுடைப்புச் செய்வதற்கு! பல்லாயிரம் உயிர்களுக்காக, அவற்றின் நல்வாழ்வுக்காக அவை பெற்றுக் கொண்ட உரிமைகள்தான் இயற்கையில் காணப்படும் கச்சிதங்கள். அந்தக் கச்சிதங்களை உடைப்பதும் அழிப்பதும் விஞ்ஞானம் என்ற பெயராலும் தொழிநுட்பம் என்ற பெயராலும் மனிதன் உருவாக்கியதொரு பயங்கரவாதமாகும்.

அறிவியல் வளர வேண்டும்’ தொழிநுட்பம் மேலோங்க வேண்டும்’ இயற்கையையும் அதன் கச்சிதங்களையும் ஒழுங்குகளையும் குடல்வாய் ஜீவனங்களது உடைமைகளாகவும் உரிமைகளாகவும் கருதிப் பாதுகாக்கும் வகையில்… விஞ்ஞானமும் தொழிநுட்பமும் அவற்றை விழுங்கி ஏப்பமிடும் வகையிலல்ல…

விஞ்ஞானத் தொழிநுட்ப யுகம் நவீன மனிதனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்று இதனைக் கூறுவதா? அல்லது இந்த நவீன மனிதனால் அழிந்து கொண்டிருக்கும் இயற்கையின் கச்சித்களுக்கான இரங்கல் செய்தி என்று இதனைக் குறிப்பிடுவதா? எது பொருத்தம் என்று விளங்கவில்லை.

ஒரு வீடு ஒழுங்கற்றதாக, நேர்த்தியற்றதாக, கச்சிதமற்றதாகத் தோன்றினால் அதனைப் பார்க்கும்போது எழுகின்ற முதலாவது கேள்வி, இந்த வீடடில் மனிதர்கள் இல்லையா? என்பதாகும்.

இயற்கையைப் பார்த்து அப்படியொரு கேள்வியை வரலாற்றில் எழுப்பியவர்கள் யாருமில்லை. காரணம், அது எப்போதும் கனகச்சிதமாக இருந்திருக்கிறது. (அதனால்தான் அது இயற்கையல்ல என்று நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்). எனினும், இன்று கச்சிதமும் ஒழுங்கும் கட்டுடைப்பு செய்யப்பட்ட இயற்கையைப் பார்ப்பவர்கள் ஒரு கேள்வி கேட்கலாம் போலிருக்கிறது. இங்கே மனிதர்கள் வந்தார்களா?

ஒன்றுக்குள் வரக்கூடாதவர்கள் வந்து விட்டால்…நுழையக் கூடாதவர்கள் நுழைந்து விட்டால் கேட்க வேண்டிய கேள்வி அது. அந்தக் கேள்வி மனிதனுக்குப் பொருந்துகின்றது என்றால் மனிதன் உலகிற்குப் பொருத்தமற்றவனாக மாறிவிட்டான் என்பதுதான் பொருள்? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவனை உலகம் அப்படித்தானே கணிக்கிறது?

இயற்கைக்கு கச்சிதங்கள் இருப்பது போல் இயற்கைக்கு நியதிகளும் உண்டு. அந்த நியதிகளை இயற்கை ஒருபோதும் மீறுவதில்லை. அதனால்தான் அங்குள்ள கச்சிதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஓர் இயற்கை நியதியைக் குறிப்பிடலாம். கண்ணுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் போடாமல் இயற்கையை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த நியதிகளுள் ஒன்று உலக சனத்தொகையில் காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் ஆண்- பெண் எண்ணிக்கைக்கிடையிலான சமநிலை.

இயற்கையிலிருக்கின்ற இந்தக் கச்சிதத்தை கட்டமைத்தது யார்? என்று கேட்டால் மத நம்பிக்கையுடையவர்கள் இறைவன் என்பார்கள். ஏனையோர் அது இயற்கையின் நியதி என்பார்கள். இந்த இயற்கை நியதி கலாகாலமாக மனித வாழ்க்கை, விலங்குகளின் வாழ்க்கை, தாவரங்களின் வாழ்க்கை போன்றவற்றை சீராக இயக்கி வருகிறது.

எனினும், இந்த இயற்கை நியதி ஏன் மாறாமல் இருக்கிறது? என்று கேட்டால்… அதாவது, ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே உலகில் பிறந்து பெண்களின் பிறப்பு வீதம் அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடையாமல் ஏன் இருக்கிறது? என்று கேட்டால் யார் என்ன பதில் சொல்வர்கள் என்பது தெரியாது. மத நம்பிக்கையுடையோர் அது இறைவனின் செயல் எனலாம். ஏனையோர் என்ன பதில் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.

எவ்வாறாயினும், நாமிங்கு பேசுபொருளாக எடுத்துக் கொண்ட விடயம் கச்சிதம் ஆகும். இயற்கையில் கச்சிதம் இருக்கிறது. அதனை நிர்வகிப்பதற்கான விதிகளும் இருக்கின்றன.

மனிதன் அரசியல், பொருளாதார, சமூக, மார்க்க காரணிகளுக்காக ஏதாவது ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்டவற்றையோ அடிப்படையாகக் கொண்டு குறித்த நியதியை மாற்ற முயன்றால்…

அதாவது, இன்றுள்ள தொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆண்களைக் குறிப்பிட்ட காலம் பிறக்க விடாமல் தடுத்தால் அல்லது பெண்களைப் பிறக்க விடாமல் தடுத்தால் மனித வாழ்க்கை என்னவாகும்? ஏத்தகைய சீர்மைகள் இல்லாமல் போகும்? எவ்வாறான புதிய பிரச்சினைகள் தோன்றும்? இயற்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற ஒழுங்கும் சமநிலையும் சீர்குலையும்போது அது மனித வாழ்க்கையையும் உயிரினங்களது வாழ்க்கையையும் எவ்வாறு திருப்பித் தாக்கும்? அதனை நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவில் (பிறக்க விடாமல் தடுக்கும் தொழிநுட்பம் தெரியாதிருந்ததனால்) பிறந்த பின் வாழ விடாமல் தடுக்கும் உத்தியைக் கையாண்டார்கள். பெண் பிள்ளை பிறப்பது ஓர் அபசகுணம், தலைகுனிவு என்று ஒரு ஐதீக மற்றும் சமூகக் காரணியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த பெண் குழந்தைகளையெல்லாம் உயிரோடு புதைத்தார்கள் அன்றைய அரபுக் கல்நெஞ்சக்காரர்கள். அதன் விளைவாக அவர்களிடையே புதியதொரு திருமண முறை உருவாகியது. பத்து ஆண்கள் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தை யார்? என்று அப்பெண் கூறுகிறாளோ அவன்தான் அப்பெண்ணைத் திருமணம் செய்வான். ஏனையவர்கள் வேறொரு பெண்ணைத் தேடிச் செல்வார்கள். இஸ்லாம் இந்த இரு அனாச்சாரங்களையும் இல்லாமலாக்கியது. அதனால், இயற்கையின் சமநிலை, ஒழுங்கு, கச்சிதம் என்பன பாதுகாக்கப்பட்டன.

நாகரிகம் தெரியாமல் அறியாமை இருள்களில் தத்தளித்த… முரட்டுத்தனமான அன்றைய அரபுகளது கைங்கரியம் அது. இன்றோ நாகரிகமடைந்த… விஞ்ஞான, தெழிநுட்ப யுகம் ஒன்றில் வாழ்கின்ற… விண்வௌிகளில் சஞ்சரிக்கின்ற மேதாவிகளின் காலத்தில் இயற்கையின் ஒழுங்கும் சமநிலையும் கச்சிதமும் சிதைவுறுகின்ற கதையை இரத்தக் கண்ணீரால்தான் வரைய வேண்டி இருக்கின்றது.

இயற்கையின் ஒழுங்கையும் சமநிலையையும் கச்சிதத்தையும் தனது பொருளாதார நலனுக்கான கொடூரமான முறையில் பலியிட்டு வந்த மனிதனை தடுத்து நிறுத்தி இயற்கை தன்னைப் பாதுகாத்து கொள்வதற்காகவே கொவிட் 19 படையை அனுப்பியதோ என்றுகூட சிந்திக்க தூண்டுகின்றது மனம். கோவிட் 19 இனால் மனிதன் பாதிக்கப்பட்ட பின்னர் இயற்கை சற்று ஆசுவாசமாக சுவாசிக்கின்றது என்று சூழலியலாளர்கள் கூறுகின்றார்கள்.

இது மகிழ்சியாக பேசப்படுகின்ற விடயம் அல்ல. மனிதனும் (கொவிட் 19 இலிருந்தும் ஏனைய வைரஸ்களிலிருந்தும்) பாதுகாக்கப்பட்டல் வேண்டும். இயற்கையும் மனித வைரஸ்களிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும். எனினும், அந்த கரிசனை இன்றைய உலகில் யாருக்கிருக்கின்றது? தங்களது அரசியல், பொருளாதார நலன்களுக்காக பல்வேறு வைரஸ்களை பலர் வளர்த்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ராஜபக்ச அரசாங்கங்கள் வைரசுகளுக்கு எதிராக (LTTE வைரஸ், கொவிட் 19 வைரஸ்) போராடுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. ஸஹ்ரான் வைரசுகளுக்கெதிராக மைத்திரி அரசாங்கம் போராடியது. ராஜபக்ச அரசாங்கம் அதன் வேர்களை தேடிக் கொண்டிருக்கின்றது.

எப்படியோ வைரசுகள் எமது நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். இனவாத வைரஸ், இயற்கையின் வனப்பையும் ஒழுங்குகளையும் கச்சிதங்களையும் பாதிக்கும் வைரசுகள் அனைத்தும் இல்லாமலாக்கப்பட்டு ஏசைரள குசநந நாடாக இலங்கை மாற வேண்டும்.

இவை அனைத்திற்கும் அடிப்டையாக இருப்பது இருப்பதைப் பாதுகாப்பதே. அதாவது இயற்கையை பாதுகாப்பதே எனலாம். மற்றொரு வார்தையில் சொன்னால், இதுவரை நாம் பார்த்தது போல் இயற்கையின் ஒழுங்கையும் சமநிலையையும் கச்சிதத்தையும் பாதுகாப்பதாகும். அதனைப் பாதுகாக்க தவறினால் என்றோ ஒரு நாள் அதன் விளைவுகள் திருப்பித் தாக்கவே செய்யும். ஒரு சிறிய உதாரணத்தோடு முடிக்கிறேன். (அதற்குள் ஒரு பெரிய வரலாறு இருக்கின்றது.)

அமெரிக்கர்கள் கறுப்பர்களை கப்பல் கப்பல்களாகக் கடத்தி வந்து அமெரிக்க வௌ்ளையர்களின் விவசாயக் காணிகளிலும் கட்டுமானப் பணிகளிலும் சுரங்கங்களிலும் உயிராபத்துகளுக்கு இலக்காகும் இடங்களிலும் அடிமைத் தொழில் செய்பவர்களாக மாற்றினார்கள். அன்று வௌ்ளையர்கள் அதனை ஒரு சாதனையாகக் கருதினார்கள். அதனால், கறுப்பர்கள் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமல்ல. அதேநேரம், அமெரிக்க வௌ்ளையர்களும் அந்தக் கறுப்பர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகித் தத்தளிப்பவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். இந்த வேதனை அமெரிக்காவின் தீராத வலியாக என்றுமே இருக்கத்தான் போகிறது. கறுப்பர்களை அமெரிக்காவுக்கு கொண்டுவராமலே இருந்திருக்கலாம் என்பதுதான் அமெரிக்க வௌ்ளையர்களால் செயல்படுத்த முடியாத தீர்வாக இன்று எஞ்சியிருக்கிறது.

இயற்கையை இயற்கையாக இயற்கையோடு விட்டு விடுவது எதிர்கால அர்த்தத்தில் ஔிமயமானதாகும் என்பதை உணர்வதே இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வாகும்.

தஃவா களம்
அல்ஹஸனாத் – ஆகஸ்ட் 2020

About idealvision

Check Also

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை விரல்_ரேகையைப் பற்றி நவீன அறிவியல் என்ன கூறுகிறது? விரல் ரேகையானது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *