பதிவுகள்
Home / அரசியல் / கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்
corona sad

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா?

கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தினம் தினம் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; வேலையின் நிரந்தரத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது; விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளது; பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது; மருத்துவ செலவுகளை சமாளிக்க மக்கள் கடனாளி ஆகும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது; செய்துவந்த வியாபாரம் முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறது; பொருளாதார சிக்கல் கழுத்தை நெரிக்கிறது. அரசு தரும் நிவாரணமோ சுத்தமாக போதவில்லை.

இவை மக்களின் உடல் மற்றும் மன நலத்தை பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பு நீண்ட நாள் தொடரும் வண்ணம் இருக்கின்றது; தற்போதைக்கு தீருவது போன்று தெரியவில்லை. இந்த பாதிப்புகள் ஒரு குறிப்பிட்ட வயதினரை மட்டும் பாதிப்புக்குள்ளாக்கவில்லை.

எந்நேரமும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலுக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழல் வளரும் பருவத்தில் அவர்களது உடல் மற்றும் மன நலத்தில் தீராத சிக்கல்களை உருவாக்க கூடிய சூழல் ஆகும்.

பல முதியவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல் மற்றும் மன நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

மருத்துவத்திற்காக அரசு மருத்துவமனைகளை நம்பியிருந்த மக்களால் பொதுப் போக்குவரத்து முடங்கியதால், பல மாதங்களாக மருத்துவமனைக்கு சென்று அவர்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள இயலவில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் விட்டுப்போய் உள்ளது. இதனால் அவர்களது நோயின் தீவிரம் மேலும் அதிகமாகிக் கொண்டே போகிறது. சிலர் தீவிரம் அடைந்த பிறகுதான் வேறு வழி இல்லாமல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அல்லது அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதற்குள் நோயின் தன்மை முற்றி, சிகிச்சை மேலும் தீவிரமாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது அவர்களது உடல்நலத்தை மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் பாரத்தை கொடுத்து விடுகின்றது.

பொது போக்குவரத்து முடக்கத்தால் மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசாங்க மருத்துவமனைகள் கொரோனா சார்ந்த சிக்கல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால் பல நேரங்களில் வேறு பிரச்சனைக்காக செல்லும் மக்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டிய சூழ்நிலையோ அல்லது சிகிச்சை முடியும் முன்னர் அனுப்பவேண்டிய சூழ்நிலையோ ஏற்படுகின்றது. இம்மக்கள் வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனையை நாடவேண்டியுள்ளது. அந்த சமயத்திற்கு உடல் நலம் அடைந்தால் போதும் என்று எண்ணி, அங்குமிங்கும் கடன்வாங்கி வைத்தியம் பார்த்துவிட்டு பின்னர் வாங்கிய கடனை அடைக்க மிகவும் போராட்டத்திற்கு உள்ளாகின்றனர்.

கோவிட் ஊரடங்கு உத்தரவால் பலரது தொழில் முடங்கிப் போயுள்ளது. அவர்கள் எப்போது கடைகளை திறக்க முடியும், திறந்த பின் எவ்வளவு நாட்களில் வியாபாரம் மீண்டும் எழுந்து நிற்க ஆரம்பிக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.

முதலாளிகளே இவ்வளவு சிரமத்துக்கு ஆளாகும் பொழுது, வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையோ மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. நிறைய நிறுவனங்கள், மருத்துவமனைகள் கடைகள், வணிகம் சார்ந்த இடங்கள் போன்றவற்றில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் சேமிப்பு இல்லாத தொழிலாளர்களின் நிலைமை மற்றும் அவர்களை சார்ந்து அவர்கள் வீட்டிலுள்ள அவர்களின் மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் நிலைமை என்னவாகிக் கொண்டிருக்கின்றது என்று யாருக்கும் தெரியவில்லை!

தினம் தினம் நான் பார்க்கும் புறநோயாளிகள் பிரிவில், இந்த கொரோனா போது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களால், மக்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இந்த இரண்டு மாதங்களாக இந்த பொது முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் மன நோய்கள் மக்களிடம் நிறையவே வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

மனச்சோர்வு, மனப்பதற்றம், மனச்சிதைவு போன்ற மன நோய்கள் ஓடும் மற்றும் மன அழுத்தம், தூக்கமின்மை, தற்கொலை முயற்சி போன்ற மனநல சிக்கல்களோடும் நிறைய மக்கள் வந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். மனநல மருத்துவராகிய நான், வடசென்னை மற்றும் வடமேற்கு சென்னை பகுதிகளில் புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளை பார்க்கிறேன். பொதுவாக எந்த ஒரு அழுத்தத்தையும் இயல்பாக கடந்து செல்லக்கூடிய மக்கள் இவர்கள். ஆனால் இந்த முறை இந்த கொரொனா பொது முடக்கம் அவர்களது வாழ்வை முற்றிலுமாக மாற்றிப் போட்டு உள்ளது. ஒரு நிரந்தரமற்ற தன்மை அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் எப்போது தீரப் போகிறது என்பது கணிக்க இயலாத ஒன்றாக உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது இந்த ஒரு பயம் தோய்ந்த நிரந்தரமற்ற தன்மை அவர்கள் உடல் மற்றும் மனதில் தீராத ஒரு சிக்கலை தொடர்ந்து உண்டு செய்து கொண்டிருக்கிறது.

அரசு தனது கவனத்தை முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமே செலுத்தியுள்ளது. பொது முடக்கம் ஆரம்பித்து இவ்வளவு மாதங்களாகியும் மேற்காண் பிரச்சனைகளுக்கு எந்த ஒரு தெளிவான திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது. முன்பெல்லாம் மனநல புறநோயாளிகள் பிரிவில் பல்வேறு பல்வேறு காரணங்களால் மன நோய் மற்றும் மனநல சிக்கல்களுக்கான சிகிச்சைகளுக்கு வருபவர்களை பார்ப்போம். அவர்களின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் பொருளாதார சிக்கல்களினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காக வருவார்கள். அந்த சமயத்திற்கு தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைப்பதற்கு மருந்துகள் கொடுத்து விட்டு பின் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே அவர்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் என்பதையும் வலியுறுத்துவோம். அந்த சமயங்களில் வெளி சூழ்நிலையும் முட்டிமோதியாவது ஓரளவு பொருளாதார ஏற்றத்தை கொண்டுவரக்கூடிய சூழ்நிலையாக இருந்தது.

ஆனால் தற்போது வரும் நோயாளிகளில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த பயம் நிறைந்த நிரந்தரமற்ற தன்மை மற்றும் பொருளாதார மந்தநிலை இவை இரண்டு மட்டுமே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. வெளி சூழ்நிலையும் பொருளாதாரம் நிரந்தரத் தன்மையை தருவதற்கான சூழ்நிலையாக இல்லை. பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் மனநல சிக்கல்களுக்கு உள்ளாகும் பொழுது அதற்கான தீர்வு மருந்துகளை விட அந்த பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய பொறுப்பு வாய்த்தவர்கள் இடமே உண்டு. ஆனால் இதுவரை மேற்சொன்ன சிக்கல்களுக்கு தீர்வாக திட்டங்கள் எதுவும் அற்று இருப்பதால், மனநல மருத்துவனாய் இயலாமையுடன் மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் மட்டுமே வழங்க மட்டுமே முடிகிறது. இன்னும் கொடுமை என்னவெனில் மாத்திரைகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஆகவே அரசியலை அரசியலற்ற தாக்கி தனிமனித பிரச்சனையாக மாற்றுவதற்கு நானும் துணை போய்க் கொண்டிருக்கிறேன் என்பது மிகுந்த மன வேதனையை தருகிறது.

இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு, அல்லது புரிந்தாலும் இதை சீர் செய்வதற்கு மனம் உள்ளவர்களாக ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளார்களா என்பது சந்தேகமே!!!!

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும்போது, இத்துணை விஷயங்களில் மத்திய மாநில அரசுகளின் கவனம் தேவைப்பட்டு கொண்டிருக்கும்போது, அரசு எதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெளிச்சம். கொரொனாவைக் காரணம் காட்டி நாட்டின் பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குவதிலும், சுற்றுச்சூழல் சட்டங்களை பெருநிறுவனங்களுக்கு ஏதுவாக மாற்றுவதிலும், மாணவர்கள் உளவியலை மதிக்காத மற்றும் நேரெதிரான கல்விக் கொள்கையை திணிப்பதிலும், இவற்றைக் கேள்வி கேட்பவர்களை நீதிமன்றங்களின் துணையோடு குற்றவாளிகள் என்று பட்டியலிடுவதிலும், கொரொனா பிரச்சனையை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனைப் புரிவதிலும் தான் இவர்களின் அக்கறை உள்ளது. இப்படிப்பட்ட அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக மக்கள் நலனுக்கானவர்கள் என்பதை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் புரியாமல் தெரியாமல் அறியாமல் இவற்றை செய்பவர்கள் அல்ல. ஒரு தெளிவான திட்டமிடுதலுடன் அவர்களுக்குத் தேவையான நோக்கத்தோடு தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கையோடும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை மனநலத் துறையில் ANTI-SOCIAL TRAITS உள்ளவர்கள் என்றோ, ANTI SOCIAL PERSONALITY DISORDER உள்ளவர்கள் என்றோ, NARCISSISTIC PERSONALITYஉள்ளவர்கள் என்றோ வகைப்படுத்தி, அவர்களுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படும். ஆனால் அந்த் அளவு துணிவுள்ள மனநல சங்கங்கள் இங்கு இல்லை‌.

எவ்வளவு அடித்தாலும் மக்கள் தாங்குகிறார்கள் என்ற எண்ணம்தான் இவர்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. இவை அனைத்தையும் புரிந்து கொள்வது நமது முதல் கடமையாக இருக்கின்றது புரிந்து கொண்டால் மட்டும் போதாது ஒன்றுபட்டு இயங்கவும் வேண்டியிருக்கிறது!

மரு.ஸ்ரீராம், மனநல மருத்துவர்
9790817886

About idealvision

Check Also

SafooraZargar

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️ 10 ஆண்டுகளில் 39 பேர் திஹார் சிறையில் பிரசவித்துள்ளனர்!❗️டெல்லி உயர் நீதிமன்றத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *