பதிவுகள்
Home / அழைப்பியல் / ஆசூரா நோன்பும் அதன் மாண்பும்

ஆசூரா நோன்பும் அதன் மாண்பும்

நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது

காலச்சக்கரம் வெகுவேகமாகத்தான் சுழல்கிறது. மீண்டும் ஒரு ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்தித்திருக்கிறோம். புத்தாண்டின் தொடக்கமான முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தில் தான் பிறை ஒன்பது, பத்து அல்லது பத்து, பதினொன்று ஆகிய தினங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது நபி வழியாகும்.

நபிகளார் மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு வந்தபின் அங்குள்ள யூதர்கள் நோன்பு பிடிப்பதைக்கண்டு, ‘இவர்கள் எதற்காக நோன்பு பிடிக்கிறார்கள்?’ என்று மக்களிடம் விசாரித்தார்கள்.

அன்றைய பனூ இஸ்ரவேலர்கள், எகிப்தின் அரசன் பிர்அவ்ன் என்பவனின் கொடுமைகளிலிருந்து இறைவன் அருளால் மூசா நபி மூலம் காப்பாற்றப்பட்ட நாள் இந்நாள் தான். அதன் நினைவாகத்தான் இவர்கள் நோன்பு நோற்று வருகிறார்கள் என்று மக்கள் கூறினார்கள்.

இதைக்கேட்ட நபிகள் நாயகம் அவர்கள், ‘அந்த தினத்தை நாமல்லவா வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும். அதன் முழுத்தகுதியும் நமக்கல்லவா இருக்கிறது. பத்தாம் நாள் மட்டும் தான் அவர்கள் நோன்பு வைக்கிறார்கள், இன்ஷா அல் லாஹ், வரும் வருடங்களில் நாம் அத்துடன் ஒரு நோன்பை (முன்போ, பின்போ) சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டார்கள்.

முஹர்ரம் மாதத்தின் புனித இரண்டு நாள் நோன்புகள் இப்படி உருவானது தான்.

‘ஆசூரா நோன்பின் சிறப்பு என்ன?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்ட போது ‘அது கடந்தகாலப் பாவங்களுக்கு பரிகாரமாகும்’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்). (‘ஆசூரா’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘பத்தாவது நாள்’ என்று பொருள்)

நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதுதானே நம்முடைய ஒரேகுறிக்கோள். பாவ மூட்டைகளுடன் நம்மால் எப்படி பரிசுத்த சுவனத்திற்குள் நுழைய முடியும்? அந்தப்பாவ மூட்டைகளை இறக்கி வைப்பதற்கு அற்புதமான வழி இந்த முஹர்ரம் பிறை பத்தின் நோன்பு தான் என்றால் அது மிகையல்ல.

இஸ்லாமியப் புத்தாண்டு நோன்பிலிருந்து தொடங்குவது கவனிக்கத்தக்கது. நோன்பின் அசல் நோக்கம் நாம் கட்டுப்பாட்டுடனும், இறையச்சத்துடனும் இருக்க வேண்டும் என்பது தான். இவ்விரண்டு பண்புகளும் நம் வாழ்வில் வருடம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நோன்பு நமக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடமையாக்கப்பட்டி ருக்கிறது.

இஸ்லாமிய ஆண்டுக்கு ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று பெயர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ‘ஹிஜ்ரி’ என்பதற்கு ‘விடுதல்’, ‘துறத்தல்’, ‘வெறுத்தல்’ என்றெல்லாம் பொருள் பல உண்டு.

நமக்கு தேவையில்லாதவைகளை, நமது பாவங்களை விட்டொழிக்கிற போது தான் நமது ஹிஜ்ரியாண்டு உண்மையிலேயே மகத்துவமிக்க ஆண்டாக, மதிப்புமிக்க ஆண்டாக நமக்கு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

‘ஹிஜ்ரத்’ என்பது நாடு துறப்பது மட்டுமல்ல, நமது பாவங்களை துறப்பதும் ஹிஜ்ரத் தான். இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய ஹிஜ்ரத்தும் இது தான்.

இன்றைக்கு பாவங்களும், பாவச்செயல்களும் அதிகரித் துவிட்டன. இந்த பாவங்களில் இருந்து விடுதலை பெற உதவுகிறது ‘தவ்பா’ என்னும் பாவமன்னிப்பு.

‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்; அவர் களில் தவ்பா செய்பவர்களே சிறந்தவர்கள்’ என்று நபியவர்கள் கூறியது இன்றும் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.

ஆக, இஸ்லாமியப் புத்தாண்டு என்பது உண்மையில் நிறைய அர்த்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. எந்த ஒரு காரியமும் அதன் தொடக்கம் சரியாக இருந்தால் அதன் முடிவும் நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்.

நோன்பு நோற்று, இறையச்சத்தில் தொடங்கும் இஸ்லாமியப் புத்தாண்டு, ஒரு உயிரைக் கொடுத்து தியாகம் செய்யும் ஒரு குர்பானியின் வழியே முடிகிறது. ஒரு மனிதனின் சுயவாழ்வில் இறையச்சமும், நிறை தியாகமும் இருந்து விட்டால் அவனது வாழ்க்கை நிச்சயம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இதனால் தான் இப்ராகிம் நபிகள் இப்படி சொன்னார்கள்: “நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை”. (திருக்குர்ஆன் 6:162)

‘எதுவும் எனக்குரியதல்ல. எல்லாம் அவனுக்குரியதே’ என்ற எண்ணம் நமக்குள் வராதவரை நாம் அவனை அடைய முடியாது என்பது தான் இப் புத்தாண்டின் பத்தாம் நாளான ஆசூரா நமக்கு உணர்த்தும் உண்மை.

இந்த நாளில் இந்த நோன்பைத் தவிர புனிதமான செயல்கள் என்று வேறு எதுவுமில்லை. ஏனெனில் நோன்பு தான் இறையச்சத்தைத் தரும் ஆடையாகவும், சாத்தானின் செயல்களுக்கு கேடயமாகவும் இருக்கிறது. எனவே இதைவிட வேறு நல்ல அமல் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அதை நபிகள் நாயகம் கட்டாயம் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

எனவே, இந்த இருநாட்களில் நாம் நோன்பு நோற்பது பெரிதல்ல. அதை சரியாக, முறையாக நோற்க வேண்டும். அதை கண்ணியப்படுத்த வேண்டும். உண்ணாமல், பருகாமல் வெறும் பட்டினி கிடப்பதல்ல நோன்பு. முழு இறையச்சத்தோடும், நிறையச்சத்தோடும் வாழ்வது தான் நோன்பு.

நோன்பு வைத்துக் கொண்டு பொய், புறம், கோள் சொல்வது கூடாது. வீண் பேச்சுக்கள் பேசக்கூடாது. சண்டை, சச்சரவு செய்யக் கூடாது. தீய பார்வை தீயகேள்வி, தீயசுவை, தீய உணர்வு, தீயநுகர்வு போன்றவை கூடாது. ஆக தீமைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடாது.

நன்மைகளையும், நல்லவைகளையும் செய்யவேண்டும் என்பதையே எந்தவொரு நோன்பும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இந்த ஆசூரா நோன்பும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

வாருங்கள் நமது நோன்பினை போற்றுவோம்…!

நமது மாண்பினை வளர்ப்போம்…!

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி,

ஈரோடு-3.

About idealvision

Check Also

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *