<pCLICK – இணைந்திருங்கள் style=”text-align: left;”>மௌலவி இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத்
<><><><><><><><><><><>
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர், அக்கட்சியின் தூணாக விளங்கியவர், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர்,எளிமையின் அடையாளம், நேர்மையின் மறுவடிவம், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அல்ஹாஜ் அஹ்மது பட்டேல் அவர்கள் இறைவனிடம் ஏகினார் என்ற செய்தி இன்று 25.11.2020 காலை வந்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மத்திய அமைச்சர் பதவிகளை விரும்பாதவர், புகைப்படங்களில் அதிகம் காணப்படாதவர், ஆபத்தான காலங்களில் கட்சிக்கு உறுதுணையாக இருந்தவர், தேசத்தை தூக்கி நிறுத்திய பல அரிய முடிவுகளில் அதிகமான பங்கை செலுத்தியவர், சச்சார் கமிஷன் அமைந்திடக் காரணமானவர் இப்படி நிறையச் சொல்லலாம் அவர் புகழை.
நாடெங்கிலும் ஃபாசிஸ்டுகள் ஆங்காங்கே கலவரங்களை நடத்தி, குண்டுகளை வெடிக்க வைத்து முஸ்லிம்களை வேட்டையாடிக்கொண்டிருந்த போது Anti communal violence bill மதக்கலவர தடுப்பு மசோதா ஒன்றை வடிவமைத்தவர்.
இந்த மசோதாவை சட்டமாக்கிட அரும்பாடு பட்டார்.
இந்த சமயத்தில்தான் அன்னா ஹசாரே என்பவரை களத்தில் இறக்கி நாட்டு மக்களை குழப்பி பின் அதன் விளைவாக ஆட்சியிலும் அமர்ந்தனர் ஃபாசிஸ்டுகள்.
அஹ்மது பட்டேல் அவர்களின் முயற்சி நிறைவேறியிருந்தால் இன்றைய நடுவண் அமைச்சர்கள் பலரும் உ.பி. முதல்வர் யோகி முதலியோரும் கவர்னர்களாக இப்போது கொலுவீற்றிருக்கும் பலரும் சிறைகளில் அச்சடித்த சோறு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். யார் கண்டது ! மோடியும் அமித்ஷாவும் கூட கம்பி எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம்!
ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரக் கனவு கனவாகவே போயிருக்கும்.
ஃபாசிசம் இந்தியாவின் நடுவண் அரசைக் கைப்பற்றிய பின்னர், இவரை பிஜேபியில் சேர அழைத்து பாலை வார்த்து பசப்பிய போதும் உருட்டல் மிரட்டல் மொழிகளில் உரையாடிய போதும் மிரளாமல் நிலைத்து நின்றவர்.
இதனால் இவர் மறுபடி பாராளுமன்ற மேலவை உறுப்பினராவதை தடுக்க ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்தது மோடி அமித்ஷா இரட்டையர் அணி. இவரே வென்றார்.
2009 ஆம் ஆண்டு எம்மோடு ஹஜ்ஜின் வணக்க வழிபாடுகளை குடும்பத்துடன் வந்து நிறைவேற்றினார்.
மினா கூடாரத்தில் எங்கள் ஹாஜிகளுக்கு நான் தமிழில் பயான் செய்யும் போது உட்கார்ந்து கேட்பார். “உங்களுக்கு தமிழ் தெரியுமா” என்று கேட்டபோது, “மொழி புரியாவிட்டல் என்ன அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தானே பேசுகிறீர்கள். நல்ல வார்த்தைகள் என் காதில் விழட்டுமே… தல்பியா, திக்ரு சொல்கிறீர்கள் நானும் சொல்கிறேன். அதனால் அமர்ந்திருக்கிறேன்” என்றார்.
அரஃபா தினத்தில் நண்பர் ஹாலித் மௌலானாவின் உருது பயானில் பங்கேற்றார்.
அரஃபா மைதானத்தில் இஹ்ராம் ஆடையில் எளிமையான கோலத்தில் அதிகாரச் செருக்கின் அடையாளம் அணுவத்தனையுமின்றி, தல்பியாவை மொழிந்த வண்ணம் அவர் வீற்றிருந்த காட்சி இன்னும் என் நெஞ்சக் கூட்டினுள் அழியாமல் இருக்கிறது.
“உங்களின் வருகையை சவூதி அரசுக்கு முறைப்படி தெருவித்திருந்தால் ராஜாங்க ரீதியான உபசரிப்பும் வசதியான ஏற்பாடுகளும் கிடைத்திருக்குமே” என்று எமது ஹஜ் குரூப்பின் ஹாஜிகள் சிலர் கேட்டபோது, “அதெல்லாம் வேண்டாம். அல்லாஹ்வின் எளிய அடிமையாக இப்படிச் செய்யும் ஹஜ்ஜின் சுகம் தனியானது அல்லவா!” என்று பதிலளித்தார்.
அனைவருடனும் அன்போடு பேசினார். மினாவின் அசவுகரியங்களை எளிதாக எடுத்துக் கொண்டார்.
ஹாஜிகள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ( பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் J.M. ஹாரூன் அவர்களின் மைத்துனர் மௌலானாஹாஜி, கலீல் ஹாஜி, அம்பத்தூர் பாடகர் பீர் முஹம்மது ஹாஜி, ஹாலித் மௌலானா ஆகியவர்களிடம் அந்த புகைப்படங்கள் இருக்கக்கூடும்.)
“நாடு திரும்பிய பின் தொடர்பிலேயே இருப்போம்”என்றார். எனினும் தொடர்பு கொள்ள முயற்சிகள் எதுவும் நான் செய்யவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை.
டெல்லி இனப்படுகொலை (பிப்ரவரி 2020 )ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சார்பில் நிவாரணம் வழங்கிட சென்ற போது ஒரு முறையாவது அவரை அவசியம் சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லிம்களுக்குமான உறவை மேம்படுத்துவது குறித்து ஒரு விரிவான உரையாடல் நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முடியாமலே போயிற்று.
இனி மஹ்ஷரில் தான் சந்திக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.
இன்று காலை அன்னாரின் இறப்புச் செய்தி செவியைத் தட்டிய போது இஹ்ராம் அணிந்த கோலத்தில் மனக்கண் முன் வந்து ஒரு தடவை தல்பியா சொல்லிவிட்டுப் போனார் அஹ்மத் பட்டேல்.
அல்விதா… அஹ்மத் பட்டேல்!