காலணி தந்த நாணயங்கள்…!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நான் இப்போ ஒரு சம்பவம் சொல்லப் போறேன் ; பொறுமையா படிங்க !!
ஒரு அறிஞர் தனது மாணவரோடு வயல்வெளியில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் நடந்து கொண்டிருந்த போது, அருகிலுள்ள வயலில் வேலை செய்யும் ஒரு ஏழையின் பழைய காலணியை கண்டார்கள், அவர் விரைவில் தனது வேலையை முடித்துவிட்டு அதை எடுக்க வருவார் என்று இருவரும் கருதினர்
அப்போது மாணவர் தனது ஆசிரியரிடம் கூறினார்: இந்த காலணிக்குரியவர் வந்தால் நாம் சிறிது தமாஷ் பண்ணலாம், அவருடைய இந்த பழைய காலணியை மறைத்து வைத்து விடுவோம், அவர் அதை அணிவதற்காக வரும்போது காலணி இல்லாமல் இருப்பதைக் கண்டு அவர் என்ன செய்கிறார், என்பதை நாம் பார்ப்போமே ! என்றார்.
ஆசிரியர் பதிலளித்தார்:
“மற்றவர்களின் துயரங்களில் நாம் நம்மை மகிழ்விக்கக் கூடாது, ஆனால் என் பணக்கார மாணவனே, நீயும் அந்த ஏழையும் மகிழ்ச்சி அடையும் ஒரு செயலை செய்யலாமே; என்றார்.
என்ன செய்ய வேண்டும் ? என்று மாணவர் கேட்டார் .
உன்னிடத்தில் இருக்கும் நாணயத்தை அவரது காலணிகளுக்குள் மறைத்து வைத்து விடு, அவர் வரும்போது என்ன செய்கிறார் என்பதை நாம் பார்ப்போம், என்றார்.
மாணவர் அந்த ஆலோசனைப்படி, அந்த தொழிலாளியின் காலணிகளில் நாணயங்களை வைத்தார், பின்னர் அவரும் அவரது ஆசிரியரும் புதருக்குப் பின்னால் ஒளிந்தனர். ஏழை தொழிலாளி என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு ஏழை தொழிலாளி வயலில் வேலை முடிந்ததும் தனது காலணிகளை எடுக்க வந்தார், காலணிக்குள் கால் வைத்தபோது அதற்குள் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்து அதை வெளியே எடுத்தபோது நாணயம் என்பதை அறிந்து கொண்டார்,
அவர் மற்ற காலணியிலும் இதேபோல் செய்தார், அதிலும் நாணயம் இருக்கக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
அவர் நாணயத்தை உற்று நோக்கினார், காலணிகளுக்குள் நாணயம் இருப்பதை நம்பாமல் தான் கனவு காணவில்லை என்பதை உறுதிப்படுத்த எல்லா திசைகளிலும் சுற்றிப் பார்த்தார், அவரைச் சுற்றி யாரையும் காணவில்லை !!
அவர் நாணயத்தை தனது சட்டைப் பையில் வைத்து, முழங்காலில் விழுந்து,கண்ணீருடன் வானத்தைப் பார்த்து, உரத்த குரலில் தனது இறைவனிடம் அழுதார்:
“இறைவா, என் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதையும், என் குழந்தைகள் பசியுடன் இருப்பதையும், அவர்கள் உணவுக்கு ரொட்டி கூட என்னால் வாங்க முடியவில்லை என்பதையும் அறிந்திருந்தாய், இப்போது நீ என்னையும் என் குடும்பத்தையும் சிரமத்திலிருந்து காப்பாற்றினாய்;
என்று இறைவனின் இந்தத் தாராளமான உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், வானத்தைப் பார்த்து நீண்ட நேரம் அழுதார்.
இதைப் பார்த்த மாணவனின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டு கண்களில் கண்ணீர் நிறைந்தது,
பின்னர் ஆசிரியர் கூறினார்:
” மகனே! உனது முதல் ஆலோசனையின் படி செயல்படுவதை விட, இப்பொழுது நடந்தது மகிழ்ச்சிகரமானதாக இல்லையா ? என்று கேட்டார்.
மாணவர் பதிலளித்தார்:
“இன்று நான் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
என் வாழ்க்கையில் எனக்கு புரியாத சில சொற்களின் அர்த்தத்தை இப்போது புரிந்துகொண்டேன்:
“நீங்கள் பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட, கொடுக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி மிகப் பெரியது ”
என்பதை உணர்ந்து கொண்டேன், என்று மாணவர் கூறினார்.
பிறகு அவ்விருவரும் ஏழைத் தொழிலாளியை சந்தித்து நடந்ததைக் கூறி வாழ்த்துச் சொல்லி அனுப்பினர்.
தொடர்ந்து ஆசிரியர் மாணவனிடம் கூறினார்:
என் மகனே! கொடுப்பதில் பல வகைகள் உள்ளன என்பதை அறிந்துகொள்:
• நீ பலமாக இருக்கும் நிலையில் மன்னிப்பு அளிப்பது,
• உன் சகோதரனுக்கு தெரியாத நிலையில் அவனுக்காக வேண்டிப் பிரார்த்திப்பது,
• ஒரு சகோதரன் மீது விழுந்த தீய எண்ணத்தை தவிர்ப்பதற்காக நியாயமான காரணத்தை தேடுவது
• உன் சகோதரன் இல்லாத நேரத்தில் அவன் மீது கண்ணியக் குறைவு ஏற்படுவதை விட்டும் பாதுகாப்பது;
ஆகியவைகளும் கொடுத்து உதவுதல் என்ற வகையைச் சேர்ந்ததுதான் என்றார்.
இச்சம்பவம் நமக்கும் பாடம் தானே !!
(அரபு பத்திரிகையில் வந்தது)
ஜே எஸ் ரிஃபாயீ
(25/11/20)