பதிவுகள்
Home / ஆரோக்கியம் / கருவிகள் நம்மைக் காப்பாற்றுமா

கருவிகள் நம்மைக் காப்பாற்றுமா

கருவிகள் நம்மைக் காப்பாற்றுமா

எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் சிம்ஸ் மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சமூதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துக்களை சினிமா மூலம் சொன்னவர். அதற்காகவே சின்னக் கலைவாணர் என்ற பெயரும் பெற்றவர்.

திடீர் மாரடைப்பு வந்து உணர்விழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.
அவருக்கு ஆஞ்சையோ ப்ளாஸ்டி செய்யப்பட்டது என்றும், ECMO கருவி பொருத்தப்பட்டதென்றும் டிவி செய்தியில் கூறினார்கள்.

இதே கருவிதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பாடகர் எஸ்.பி.பி.க்கும் பொருத்தப்பட்டது என்றும் கூறினார்கள்.

அது என்ன கருவி என்று ’நெட்’டில் தேடிப்பார்த்தேன். நுரையீரலுக்கு ஆக்சிஜனையும், இதயத்துக்கு ரத்தத்தையும் சீராக அனுப்பும் கருவி என்று போடப்பட்டிருந்தது.

ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படும்போது உறவினர்களும், மருத்துவர்களும் அவசரமாக சில முன்முடிவுகளுக்கு வந்துவிடுகிறோம்.

அதில் ஏதோ அடிப்படைத்தவறு இருப்பதாக எனக்குப் படுகிறது.

உதாரணமாக எனக்கு போன வருஷம் இரண்டாவது முறையாக ’ஹார்ட் அட்டாக்’ வந்தது. அப்போலோவில்தான் அனுமதிக்கப்பட்டேன்.

நாலு நாள் வைத்திருந்த அவர்கள் ’பை பாஸ் ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ‘பேக்கேஜ்’. ஏதோ இன்பச்சுற்றுலா போவது மாதிரி! செத்துப்போவது ‘டெத் பேக்கேஜ்’!

அவர்கள் கருத்துப்படி அப்போதுதான் நான் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க முடியும்.

ஆனால் நான் பிடிவாதமாக அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதிருப்திருடன் ‘நோட்’ போட்டு ‘டிஸ்சார்ஜ்’ செய்தார்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற அதேசமயம் மனசாட்சியுள்ள ஹெக்டே போன்ற இதய வல்லுனர்களும் இதயப்பிரச்சனைக்கு ‘ஆபரேஷன்’தான் ஒரேவழி என்று சொல்லவில்லை. கட்டியுடன், அடைப்புடன் இருக்க இதயம் பழகிக்கொள்ளும் என்கிறார் ஹெக்டே.

தன்னை குணப்படுத்திக்கொள்ள உடலுக்குத் தெரியும். ஆனால் அதைச் செயல்படுவதற்கு நாம் விடுவதில்லை. அதுதான் பிரச்சனையே என்கிறார்.

ECMO கருவி பொருத்தப்பட்ட மூன்று பேருமே உயிருடன் இல்லை. கருவிகளால் நம் உயிரைக் காப்பாற்றி வைக்க முடியுமா?! அப்படியானால் ஒன்றுமே செய்யாவிட்டால் என்னாகும்?

உயிர் போகவேண்டுமெனில் அது நிச்சயம் போய்விடும். போகாது எனில் அது நிச்சயம் போகாது. இறைவன் விதித்தபடிதான் எல்லாம் நடக்கும்.

அவசரத்துக்கான ஒரு ’மினிமல்’ உதவியை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது நம் அனுமதியும், விழிப்புணர்வும் இல்லாத நிலையில் நம் உடல்மீது அதிநவீன கருவிகள் செய்யும் ஆதிக்கமாக அது இருக்கக்கூடாது.

நான் அப்போலோ போய்விட்டு வந்த பிறகும், அவர்கள் கொடுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்ட போதும் எனக்கு அவ்வப்போது நெஞ்சுவலி வந்துகொண்டுதான் இருந்தது. அதைப்போக்கியது யார் தெரியுமா?

கொரோனாவுக்காக சேவை செய்யச்சென்று சட்டென்று இறந்துபோன இளைஞர் ஆம்பூர் யூனானி மருத்துவர் அஃப்ரோஸ் பாஷா அவர்கள்தான்!

ஆங்கில மருத்துவத்தால் செய்ய முடியாததை யூனானி எனக்கு செய்தது! ஆனால் அவர் ஏன் இறந்துபோனார்?! அதுதா விதி. இறைவன் விதித்தது.

நம் உடல்நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாம் நன்றாக இருப்பதற்குக் காரணம் நம் மனம், நம்மீது அன்புகொண்ட குடும்பத்தின் அருகாமை, அன்புகொண்ட உறவினர்களின், சகோதரர்களின் விசாரிப்புகள், பிரார்த்தனைகள் – இவைகள்தான்.

ஆனால் கருவிகளின் உலகில் மாட்டிக்கொண்டால், ஆரோக்கியமான மனநிலையிலிருந்தும், அன்பான பிரார்த்தனைகளிலிருந்தும் நாம் தூரமாகிவிடுகிறோம்.

“மனிதர்கள் பிழைக்க வேண்டுமென்றால் ஆங்கில மருத்துவம் சாகவேண்டும்’’ என்று சொன்னவர் யார் தெரியுமா?

சென்னையின் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவரான டாக்டர். ஃபசுலுர் ரஹ்மான்!

அவரளவுக்கு நாம் சொல்லவோ நினைக்கவோ தேவையில்லை. ஆனால் உயிர் போய்விடும் என்ற சூழ்நிலையில் கருவிகளின் உதவிகொண்டு இதுவரை யாரும் காப்பற்றப்பட்டதாக வரலாறு இல்லை.

ஜெயலலிதா, எஸ்பிபி, விவேக் – இப்படிப்பட்ட பிரபலங்களையே காப்பாற்ற முடியவில்லையெனில் சாதாரண மனிதனின் நிலை என்னாகும்?

நாம் இறந்து போவதாக இருந்தால், நம் வீட்டிலேயே, நம்மீது பேரன்பு கொண்ட, நமக்காகப் பிரார்த்திக்கின்ற மனைவி மக்கள் அருகில் இருக்கும்போது நம் உயிர் போகட்டும்.

யாருமே இல்லாமல், யாரென்றே தெரியாத, உணர்ச்சிகளற்ற, முகங்களற்ற, முகமூடி மனிதர்களுக்கு மத்தியில் நம் உயிர் ஏன் போகவேண்டும்?

வானவர் வந்து உயிரை உருவுவதற்கு பதிலாக, அந்த வேலையைச் செய்ய கருவிகளை ஏன் அனுமதிக்கவேண்டும்?

நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைவதாக. இறைவன் தன் கருணையின் பொருட்டு அவருக்கு அருள் பாலிக்கட்டும்.

Nagore Rumi

About idealvision

Check Also

குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்

திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *