பதிவுகள்
Home / அரசியல் / துப்பறிதல், உளவு பார்த்தல் இஸ்லாம் சொல்வதென்ன?

துப்பறிதல், உளவு பார்த்தல் இஸ்லாம் சொல்வதென்ன?

துப்பறிதல், உளவு பார்த்தல் இஸ்லாம் சொல்வதென்ன?

பெகாஸஸ் விவகாரம் இன்று உலகத்தையே அச்சுறுத்துகின்ற மிகப் பெரும் சாபக்கேடாக ஓங்கி நிற்கின்றது. அதனை உருவாக்கிய இஸ்ரேல் அரசு அதனை இராணுவங்கள் பயன்படுத்தத்தக்க ஆயுதமாகத் தான் அறிவித்திருக்கின்றது. அதனை சாமான்யர்கள் எவரும் பயன்படுத்த முடியாது. அது அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுகின்றது.

ஆனால் இப்போது வெளியாகியிருக்கின்ற இந்த பெகாஸஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலோ வேறு கதையைச் சொல்கின்றது.

குறிப்பாக நம்முடைய நாட்டில் இது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, அற்பமான அரசியல் இலாபங்களுக்காக, நீதியரசர்களை வளைத்துப் போடுவதற்காக, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. உச்ச நீதிமன்றம் முதல் சிபிஐ வரை, பத்திரிகையாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை, பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பெகாஸஸ் பொறியில் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தெலுங்கு பட ஆக்ஷன் பட வில்லன்களைப் போன்ற வில்லத்தனத்துடன் ஏராளமானோர் குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உச்ச நீதிமன்றம், மக்களவை உறுப்பினர்கள், சிபிஐ, தேர்தல் ஆணையம், பத்திரிகையாளர்கள் என மக்களாட்சியின் தூண்கள் அனைத்தையும் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது இந்த பெகாஸஸ்.

இது அப்பட்டமான தேசத் துரோகம் என்று குமுறியிருக்கின்றார் ராகுல் காந்தி. போலி தேசப்பக்தர்களோ எதிர்வினையாற்ற வார்த்தைகளின்றி, மக்களை எதிர்கொள்வதற்கு மனம் இன்றி இருட்டறைகளில் பதுங்கிக் கிடக்கின்றார்கள்.

துப்பறிவது குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?

‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.’ என்றே குர்ஆன் அறிவிக்கின்றது. (அத்தியாயம் 49 அல்ஹுஜராத் 12).

இந்த வசனத்துக்கு மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் தந்துள்ள விளக்கக் குறிப்புகளின் விவரம் வருமாறு:

‘மற்றவர்களின் விவகாரங்கள் குறித்து துருவித் துருவி ஆராய்வதில் ஈடுபடாதீர்கள்; மற்றவர்களிடம் குறைகள் இருக்கின்றனவா என்று தேடாதீர்கள். மற்றவர்களின் நிலைமைகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து கொண்டு திரியாதீர்கள்.

மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்துடன் இதில் ஈடுபட்டாலும், அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியவற்றால் உந்தப்பட்டு செய்தாலும், வெறுமனே தன்னுடைய ஆர்வத்தை (ஞிதணூடிணிண்டிtதூ) தணித்துக்கொள்வதற்காகச் செய்தாலும் எந்தவொரு நிலைமையிலும் இந்தச் செயல் ஷரீஅத்தில் தடை செய்யப்பட்டுள்ளது..

மற்றவர்களின் நிலைமைகள் மீது திரை விழுந்திருக்க அந்தத் திரையைக் கிழித்துப் பார்ப்பதும் திரைக்குப் பின்னால் இருப்பதை எட்டிப் பார்ப்பதும் நம்பிக்கையாளனுக்கு அழகு அல்ல. எவரிடம் என்ன குறை இருக்கின்றது, எவரிடம் என்ன மாதிரியான பலவீனங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள முயல்வது, மற்றவர்களின் தனிப்பட்ட கடிதங்களைப் படிப்பது, மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பதை எட்டி நின்றவாறு காது கொடுத்து கேட்பது, அண்டை வீட்டார்களின் இல்லங்களில் எட்டிப் பார்ப்பது, அடுத்தவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும், தனிப்பட்ட விவகாரங்களைப் பற்றியும் பல வழிகளில் துருவித் துருவி ஆராய்வது ஆகிய அனைத்தும் மிகவும் மோசமான ஒழுக்கக் கேடு ஆகும். இதன் மூலமாக விதவிதமான குழப்பங்களும் சீர்கேடுகளும் உருவாகின்றன. இவையனைத்தும் இவ்வசனத்தில் தடுக்கப்பட்டுள்ள துப்பறிதலில் அடங்கும்.

நபிகளார்(ஸல்) ஒரு முறை தம்முடைய உரையில் இந்த மாதிரி துப்பறிவதில் ஈடுபடுகின்ற மனிதர்களைக் குறித்துச் சொன்னார்கள்:
‘நாவளவில் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற மனிதர்களே! இன்னும் உங்களின் இதயங்களில் இறைவன் மீதான நம்பிக்கை இறங்கவில்லை. முஸ்லிம்களின் மறைவான நிலைமைகளை அறிவதில் முனைப்புடன் இருக்காதீர்கள். ஏனெனில் எவரொருவர் முஸ்லிம்களின் குற்றங்குறைகளை அறிந்துகொள்வதிலும் பலவீனங்களைத் தெரிந்துகொள்வதிலும் துப்பறிவதிலும் துருவித் துருவி ஆராய்ந்தறிவதிலும் எந்நேரமும் ஆர்வத்துடன் இருப்பாரோ அல்லாஹ் அவருடைய குற்றங்குறைகளைத் துப்பறிவதில் ஈடுபட்டுவிடுவான். அல்லாஹ் எவருக்குப் பின்னால் தன்னுடைய கவனத்தைக் குவிக்கின்றானோ அவனுடைய வீட்டில் இழிவையும் கேவலத்தையும் விட்டு விடுகின்றான். (நூல் : அபூதாவூத்)

முஆவியா(ரலி) கூறுகின்றார்: நபிகளார்(ஸல்) கூறினார்கள் : ‘நீர் மக்களின் மறைவான நிலைமைகளை அறிந்துகொள்வதில் முனைப்புடன் இருப்பீர்களாயின், அவற்றைக் குறித்து துப்பறிவதிலும் துருவித் துருவி ஆராய்வதிலும் ஈடுபடுவீர்களாயின் அவர்களை வழிகெடுத்துவிடுவீர்கள். அல்லது குறைந்தபட்சம் அவர்களை வழிகேட்டின் அருகில் தள்ளிவிடுவீர்கள். (நூல் : அபூதாவூத்)

துருவித் துருவி ஆராய்வதையும், துப்பறிவதையும், உளவு பார்ப்பதையும் தடுக்கின்ற இந்த கட்டளை தனி மனிதர்களுக்குரியது மட்டுமல்ல. அதற்கு மாறாக இஸ்லாமிய அரசாங்கத்தையும் இது கட்டுப்படுத்தும். தீமைகளைத் தடுத்து நிறுத்துகின்ற கடமையை அரசாங்கத்தின் மீது ஷரீஅத் சுமத்தியிருக்கின்றது. ஆனால் மக்களின் மறைவான, இரகசிய தீமைகளைத் தேடித் தேடியெடுத்து அம்பலப்படுத்தி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று அதற்குப் பொருள் அல்ல. அதற்கு மாறாக வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்ற தீமைகளுக்கு எதிராகத்தான் அது தன்னுடைய வலிமையைப் பயன்படுத்த வேண்டும்.

இரகசியமாக, மறைவாகச் செய்யப்படுகின்ற தீமைகள், தீயச் செயல்களைப் பொறுத்தவரை அவற்றைத் திருத்துவதற்கான பாதை உளவு பார்ப்பதோ, துப்பறிவதோ ஆகாது. அதற்கு மாறாக கற்பித்தல், போதித்தல், அறிவுரை கூறுதல், அறிவுறுத்துதல், மக்கள் கருத்தை வார்த்தெடுத்தல், மக்களின் கூட்டுப் பயிற்றுவிப்பு போன்றவற்றின் மூலமாகவும், ஒரு தூய்மையான சமூகச் சூழலை ஏற்படுத்துவதன் மூலமாகவும்தான் அவற்றை அகற்றவும் சீர்படுத்தவும் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக உமர்(ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு புகழ்பெற்ற, படிப்பினை தருகின்ற நிகழ்வைச் சொல்லலாம்.

ஒரு முறை உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் இரவில் நகர்வலம் வந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்ததைக் கேட்டார். ஒரு மனிதர் உற்சாகமாக பாடுகின்ற ஓசை அது.

உமர்(ரலி) அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட அந்த வீட்டின் சுவற்றில் ஏறிப் பார்த்தார். அங்கே பாடலுடன் மதுவும் மங்கையும் இருப்பதைப் பார்த்தார்.

உடனே உமர்(ரலி) உரத்துச் சொன்னார்: ‘ஏ இறைவனின் எதிரியே! நீ வலிந்து இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்தாலும் அவன் உன்னை அம்பலப்படுத்த மாட்டான் என்று நினைத்து விட்டாயா, என்ன?’

அந்த மனிதர் பதில் சொன்னார்: ‘அமீருல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவசரப்படாதீர். நான் ஒரு பாவம் செய்திருக்கின்றேன் எனில் நீங்கள் மூன்று பாவங்களைச் செய்திருக்கின்றீர்.

துப்பறியாதீர் என்று அல்லாஹ் தடை செய்தான். ஆனால் நீங்களோ அந்தத் தடையை மீறி துப்பறிந்திருந்திருக்கின்றீர்.

மக்களின் வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகச் செல்லுங்கள் என்று அல்லாஹ் ஆணையிட்டான். ஆனால் நீங்களோ அந்தக் கட்டளையை மீறி சுவர் ஏறி வந்திருக்கின்றீர்.

உங்களின் இல்லங்களைத் தவிர மற்றவர்களின் இல்லங்களுக்குள் இல்லத்தாரின் அனுமதியைப் பெறாமல் நுழைய வேண்டாம் என்று அல்லாஹ் ஆணையிட்டான். ஆனால் நீங்களோ என்னுடைய அனுமதியைப் பெறாமல் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டீர்’.

இந்தப் பதிலைக் கேட்டதும் உமர் ஃபாரூக்(ரலி) அவர்கள் தம்முடைய தவறை ஏற்றுக்கொண்டார். அந்த மனிதருக்கு எதிராக எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அதே சமயம் இனி மேல் தம்மைத் திருத்திக் கொள்வதாகவும் நேரிய வழியில் நடப்பதாகவும் அந்த மனிதரிடம் வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார். (மகாரிமுல் அக்லாக் அல் அபிபக்கர் முஹம்மத் பின் ஜஃபர் அல்கராயிதி)

மக்களின் இரகசியங்களைக் குறித்து துருவித் துருவி ஆராய்வதற்கும், அவர்கள் செய்கின்ற பாவங்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவதற்கும் அதன் பிறகு அவர்களைக் கைதுசெய்வதற்கும் அரசாங்கங்களுக்கும் உரிமை கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இதே கருத்து இன்னோர் நபிமொழியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நபிகளார்(ஸல்) கூறினார்கள் : ‘ஆட்சியாளர் மக்களின் அய்யங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கிவிடுகின்ற போது அது அவர்களைச் சீரழித்து விடுகின்றது’. (அபூதாவூத்)

சில குறிப்பிட்ட அசாதாரணமான சூழல்களுக்கு மட்டும் இந்தக் கட்டளையிலிருந்து விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதரிடமோ அல்லது ஒரு குழுவினரிடமோ சீரழிவுக்கான அறிகுறிகள் வெளிப்படையாக அழுத்தமாகத் தென்படுமேயானால், அவரோ அந்தக் குழுவினரோ ஏதோவொரு குற்றம் இழைக்கப் போகின்றார்கள் என்கிற அய்யம் இருக்குமேயானால் அவர்களைப் பற்றிய நிலைமைகள் குறித்து ஆராய்ந்தறிகின்ற உரிமை அரசாங்கத்துக்கு உண்டு.

அதே போன்று ஒருவர் ஓரிடத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக செய்தி அனுப்பி இருக்கின்ற போது, அல்லது ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து வணிகம் செய்கின்ற எண்ணம் இருக்கின்ற போது தொடர்பானவர் தொடர்பான விவரங்களை ஆராய்ந்தறிவதற்கு அனுமதி உண்டு.

– அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

About idealvision

Check Also

குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்

திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *