பதிவுகள்
Home / Uncategorized / இஸ்லாமோபியாவுக்கு எதிரான ‘மாநாடு’

இஸ்லாமோபியாவுக்கு எதிரான ‘மாநாடு’

இஸ்லாமோபியாவுக்கு எதிரான ‘மாநாடு’

சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் வெளியான ‘மாநாடு’, சமகலாத்தில் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் வெறுப்பரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் பின்னணியையும் அதன் விளைவுகளையும் இயல்பாக பதிவு செய்துள்ளது. ஆனால், தீவிரமாகவும் முழுமையான உட்கூறுகளுடனும் எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. அதற்கான அவசியமும் ‘மாநாடு’ படக்குழுவினருக்கு கிடையாது என்பது எனது கருத்து.

வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் இப்படியான கதைக்களத்தை தேர்வு செய்து, அதனை வெற்றியாக்கியதே முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலான விசயம். தொன்னுறுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் பாத்திரங்களும் அதன் மூலம் திணிக்கப்பட்ட விசமத்தனங்களுக்கு மத்தியில் மாநாடு படத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். இதுவே ஒரு நல்ல முன்னெடுப்பு, இதை முஸ்லிம் சமூகம் வரவேற்கதான் வேண்டுமே தவிர, காமாலை கண்களோடு குறைகளைத் தேடினால் நமக்கே இழிவு. முன்னதாக வெளியான சலீம், கவண், மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களையும் நாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

படத்தின் மொத்த கதைக்களமும் கோவையில் தான். பாபர் மசூதி இடிப்பு, கோவை கலவரம் என உண்மைச் சம்பவங்களை படத்திற்குத் தேவையான வகையில் தொடர்புப்படுத்தியுள்ளது சிறப்பு. அப்துல் காலிக் என்ற சிம்புவின் பாத்திரமும், அவரையே இஸ்லாமிய வெறுப்பு அரசியல், தீவிரவாதத்திற்கு எதிரான வசனங்களை பேச வைத்திருப்பதும் பிரசாரத்தன்மையில் இருந்து படத்தை விலகிச்செல்ல வைத்துள்ளது. அதேசமயம் தீவிர இந்து அடையாளங்களோடு படத்தில் வரும் வாகை சந்திரசேகர் பாத்திரத்தை நேர்மறையாக காட்டியிருப்பதும் வரவேற்க வேண்டியது.

“அமெரிக்காவில் ஒருத்தன் துப்பாக்கிய எடுத்து சுட்டா, அவன சைக்கோன்னு சொல்றதும், அதையே ஒரு முஸ்லிம் செஞ்சிட்டா அவன தீவிரவாதின்னு அடையாளப்படுத்துறதும் என்ன சார் நியாயம்ன்னு” சிம்பு கேட்பது, முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல்களை அனைவரும் புரிந்துகொள்ள வகை செய்கிறது. இப்படி இன்னும் சில காட்சிகளும் வசனங்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலான அம்சங்களே.

இஸ்லாமிய வெறுப்பு அரசியலைப் பற்றி இன்னும் ஆழமாக பேச வேண்டும் என்றால், அதற்கு இச்சமூகத்தைச் சார்ந்த படைப்பாளர்கள் தான் முன்வர வேண்டும். அதுஇல்லாமல் எதற்கெடுத்தாலும் ஹராம் என கூப்பாடு போட்டபடி, வெறுமனே ஃபத்வா மட்டும் கொடுத்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது. இப்போதைக்கு ’மாநாடு’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்க வேண்டிய நேரமிது.
Kalandhai Abdul Rahman

About idealvision

Check Also

இறைவனின் படைப்பில் ஒளிவிடும் உயிரினங்கள்-வீடியோ

      Best free WordPress theme

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *