பதிவுகள்
Home / அரசியல் / அயோத்தியில் அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது

அயோத்தியில் அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது

  • 1992 டிசம்பர் துக்ளக் இதழில்.. சோ

அயோத்தியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அவர்களால் குவிக்கப்பட்ட வெறியர்களுமாகச் சேர்ந்து, மசூதியை இடித்துத் தள்ளிவிட்டார்கள். ஆலயத் திருப்பணி என்ற பெயரில், அசல் காட்டுமிராண்டித்தனத்தை நடத்தியிருக்கின்றார்கள்.

‘மசூதிக்கு எவ்விதச் சேதமும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்’ என்று பொது மேடைகளில் பா.ஜ.கவினர் பேசிய பேச்சு காற்றோடு போயிற்று. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு, எழுத்து மூலமாக உத்திரப்பிரதேச பா.ஜ.க அரசு கொடுத்த வாக்குறுதி, மசூதி இடிவதற்கு முன்பாகவே பொடிப் பொடியாகி விட்டது. உ.பி. அரசுக்காக, சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிய பிரபல வக்கீல் மனம் நொந்துபோய், ‘அவமானத்தில் நான் தலை குனிகிறேன்’ என்று கோர்ட்டிலேயே கூறியிருக்கிறார்.

கோவில் மூலம் கிடைக்கக் கூடிய ஓட்டுக்காக, நாட்டிற்கே பாஜக ஒரு பெரும் நாசத்தை விளைவித்து விட்டது. ‘ஆர்.எஸ். எஸ் காரர்கள், கரசேவகர்களைத் தடுக்க முயன்றார்கள் – முடியவில்லை. வி.ஹெச்.பி யினர், பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வேண்டினார்கள் – நடக்கவில்லை. பா.ஜ.கவினர் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர் – அடக்க முடியவில்லை’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லலாம். இதெல்லாம் கால்காசு பெறாத வார்த்தைகள்.

இந்த வெறிக் கூட்டத்தை அங்கே கூட்டும்போது இவர்களுக்கெல்லாம் புத்தி எங்கே போயிற்று? ‘மசூதி இடிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என்று முழங்கி, வெறியைத் தூண்டியபோதெல்லாம், இவர்களுடைய மனிதத் தன்மை என்னவாயிற்று? ‘ நீதிமன்றத்திற்கு இதில் தலையிட தகுதி இல்லை’ என்று சவால் விட்ட போதெல்லாம் இவர்களுடைய பொறுப்பு உணர்வு எங்கே போயிற்று? வெறியைக் கிளப்பத் தெரியும்; வெறியர்களைக் கூட்டமாகச் சேர்க்கத் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு நடக்கும் அட்டூழியத்திற்கு வேறு யாரோ பொறுப்பா? மாய்மாலம் செய்கிறார்கள்.

அங்கு கூடிய வெறியர்கள் ஒருவர் முகத்தைக் கூட அறியாத, அவர்கள் எந்த அளவுக்குத் தூண்டி விடப்பட்டிருக்கின்றார்கள் என்பதை நேரடியாகக் காணாத, என்னைப் போன்ற ஒரு பத்திரிகையாளனுக்கே ‘இவர்கள் மசூதியை இடிக்கும் அபாயம் இருக்கிறது’ என்று முன்கூட்டியே புரிந்து கொள்ள முடிந்தது. (பெட்டி பிரசுரத்தைப் பார்க்கவும்) அப்படியிருக்க, இந்த வெறிக்கூட்டத்தை அங்கு கொண்டு வந்து குவித்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, ஆகிய அமைப்புகளுக்கு இப்படி நடக்கக் கூடும் என்பது தெரியாமற் போய்விட்டதா? தெரிந்துதான் இருந்திருக்கிறது. கண்மூடித்தனமான ஓட்டு வேட்டையில் இறங்கிவிட்டதால், அவர்களுடைய மனதில் பொதுநலன் பற்றி அலட்சியம் வந்துவிட்டது.

அதுமட்டுமல்ல, சம்பவம் நடப்பதற்கு முன்பாக, அங்கு பாஜக தலைவர் அத்வானி ‘மத்திய ரிஸர்வ் படையினர் நெருங்குவதற்கு முயல்வார்கள். அவர்களை வழிமறித்துவிட வேண்டும்’ என்று அங்கு கூடிய வெறியர்களுக்கு உத்திரவு பிறப்பித்ததாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

மதரீதியாகப் பார்த்தால் கூட, கரசேவை வெறியர்களுக்குத் தலைமை தாங்கி நின்ற சூலம் ஏந்திய சாமியார்கள்தான் இந்துமதத் தலைவர்கள் என்றும் நினைத்து விடக்கூடாது. மற்ற மதங்களில் இருப்பதுபோல், இந்து மதத்திற்கு எந்த ஒரு தனிப்பட்ட மதத் தலைவரும் கிடையாது. ஆங்காங்கே பலர் தங்கள் மனதிற்கேற்ப வெவ்வேறு மடங்களையும், சன்னிதானங்களையும், ஆச்சார்யார்களையும், குருமார்களையும் சார்ந்திருப்பார்கள். ஆகையால், அயோத்தி அட்டூழியத்தில் பங்கேற்ற வெறிக் கூட்டத்திடமோ, அதன் தலைவர்களிடமோ, அரசியல் ரீதியாகவும் சரி, மத ரீதியாகவும் சரி, இந்துக்களின் தலைமை அடங்கிவிட வில்லை.

அங்கு நடந்த அட்டூழியம் இந்து மதத்தைச் சார்ந்த சிலரால் செய்யப்பட்டதே தவிர, இந்து மதத்தைச் சார்ந்த பெரும்பான்மையோரும் இதில் மகிழ்வுருவார்கள் என்று நினைத்து, மைனாரிட்டி மக்கள் வருத்தப்பட்டு விடக் கூடாது. பெரும்பான்மையான இந்துக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ராமர் கோவில் வரலாம் என்று அவர்கள் நினைக்கலாமே தவிர, மசூதியை இடித்து அந்த இடத்தில்தான் கோவில் கட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

இந்து சமுதாயமே இந்த மாபெரும் நாச வேலையைச் செய்து விட்டது, என்ற கருத்து மைனாரிட்டி மக்களிடையே ஏற்பட்டால், அது இந்துக்களின் தலைமையை இந்த வெறிக் கூட்டத்திடம் கொண்டு போய்ச் சேர்க்கத்தான் பயன்படும். மெஜாரிட்டி இந்துக்கள் நடந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவார்கள். அதை நிகழ்த்தியவர்களை மனதாற சபிப்பார்கள். சந்தேகமில்லை. அதனால்தான் நடந்து விட்ட கொடுமையை, விதிவிலக்கில்லாமல் நாடே கண்டித்திருக்கிறது. அரசியல் வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு எல்லாக் கட்சிகளும் கண்டித்திருக்கின்றன. இதுதான் இந்த நாட்டின் உண்மையான உணர்வு.

நடந்து விட்ட கோர சம்பவம் முஸ்லிம்களின் மனதில் ஒரு மறையாத வடுவாகத்தான் இருக்கும். புரிகிறது. ஆனால், அதையே அடிப்படையாக வைத்து அவர்கள் இனி வரக்கூடிய அரசியலையும், மற்ற பிரச்னைகளையும் அணுகிவிடக்குடாது. நடந்து விட்ட அராஜகத்திற்குச் சரியான பதிலடி வன்முறைதான், என்று நினைத்து யாரும் தாக்குதல்களிலும், கலகங்களிலும் ஈடுபடக்கூடாது. அவையும் கண்டணத்திற்குரிய செயல்களாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, அப்படிச் செய்தால், அது இந்துக்களிடையே இருக்கும் சிறுபான்மை வெறியர்களின் பலத்தைத்தான் கூட்டி விடும். அது இந்த நாட்டின் அமைதிக்கும், மதச் சார்பின்மைக்கும் நல்லதல்ல. மெஜாரிட்டி மக்கள் நமக்கும், நம்து மதத்திற்கும் எந்தவிதத் தீமையும் நினைக்கவில்லை., என்ற நம்பிக்கையை மைனாரிட்டி மக்கள் பெற வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்கள் பெரும் வகையில் மெஜாரிட்டி மக்களான இந்துக்களும் நடந்து கொள்ள வேண்டும்.

‘அதற்கு முதல்படியாக இடிக்கப்பட்ட மசூதி மீண்டும் முழுமையாகக் கட்டப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் இதையும் கூட அவசரத்திலும், உணர்ச்சிவசத்திலும் செய்தால் உடனடி வன்முறைக்கும், எதிர்கால வழக்குகளுக்கும் சிக்கல்களுக்கும் வழி ஏற்பட்டுவிடக் கூடும். ஆகையினால், இப்பிரச்னையின் எல்லா அம்சங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்று, பிறகு அதை முழுமையாக ஏற்று செயலாற்றுவது நிரந்தரத் தீர்வாக அமையும். இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பது, குலைந்த நமது நாட்டின் கெளரவத்தை நிமிர்த்தும்.

  • சோ

About idealvision

Check Also

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *